GTNற்காக ஆனந்தத் தாண்டவன்
[03 September 2010]

தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் அரச கட்டமைப்பில் முதலாளித்துவ சக்திகளுடைய மீளிணைவு காரணமாக இலங்கையின் தொழிலாளர் வர்க்கம் புதிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

இலங்கை அரசாங்கத்தின் மூர்க்கத் தனத்தால் ஐரோப்பிய யூனியனிடமிருந்து கிடைத்து வந்த ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை  அரசாங்கம் இழந்திருக்கிறது. இதன் காரணமாக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் ஆடைத்தொழிற்சாலை முதலாளிகள் தமது தொழிற்சாலைகளுக்கு இடம் பெயர்ந்த மக்கிளிடமிருந்து பெண் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு ஆட் பிடித்து வருகின்றனர்.

ஆடைத் தொழில் மற்றும் சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிற்சங்கத் தலைவர்களிலொருவரான அன்ரன் மார்க்கஸ் சொல்கிறார், தொடர்ந்த பல வருட போரின் காரணமாக இப்பிரதேசங்களின் தொழிலாளர்களுடைய உரிமைகளும் அவர்களுடைய ஊதியம் குறித்த உரிமைகளும் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இந்த நிலைமை ஆடைத் தொழிற்சாலை முதலாளிகளுக்கு தமது தேவைக்கேற்ற விதத்தில் குறைந்த ஊதியத்தில் ஆட்களைப் பிடிக்க வழி கோலியிருக்கிறது.

தற்போது வடக்கு கிழக்கிற்கு இதற்காக விஜயம் செய்திருக்கும் இம் முதலாளிமார் பலர் தொழிலாளர் உரிமைகளையும் தொழிலாளர் சட்டங்களையும் மீறியதாகக்கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களாவர்.

குறைந்த கூலி மற்றும் மிக மோசமான தொழிற்சாலை நிலைமைகள் குடியிருப்பு நிலைமைகள் காரணமாக ஏற்கெனவே பணியாற்றி வந்த தொழிலாளர்கள் ஆடைத் தொழிற்சாலைகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதன்காரணமாக இத்தொழிற்சாலைகள் ஆட் பற்றாக்குறையைப் பெருமளவில் எதிர் நோக்குகின்றன.

இதன்காரணமாக குறைந்த கூலியில் ஆட்பிடிப்பதற்காக தற்போது இவர்கள் போரினால் பெரும் இழப்புக்களையும் இடர்களையும் சந்தித்த வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளை குறிவைத்து தமது வேட்டையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கில் போரின் காரணமாக விவசாயமும் தொழிற்துறைகளும் முடங்கிப் போயுள்ளதால் வேலையின்மை பெருமளவில் நிலவுகின்றது. இதன்காரணமாக எவ்வளவு குறைந்த ஊதியமானாலும் இவ்விளைஞர் யுவதிகள் வேலை செய்ய ஆயத்தமாக இருக்கின்றனர். அதேபோல் வேலை செய்யுமிடத்தின் தொழில்சார் சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாக இருப்பினும் அதனைக் கூட இவர்கள் கணக்கில் எடுக்கத் தயாராக இல்லாத நிலைமையே இங்கு காணப்படுகிறது. இந்த நிலைமைகளை ஆடைத் தொழிற்சாலை முதலாளிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைகின்றனர். இவ்வாறு ஆட்சேர்ப்புக்கு ஆட்படும் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டலுக்கு ஆளாக நேரிடும். இறுதியில் ஒரு நாள் இந்தத் தொழிலாளர்கள் இதற்காக வருந்த வேண்டிய நிலையே ஏற்படும்.

இந்தச் சூழ்நிலை காலனித்துவ காலத்தில் தென்னிந்தியாவில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களாக இருந்த தலித் மக்களை தோட்டத் தொழிலாளர்களாக மலையகத்திற்கு இறக்குமதி செய்த 19ஆம் நூற்றாண்டின் நிலைமையை ஞாபகத்திற்குக் கொண்டு வருகிறது.

காலனித்துவ காலக் கம்பனிகளால் தேயிலைத் தோட்டத்துறைக்காக அக்கம்பனிகள் உள்ளூர் சிங்களக் கிராமவாசிகளின் நிலத்தைப் பிடுங்கி எடுத்தனர். இதனால் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மேல் ஏற்பட்ட அதிருப்தியும் கோபமும் இலங்கை சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளின் பின்னரும் இன்னமும் கனன்று கொண்டிருப்பது தான் யதார்த்தம்.

அதிருப்தியுற்ற சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த சிங்கள ஆட்சியாளர்கள் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்தார்கள். அத்தோடு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அவர்களுடைய விருப்புக்கு மாற்றாக தமிழ்நாட்டுக்குத் திருப்பி அனுப்பினார்கள்.

அவ்வாறு இலங்கைக்குத் தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டு வரப்பட்ட இந்திய மக்கள் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது அவர்களை எட்ட முடியாதளவுக்கு மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.

