நேபாள மாவோயிஸ்டுகளைவிட பன்மடங்கு வலிமையான நீண்ட போராட்ட அனுபவம் வாய்ந்த தரைப்படை, கடற்படை, வான்படை என வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு மாபெரும் விடுதலை இயக்கம், உலகில் தன்னிகரில்லா போர் உத்திக்காரர் என்று சிங்களத் தளபதி ஒருவரால் போற்றப்பட்ட தலைவரால் வழி நடத்தப்பட்ட இயக்கம் எப்படித் தோற்றது? உள்நாட்டு எதிரியை தனிமைப்படுத்துவது, வெளிநாட்டு எதிரியை தனிமைப்படுத்துவது என்ற உத்தியில் ஈழத்தின் அனுபவம் என்ன?
உள்நாட்டைப் பொறுத்தவரை சந்திரிகா ஆட்சி காலத்தில் 2002-2004 வரையிலான அமைதிப் பேச்சுவார்த்தை காலம் முன்னெப்போதும் இல்லாத அளவில் விடுதலைப்புலிகளுக்கு அரசியல் களத்தை திறந்துவிட்ட காலம். சனாதிபதியாக இருந்த சந்திரிகாவும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் எதிரெதிராக முரண்பட்டிருந்த காலம். அமைதிப் பேச்சின் மூலம் தீர்வு என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவு - எதிர்ப்பு என்ற அடிப்படையில் சிங்கள அரசியல் கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டிருந்த காலம். அமைதி பேச்சுவார்த்தை என்பதும் அரசியல் யுத்தம் என்கிற வகையில் மோதிக் கொள்ளும் இருவரில் யார், யாரை தனிமைப்படுத்தி நம்மை பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் எதிர்கால வெற்றி அமையும்.
ரணில் ஒரு புறம் “இலங்கையில் அமைதியை ஏற்படுத்தி விட்டேன்; பொருளாதாரத்தை சீரமைக்கப் போகிறேன் உதவுங்கள்” என்று கூறி பல மில்லியன் டாலர்களையும் நெருக்கத்தையும் மேற்குலகிடமிருந்து சம்பாதித்துக் கொண்டார். இராணுவத்தை பலப்படுத்தினார். மறுபுறம் புலித்தலைவர்களிடையிலான முரண்பாட்டை பயன்படுத்தி கருணாவை வைத்து புலிகளின் கிழக்கு மாகாண பலத்தை வீழ்த்தினார். பேச்சுவார்த்தையை அதிபர் சந்திரிகா முடிவுக்கு கொண்டு வந்தபோது தோல்வியுள்ள ரணில், சிங்கள அரசுக்கு பல வெற்றிகரமான அடித்தளங்களை விட்டுச் சென்றிருந்தார். ரணில் அரசு வடகிழக்கில் சுய அதிகாரமுடைய இடைக்கால நிர்வாகம் என்ற புலிகளின் கோரிக்கையை இறுதிவரை கொள்கை அளவில் கூட அங்கீகரிக்கவில்லை.
ரணிலால் தாங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த புலிகள் மற்றுமோர் அரசியல் தவற்றைச் செய்தனர். தமிழரோடு நடந்த குறைந்தபட்ச சமாதான முயற்சிகளையும் எதிர்த்து நின்ற ராசபக்சே, ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய என்ற இனவெறிக் கூட்டணி வெற்றிபெறும் வகையில் தேர்தலை புறக்கணித்து ரணிலைத் தோற்கடித்தனர். மொத்தத்தில் சமாதானகாலம் சர்வதேச அளவிலும் உள்நாட்டு அளவிலும் விடுதலைப்புலிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியது. தான் போட்ட அடித்தளத்தில் நின்று தான் ராசபக்சே வெற்றி பெற்றார் என்ற ரணிலின் கூற்று கவனிக்கத்தக்கது.
