[ வலம்புரி ] - [ Jul 28, 2010 04:00 GMT ]
வன்னியில் நடந்த யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றம் ஆமை வேகத்தில் நடந்தேறுகின்றது. வன்னியில் மீள்குடியேற்றம் என்பது சொந்த காணியில் குடியமர்த்துதல் என்று பொருள் கொள்வது தவறு. படையினர் விரும்புகின்ற-அவர்கள் சிபார்சு செய்கின்ற இடங்களில் கொட்டில் அமைத்து பக லில் வெயில் இரவில் நுளம்புத் தொல்லை என்ற வதைக்குள் வாழ்வது தான் மீள்குடியமர்வு என வகை கூறும் அளவுக்கு நிலைமை உள்ளது. இது தொடர்பில் எவரும் எதுவும் செய்ய முடியா தென்பதில் உண்மைகள் இருக்கவே செய்கின்றன. இருந்தும் நாடாளுமன்றத்தில் இது பற்றி தாராளமாக பிரஸ்தாபிக்கலாம். ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்படும் நேரத்தை செலவிட எங்கள் எம்.பிக்களிடம் நேர ஒழுங்கமைப்பு போதாமல் உள்ளது.
தங்களின் வண்டவாளங்களை கொட்டித் தள்ளி சிங்கள மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிரிப்புக்குரியவர்களாக இருப்பதுதான் இவர்களின் தற்போதைய வகிபங்காகும். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் எழுந்து பேசுகிறார் எனில், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர வேண்டும்.
மறுத்துக்கருத்துரை வழங்க முடியாமல் திணற வேண்டும். இப்படித்தான் எங்கள் முன்னைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படியானவர்கள் கிடையாது.
தமிழ் எம்.பிக்கள் ஆளுமை நிறைந்தவர்களாக தமிழ் மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக இருந்திருந்தால், கைதடி சரவணை தர்சிகா குடும்பம் இத்துணை துன்பப்பட்டிருக்க வேண்டி வந்திராது.அட! ஒரு ஆறுதலுக்கேனும் அறிக்கை எழுத மறந்து போன எங்கள் எம்.பிக்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு கூப்பிய கரத்துடன் வருவார்கள்.
இவர்களுக்குப் பாடம் புகட்ட தமிழ் மக்கள் துணியாதவரை எங்கள் எதிர்காலம் இருள் மயமானதாக இருக்கும். இது பற்றி இவ்விடத்தில் அடிக்கடி கூறிவருகின்றோம்.எதுவாயினும் வன்னி நிலைப்பரப்பின் பெரும் பகுதியை அரசு தனது உடைமையாக்கிக்கொள்ளும் அபாயத்தை தடுக்க, நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.
இது விடயத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரிசனை கொள்ள வேண்டும். நடக்குமா? அல்லது இம்மியும் சிரிக்காத கலைஞர் கருணாநிதியுடன் சிரித்துக் கொண்டு புகைப்படம் எடுக்கும் அறியாமைத்தனம் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=6041