கொடிகாமம்-இராமாவில் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 365 குடும்பங்களைச் சேர்ந்த 1080 பேர் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவுக்கு உட்பட்ட 06 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேறுகின்றமைக்காக இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்கள் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு மீள்குடியேற்றம் இடம்பெற உள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இம்மீள்குடியேற்றப் பணிகள் மூன்று நாட்கள் இடம்பெற உள்ளன. அத்துடன் இம்மூன்று நாட்களும் சமைத்த உணவுகள் இக்குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதேவேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன், ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளர் சிறீரங்கேஸ்வரன், வன்னி மக்கள் துயர்துடைப்பு குழுவின் செயலாளர் சதீஸ் ஆகியோர் மீள்குடியேற்றம் இடம்பெற உள்ள இடங்களை நேரில் சென்று இன்று பார்வை இட்டனர். 551 ஆவது படைகளின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுகத் பெரேராவுடன் இம்மீள்குடியேற்றம் தொடர்பாகப் பேசினர்.

http://uyarvu.com/index.php?option=com_content&view=article&id=4715:--365----&catid=43:normal-news&Itemid=18