ராசபக்சே பதவி ஏற்ற 7ம் நாள் தனது வெளியுறவு அமைச்சரை இந்தியாவிற்கு அனுப்பி உறவை பலப்படுத்தினார். இந்திய-சீன முரண்பாட்டை புரிந்து கொண்ட ராசபக்சே ஏற்கனவே சந்திரிகாவின் காலத்தில் சீனாவுடன் இருந்த உறவை பலப்படுத்தி நெருக்கமடைந்தார். அதைக் காட்டியே இந்தியாவிடம் இலங்கைக்கு உதவுவதில் இருந்த துளியளவு தயக்கத்தையும் துடைத்தழித்து போர்க்களத்திற்கே இழுத்து வந்தார். தவிர பாகிஸ்தான், இசுரேல் மற்றும் பல சர்வதேச நாடுகளையும் அணி சேர்த்துக் கொண்டார். இது சர்வதேச அரங்கில் புலிகளுக்கு மிகப் பாதகமாக அமைந்தது.
இந்திய அமைதிப்படையின் நேரடியான ஆக்கிரமிப்பும் அமைதிப் படையின் ஜெனரலாக இருந்து சதீஷ் நம்பியார் சந்திரிகா காலந்தொட்டு இலங்கை இராணுவ ஆலோசகராக இருந்து வருவதும் யாழ்ப்பாணத்தை புலிகள் முற்றுகைவிட்டபோது இந்தியா “போர்க் கப்பலை அனுப்பத் தயார்” எனச் சொன்னதும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இலங்கையுடன் போட்டுள்ளதும் 15 ஆண்டுகளுக்கு மேல் புலிகளை தடை செய்து வைத்திருப்பதும் ஆணித்தரமாக ஒன்றைப் பறைசாற்றி வந்தது. அது இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்க ஒன்றுமில்லை என்பதைத்தான்.
ராசபக்சே ஹிட்லர் பாணி இன அழிப்பை தொடங்கியபோது புலிகளின் தலைமை உள்நாட்டு நிலைமையில் இருந்து போர் உத்தியை வகுக்காமல் அயல்நாடுகளின் தலையீடுகளை எதிர்பார்த்து போர் உத்தியை வகுத்தது. ஈழத்தின் ஆயுதப் போராட்டமும் துவக்கம் முதற்கொண்டு அதன் அச்சாக விளங்கிய கெரில்லாப் போர் முறையை பயன்படுத்தி செயல் உத்தி ரீதியான வலிந்த தாக்குதலை (Tactical offensive) மேற்கொண்டு தம்மை தற்காத்துக் கொள்ளவில்லை.
மாறாக இந்திய பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்தால் சாதகமான தலையீடு நடக்கும்; அமெரிக்கா தலையிடும் என்றெல்லாம் நம்பி முழுத்தற்காப்பு போர் உத்தியை வகுத்தது என்பது எதிரிக்கு சாதகமாகிப் போனது. ராசபக்சே, தான் பிரபாகரனாக இருந்தால் கெரில்லா போர் உத்தியை பயன்படுத்தி இருப்பேன் என்று பகடி செய்ததில் வெற்றித் திமிரும் விசயத்தில் உண்மையும் இருந்தது. எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனது சொந்த நிலைமைகளின் பலாபலன்களின் அடிப்படையில் திட்டமிட வேண்டுமே ஒழிய புற ஆதரவை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடக் கூடாது. அது தோல்வியை தரும். வடக்கில் புலிகளால் அமைக்கப்பட்ட மிகச்சிறந்த நிர்வாக கட்டமைப்புகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதை பாதுகாக்க அவர்கள் தலையிடுவார்கள் என்று புலிகளின் தலைமை மிகைமதிப்பீடு செய்தது. அது முதலாளித்துவ அரசுகள் மீதான குட்டி முதலாளிய நல்லெண்ண மதிப்பீட்டின் ஈடுசெய்ய முடியாத தவறாக அமைந்துவிட்டது.
புலிகள் தம்மளவில் சிங்கள ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள் ஆகியோரோடு வலுவாக ஒன்றுபட்டு சிங்கள ஆளும் வர்க்கத்திற்குள் சந்தர்ப்பவாதமாக ஜனநாயகம் பேசும் பிரிவுக்கும் சிங்கள பேரினவாத பிரிவுக்கும் இடையிலான முரண்பாட்டை தீவிரப்படுத்தி, பிளவுபடுத்தி பேரினவாதிகளை தனிமைப்படுத்த அரசியல் தந்திரத்தை தொடக்கத்திலிருந்து மேற்கொள்ளவில்லை. முஸ்லிம் தமிழர்களை எவ்வித பண்பாட்டு தொடர்போ உறவோ இல்லாத சிங்கள தரப்பிற்கு தள்ளியது புலிகளின் கடும் தவறாகும். சுமார் 70 ஆயிரம் முஸ்லிம் தமிழர்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற சொன்ன பிறகு புலிகளின் மாவீரர் பட்டியலில் முஸ்லிம்கள் இடம் பெறவில்லை. மத அடிப்படைவாத குழுக்கள் தோன்றுவதற்கும் அதுவே அடிப்படையானது.
மலையகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கை ஈழப் போராட்டத்தின் பகுதியாக இல்லை. சமாதான காலத்தில்கூட இதற்கான கொள்கை ரீதியான அணுகுமுறையோ முயற்சியோ இல்லை. போராளி இயக்கத் தலைவர்களின் அரசியல் துரோகங்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தும் அணுகுமுறையைவிட அவ்வியக்கங்களை அழித்தொழிக்கும் முறையையே இறுதி வரை கடைப்பிடித்து வந்தது. இதில் அவ்வியக்கங்களின் செயல் வீரர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். இது தமிழர் ஒற்றுமையை குலைத்து போராட்ட வலிமையை குறைத்தது. மொத்தத்தில் புலிகள் ஐக்கிய முன்னணி தந்திரத்தை தொடக்கத்திலிருந்தே கோட்பாட்டுப் புரிதலிலிருந்து அணுகவில்லை. நடைமுறை ரீதியாகக் கூட பயன்பாட்டுவாத அணுகுமுறையில் சில நேரங்களில் ஐக்கியத்தை கடைபிடித்திருந்தாலும் அடிப்படையில் மாற்றம் இல்லை.
விடுதலைப்புலிகளின் வீரம் செரிந்த மகத்தான போராட்டம் ஆரம்பம் முதலே சில அடிப்படையான அரசியல் மற்றும் அமைப்புரீதியான பலவீனங்களைக் கொண்டிருந்தது. தொடக்கத்திலிருந்தே நிலக்கிழாரிய பிளவுவாத மோதலில் சிக்கிக் கொண்டமை, அமைத்துறையில் சனநாயகக் கட்டமைப்பு இல்லாமை, அரசியல் பலவீனம், இராணுவவாதம், எல்லாவற்றிற்கும் மேலாக அரசு, ஏகாதிபத்தியங்கள் குறித்த தெளிவான பாட்டாளி வர்க்க நிலைப்பாடு இல்லாமை, அரசுகளின் முதலாளித்துவ காரியவாத காய்நகர்த்தல்களுக்கு எதிராக பலவீனமான குட்டி முதலாளிய காரியவாத அணுகுமுறையை கைக்கொண்டமை ஆகியனவாகும். முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான குட்டி முதலாளிய பார்வை உண்மையில் ஊசலாட்டமான தெளிவற்ற நிலைப்பாட்டையே எடுக்க நிர்ப்பந்திக்கிறது. அதுதான் இந்திய அரசின் விரிவாதிக்கபண்பை அதன் ஆளும் வர்க்க நலனை அறுதியிட்டு எல்லைக் கோடை வரையறுத்து அணுகாமல் இந்திய நாடாளுமன்ற தேர்தல் மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருந்த தவறின் நிலைக்களன். அதுதான் அமெரிக்க-இந்திய கூட்டணியின் ஏகபோக நலனை அறியாமல் ஒபாமாவின் மாறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்த்தமைக்கும் நிலைக்களன் ஆகும்.
விடுதலைப்புலிகளின் அன்னியோன்யமான தமிழக ஆதரவு தலைமைகளில் அனைவரும் இந்திய அரசு குறித்த முதலாளித்துவ தப்பெண்ணங்களிலும் நல்ல எண்ணங்களிலும் மூழ்கி கிடப்பவர்கள். அவர்களின் பயன்பாட்டு வரம்பை தீர்மானிக்காமல் அவர்களையே மலைபோல் நம்பினர். இவையெல்லாம் வீரம்செரிந்த விடுதலைப்படை தோற்றதன் அரசியல் பலவீனங்கள் என்பதே நமது மதிப்பீடு.