இது தவிர போரின்பின்  இலங்கை அரசாங்கத்தால் கட்டுப்பாட்டக்குள் கொண்டு வரப்பட்ட வடக்கு கிழக்கின் தொழிலாளர்களின் வருகையால் தொழிலாளர் சந்தையில் தொழிலாளர்களின் நிரம்பல் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் அவர்களுக்கான கேள்வி குறைவடைகிறது.

சிறுபான்மை மக்களிடமிருந்து வரும் இந்தத் தொழிலாளர்கள் காரணமாக நெல் விiவிக்கும் மாவட்டங்களில் ஒன்றான பொலநறுவையில் ஏற்கெனவே இருந்த சிங்களத் தொழிலாளர்களின்  கூலி குறைவடைந்துள்ளது. இவ்வாறான தொழிலாளர் போட்டி  இன்னொரு இனக்குரோதத்திற்கு வழி சமைத்திருக்கிறது. இவ்வாறான நிலைமைகளால் இந்தியாவின் சில மாநிலங்களில் தொழிலாளர்களிடையே இனரீதியான மோதல்கள் பல அ ண்மைக்காலங்களில் நடைபெற்றிருக்கின்றன.

இது தவிர வடக்கு கிழக்கின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடும் தென்னிலங்கை நிறுவனங்கள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சுய காரணங்களால் தமது பணிகளுக்கு தென்னிலங்கையிலிருந்து சிங்களத் தொழிலாளர்களையே அழைத்துச் செல்கின்றன.

வடக்கு கிழக்கின் அபிவிருத்தி, மீள்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு புனர்நிர்மாணப் பணிகளில் தொழிலற்று இருக்கும் தமக்கு தொழி;ல் வழங்கும்படி அங்குள்ள இளைஞர் யுவதிகள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் இவ்வாறு தென்னிலங்கையிலிருந்து அங்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்வதென்பது  தென்னிலங்கைச்சிங்களத் தொழிலாளர்களுக்கு தொழில் வழங்குவதென்பது வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளிடையே அதிருப்தியையும் கோபத்தையும் வளர்த்து விடும். இதுவும் தொழிலாளர்களிடையே  இனரீதியான மோதலுக்கு வழிவகுக்கும்.

இதேவேளை வடக்கின் இடம் பெயர்ந்தோருக்கான வீடமைப்புக்கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தவென் இந்தியாவிலிருந்து இருபதாயிரம் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுவர் என்று வெளியான செய்தி வடக்கு கிழக்கு தொழிலாளர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலைமைகள் எல்லாம் தொழிற்சந்தையில் தொழிலாளர்களிடையே மேலும் இனரீதியான பகையும் மோதலும் இடம் பெறும் நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

தொழிலாளர் உரிமைகள் பற்றியோ தொழிலாளர்களுடைய மிகக்குறைந்த ஊதியம் பற்றியோ அல்லது தொழிலாளர்களிடையே மூண்டு வரும் இப்புதிய பகைமை பற்றியோ எதுவித அக்கறையையும் அரசாங்கம் கண்டு கொள்வதாயில்லை.

அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா தென்னிலங்கையில் பணியாற்றும் தொழிலாளர்களுடைய பாதுகாப்பக்கு தானே பொறுப்பு என்று அவர் விடுத்த அண்மைய அறிக்கை தொழிலாளர் நலன்களைவிட முதலாளிகளதும் அரசாங்கத்தினதும் நலன்களே முக்கியமானவை என கொண்டுள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டிருக்கும் இப்புதிய சவாலை எவ்வாறு எதிர்கொள்வது? யார் இது பற்றிச் சிந்திப்பது? இன்னொரு இனமுறுகலை இன மோதலை எவ்வாறு தவிர்ப்பது?

யாராவது சிந்திப்பார்களா?

ஆனந்தத் தாண்டவன் லங்கா பொலிற்றி உதவியுடன்.

2ஆம் இணைப்பு படங்களுடன்‐ கிளிநொச்சியில் பதட்டம்‐ வேலைவாய்ப்பு என்ற போர்வையில்இளம் பெண்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு‐ GTNசெய்தியாளர்‐
15 August 10 03:16 am (BST)

கிளிநொச்சியில் இன்று பதட்டம் ஏற்பட்டதாக ஜீரீஎன்னின் விசேட செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளார். பென்குயின் என தன்னை அறிமுகப்படுத்திய தனியார் நிறுவனம் ஒன்று வேலைவாய்ப்பு கொடுப்பதாகக் கூறி 20ற்கு மேற்பட்ட இளம் யுவதிகளை பேருந்தில் ஏற்றிச் செல்ல முற்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிகூடிய சம்பளம் தங்குமிட வசதி, இலவச மருத்துவ வசதி போன்ற மக்களை கவர்ந்திழுக்கக்கூடிய வாக்குறுதிகள் அடங்கிய வசனங்களை அச்சிட்டு வழங்கியிருந்த இந்தப் பென்குயின் என்ற போலி தனியார் நிறுவனம் இளம் பெண்களை கூவி அழைத்து பஸ்சில் ஏற்றிச் செல்ல முற்பட்ட வேளை அதன் போலித் தன்மையைப் புரிந்து கொண்ட சிலரின் சமயோசித புத்தியால் இந்தப் பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.(pjotos are on the website)

www.globaltamilnews.com