"என்னைப் படிக்க வையுங்கள். எனது அண்ணாமாரை கண்டு பிடித்து தாருங்கள்." இப்படி உருக்கமாக இறைஞ்சுகின்றார் கிளிநொச்சி மாவட்டத்தின் புதுமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த சுகிர்தா ஸ்ரீஸ்கந்தராஜா என்கிற சிறுமி. வயது 14.

    தற்போது தரம் 10 இல் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் படிக்கின்றார். கடந்த வருடம் யுத்த இடப் பெயர்வின்போது காணமல் போன அண்ணன்மார். வயதான அப்பா.

    அப்பாவுக்கு வேலை இல்லை. மன ரீதியாகவும் குழம்பிப் போயுள்ள பெற்றோர். இத்தனை இன்னல்கள் இவரைச் சுற்றி நிற்க ஆட்டோவில்தான் பள்ளிக்கு சென்று வருகின்றார் இச்சிறுமி. மாதம் 1000 ரூபா வரை இப்போக்குவரத்துச் செலவு.

    வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி பிள்ளையை ஆட்டோவில்தான் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற நிலை பெற்றோருக்கு. அரசின் உதவியும் இல்லை. அரச சார்பற்ற நிறுவனங்களின் மனிதாபிமானமும் இல்லை.வெளிநாட்டு நிதியும் இல்லை.

    அப்படியாயின் இந்த பிஞ்சு ஏன் பாடசாலைக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும்?. அவருடைய கால்கள் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது எறிகணைத் தாக்குதலில் சிக்கி விட்டன. ஒரு கால் முழங்காலுடன் துண்டாடப்பட்டு விட்டது. மற்றக் காலிலும் பாதிப்பு. ஆனால் கல்வி கற்று பெரிய நிலைக்கு வருவேன் என்கிற சபதத்தில் அச்சிறுமி.

    பிச்சை புகினும் கற்கை நன்றே என்கிற பழமொழியை உணர்ந்து பிள்ளையை எப்பாடு பட்டும் படிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் பெற்றோர். ஆனாலும் சிறுமியும் சபதமும், பெற்றோரின் வைராக்கியமும் எவ்வளவு காலத்துக்குத்தான் நீடிக்க முடியும் என்கிற சந்தேகத்தைப் பெரிதாகக் காட்டுகிறது அக்குடிசையில் குடியிருக்கும் வறுமையின் வெறுமை.

    பெற்றோருக்குப் பின் இச்சிறுமியை எவர்தான் ஆதரிக்கப் போகின்றார்கள் என்பதும் பதில் இல்லாத கேள்விதான்.

    கூடப் பிறந்த அண்ணன்மார் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டால் என்றென்றைக்கும் காப்பாற்றுவார்கள் தானே? என்றால் அவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் கடந்த 15 மாத காலமாக இல்லை.பாவம் காத்திருப்புக்களும் கனவுகளும்தான் இக்குடும்பத்தில் தொடர்கின்றன.

    ஆடம்பர செலவுகளில் ஒரு பகுதியை ஈழ உறவுகளுக்கு கொடுத்து விடுங்கள், புலம்பெயர் தமிழருக்கு கோரிக்கை!

    புலம்பெயர் தமிழர்களே சிந்தித்துப் பாருங்கள் என்கிற தலையங்கத்தில் பிரித்தானியாவில் கல்வி பயின்று வரும் ஈழத் தமிழ் இளைஞன் ஒருவர் தமிழ்.சி.என்.என் இற்கு அனுப்பி வைத்திருக்கும் வாசகர் திருமுகம் ஒன்றை காலத்தின் முக்கியத்துவம் கருதி பிரசுரம் செய்கின்றோம்.

    ”என்னை படிக்க வையுங்கள், அண்ணாமாரை கண்டுபிடியுங்கள்! வன்னிப் போரில் காலை இழந்த சிறுமி உருக்கம்” என்கிற தலையங்கத்தில் பிரசுரமான செய்தியைப் படித்துவிட்டு அவருடைய மன ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்துள்ளார் எஸ்.கனிமாறன்.

    அவர் கொட்டித் தீர்த்த விடயங்கள் வருமாறு:-

    ”புலம்பெயர் தமிழர்களே சிந்தித்துப் பாருங்கள். இந்தச் சிறுமியைப் போலவே எமது வடக்கு, கிழக்கு மாகாணமும் ஊனம் அடைந்து முடமாகி விட்டது. இச்சிறுமியைப் போலவே எமது நாட்டில் நம் உறவுகள் இடம்பெற்று முடிந்த யுத்தத்தால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். உறவுகளை இழந்தார்கள். உடைமைகளை இழந்தார்கள். உறுப்புக்களை இழந்தார்கள். உயிர் இருந்தும் சடலமாக ஏதோ வாழ்கின்றார்கள்.

    இடம்பெயர்வு, அகதிமுகாம், இடைத்தங்கல் முகாம், மீள்குடியேற்றம் என்று ஒவ்வோர் படிமுறையில் அன்றாட, அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் அந்தரிப்புக்கள் தொடர்கின்றன. அரசினாலும் சரி, அரச சார்பற்ற நிறுவனங்களாலும் சரி மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறப்படும் உதவிகள் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களை சரியான முறைகளில் சென்றடைகின்றனவா? அம்மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா? என்பது நியாயமான சந்தேகமே.

    இந்நிலையில் புலம்பெயர் தமிழர்களுக்கு தார்மீக கடமையும், வரலாற்றுப் பொறுப்பும் உண்டு. பாதிக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே அப்பாரிய கடமையும் பொறுப்பும்.

    புலம்பெயர் தமிழர்கள் Pocket Money என்று செலவு செய்கின்ற பணமும் சரி, ஆடம்பரத்துக்காகவும், பவுசுக்காகவும் வீண் விரயம் செய்கின்ற பணமாயினும் சரி, கோவில் திருவிழாக்களின்போது புதுவேட்டி, சட்டையென ஒரு நாள்- இரு நாள் கூத்துக்கென செலவழிக்கின்ற பணமாயினும் சரி எமது ஈழ உறவுகளின் வாழ்வாதாரத்துக்கு உதவட்டுமே.

    நாட்டுக்கு வருகின்ற அன்பர்கள் நட்சதிர-உல்லாச ஹோட்டல்களில் விருந்துண்டு மகிழ பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்கின்றார்கள்.டூர், பீச், நைட் கிளப், டிரிங்ஸ் பார்ட்டி என்று அள்ளி இறைக்கின்றார்கள்.

    ஈழத் தமிழ் அகதிகளின் கண்ணீரைத் துடைக்க இப்பணத்தை செலவு செய்தால் எத்தனையோ கோடி புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும். யாழ்ப்பாணத்துக்கு வந்து நல்லூர் முருகன் கோவிலை தரிசிக்கின்றோம். அது வேறு விடயம்.

    ஆனால் கோவில் வீதியில் எத்தனை ஆடம்பர, அநாவசிய செலவுகள்? கசூரினா கடற்கரையில் விலை கொடுத்து வாங்கும் கலாசார சீரழிவுகள். இவை எல்லாம் தேவைதானா? சிந்தியுங்கள். செயற்படுங்கள்.

    எமது உறவுகளுக்காக உங்கள் ஆடம்பர- அநாவசிய செலவில் ஒரு துளியை மிகுதிப்படுத்தி ஈழத் தமிழ் உறவுகளுக்கு உதவ முன் வாருங்கள். அப்போது கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.”

    Click for full report including video and images

    http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9437:2010-08-31-20-55-15&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413