இந்த ஒப்பீட்டு படிப்பினை என்பது கம்யூனிச இயக்கங்கள் எல்லாம் சரி; மற்ற விடுதலை இயக்கங்கள் அனைத்தும் தவறு என்று நிறுவ முயலும் முயற்சியும் அல்ல. இது பகுதிகளிலும் வேறுபட்ட சூழ்நிலையை பொருட்படுத்தாமல் நமது எதிர்பார்ப்பை சுமத்தும் முயற்சியும் அல்ல. அடிப்படையில் எதிரிகளையும் நண்பர்களையும் சரியாக வரையறுத்து தெளிவான அரசியல் யுத்தத்தை தொடுக்காத எந்தவகை இயக்கமும் தோல்வியை தழுவும் என்ற படிப்பினையையும் அதற்கு உதவும் அனைத்து கோட்பாடுகளையும் உள்வாங்கிச் செயல்படுதல் வெற்றிக்கு உதவும் என்ற படிப்பினையையும் பெறுவதே இதன் நோக்கம். அதிலும் அரசை எதிர்த்த எந்த ஒரு விடுதலை இயக்கமும் அரசு ஒழிப்புக் கோட்பாடான மார்க்சிய கோட்பாட்டை புறந்தள்ளுவதும் மிகப்பெரிய பலவீனமாகும். மார்க்சிய கோட்பாடு என்பது வேறு; மார்க்சியத்தின் பெயரால் மகுடி வித்தை காட்டுவோர் என்போர் வேறு என்ற தெளிவு இருந்தால் நலம்.
இப்பின்னணியில் இந்தியப் போக்கு ஒன்றைப் பரிசீலிப்போம். இந்தியாவில் குறிப்பிடத்தக்க சக்தியாக கருதப்படும் மாவோயிஸ்ட் கட்சி “ஆயுதப் போராட்டம் நடத்தும் இயக்கங்களோடு மட்டுமே ஐக்கிய முன்னணி அமைப்போம்” என்று பிரகடனப்படுத்தி உள்ளது. சனநாயகப் புரட்சி என்பது பாட்டாளிகள், உழவர்கள், சிறுமுதலாளிகள், தேசிய முதலாளிகள் ஆகிய வர்க்கங்களின் கூட்டுப் புரட்சி என்று கூறும் இக்கட்சி ஆயுதப் போராட்டத்தை ஐக்கிய முன்னணிக்கு நிபந்தனையாக்குவதன் மூலம் இந்திய அளவிலான எதார்த்தத்தை முற்றிலுமாக புறந்தள்ளுகிறது.
உண்மையில் ஐக்கிய முன்னணிக் கொள்கை என்பது ஏகாதிபத்திய - நிலஉடைமை எதிர்ப்பில் உடன்படும் மேற்கூறிய வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் அனைத்தையும் ஒன்றுபடுத்துவதாகவே இருக்க முடியும். மாவோயிஸ்ட் கட்சியோ ஆயுதப் போராட்டத்தை நிபந்தனையாக்குகிறது. பிறகு வடகிழக்கு மற்றும் காஷ்மீரின் ஆயுதப் போராட்ட அமைப்புகளை தவிர்த்து ஒன்றுபட அதற்கு வேறு இயக்கங்கள் இல்லை. உண்மையில் இவை தவிர்த்த இந்தியப் பகுதியே மிகப்பெரும் பொருண்மையைக் கொண்டது. இது அப்பட்டமான குறுங்குழுவாத கொள்கையாகும். ஆயுதம் தாங்கிய புரட்சியானது ஆயுதம் தாங்கிய எதிர் புரட்சியை தொடக்கத்திலிருந்தே எதிர்கொள்கிறது என்று சீன நிலமையில் இருந்து மாவோ வரையறுத்த ஐக்கிய முன்னணி உத்தியை அப்படியே நகல் எடுப்பதன் விளைவு இது.
ஆயுதமே தன்னியல்பில் புரட்சிகரமானது இல்லை. நிறுவனமயமான அரசுக்கெதிராக பாட்டாளி மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அவர்களின் எண்ணிக்கை பலம் மட்டுமே என்ற மார்க்சின் கூற்றுக்கும் மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட வடிவ வழிபாட்டுக்கும் எந்த உறவும் இல்லை. ஒட்டுமொத்த மக்களையும் கிளர்ந்தெழ வைக்காமல் நிலவுகிற அமைப்பை மாற்றி அமைப்பது சாத்தியமில்லை. நேபாளமும் ஈழமும் நம் கண் திறக்கட்டும்.