கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் - 20 July 10 01:35 am (BST)

தென்னாசியப் பிராந்தியத்தில் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு அகதிகமதிகம் உள்நாட்டு நெருக்கடிகளால் சிதிலமடைந்த நாடுகள் இலங்கையும் பாகிஸ்தானுமே. (காரணங்கள், தன்மைகள் எதுவாயினும் இந்த இரண்டு நாடுகளிலும் இந்தியப் படைகள் போர் புரிந்திருக்கின்றன என்ற விசித்திரமான ஒற்றுமையும் உண்டு. இரண்டு நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் வேறு வேறு என்றபோதும் அடிப்படையில் சில ஒத்த பண்புகளும் இந்த நாடுகளுக்கிடையில் இருக்கின்றன. அதாவது, ஆட்சியதிகாரத்தில் படைத்துறையின் செல்வாக்கு பாகிஸ்தானில் ஏற்கனவே வந்து விட்டது. இலங்கையில் இப்போது அத்ததைகய நிலை உருவாகி வருகிறது).

இந்த நாடுகளின் உள்நாட்டு நெருக்கடிகளில் இந்தியாவின் கை, வெளிச்சக்திகளின் தலையீடுகள், கைநீட்டல்கள் தாராளமாக உண்டு. ந்தியப் பிராந்தியத்தில் இந்தியாவுக்குச் சார்பில்லாத எந்த நாடும் அமைதியாக இருக்கமுடியாது என்று ஒரு சந்தர்ப்பத்தில் இந்திரா காந்தி சொன்னதை இங்கே நாம் நினைவிற் கொள்ள வேண்டும். எனவே இந்தியாவின் நலனே இங்கே முக்கியமாகிறது. அந்த அடிப்படையில்தான் இந்தியப் பிராந்தியம் வடிவமைக்கப்படுவதற்கு முயற்சிக்கப்படுகிறது. அமெரிக்கக் கண்டத்தில் தன்னுடைய நலனை முதன்மைப்படுத்தி லத்தின் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா ஆதிக்கம் செய்ய முனைந்ததை இங்கே நாம் இந்தியாவின் நோக்கோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஆகவே, பிராந்திய ஆதிக்கம் என்பது வல்லரசுக் கனவோடு செயற்படும் நாடுகளுக்கு ஒரு அடிப்படைத் தேவை. பிராந்திய வல்லாதிக்கக் கனவோடெழுந்த அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காக லத்தின் அமெரிக்க நாடுகள் கடந்த நூற்றாண்டில் மேற்கொண்ட போராட்டங்கள்தான் அந்த நாடுகளை ஓரளவுக்காவது காப்பாற்றின. இதற்கு அந்த நாடுகளில் உருவாகிய போராட்டங்களும் அந்தப் போராட்டங்களை வழிநடத்திய தலைவர்களும் இந்தப் போராட்டங்களை ஆதரித்த ஆளுமைகளும் முக்கியமானவையாகும். இந்தவகையில் சே குவேரா, பாவ்லோ நெருடா, பிடல் காஸ்ரோவிலிருந்து பல நூற்றுக் கணக்கான ஆளுமைகளைச் சொல்லலாம். பிரக்ஞைபூர்வமான அந்தப் போராட்டங்கள் தந்த அரசியல், கலை, இலக்கிய சேகரங்கள் இதை எமக்கு நன்றாகப் புலப்படுத்துகின்றன. ஒரு காலத்தில் லத்தின் அமெரிக்காவில் வீசிய புரட்சிப் புயல், அங்கே உருவாகிய போராட்ட அலைகள் உலகத்தையே தம் பக்கம் திருப்பி

வைத்திருந்தன. அந்த அளவுக்கு அவை வலுவானவையாக இருந்தன.

ஆனால், துரதிருஸ்ரவசமாக இந்தியப்பிராந்தியத்தின் போராட்டங்கள் அத்தகைய ஒரு நிலையை உருவாக்கத்தவறி விட்டன. இந்தியப் பிராந்தியத்தில், இந்தியாவிற்குள்ளும் இந்தியாவுக்கு வெளியேயும் போராட்டங்கள் நடந்தன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவற்றை இந்தியா சிதறிடித்து விட்டது. அல்லது தன்வசப்படுத்தி விட்டது. அத்துடன் இவ்வாறான போராட்டங்களுக்கு அப்பாலான நாடுகளை ‐ இந்தியப் பிராந்தியத்துக்கு அப்பால் நகரும் நாடுகளை ‐ இந்தியா உள்நெருக்கடிகளால் சிதைத்தது. இன்னும் சிதைத்துக் கொண்டிருக்கிறது. இதில் இலங்கையும் பாகிஸ்தானும் அடங்கும்.

அமெரிக்க ஆகதிக்கத்துக்கெதிராக, லத்தின் அமெரிக்காவில் எழுச்சியடைந்திருந்த போராட்டத் தலைமைகள், நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஆளுமைகள் அளவுக்கு இந்தியப் பிராந்தியத்தில் திரட்சிபெற்ற ஆளுமைகளும் தலைவர்களும் உருவாகவில்லை. உருவாகிய தலைமைச் சக்திகளுக்கும் ஆளுமைகளுக்கும் தூரநோக்குப் பார்வையும் அரசியல் விவேகமும் இல்லாமற்போய்விட்டது. இதன் விளைவாக, இந்தியப் பிராந்தியத்தில் அளவுக்கதிகமான இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. ஏனைய பிராந்தியங்களில் நடந்த போராட்டங்களோடு ஒப்பிடுகையில் வெற்றிபெறாத போராட்டங்களுக்காகச் சிந்தப்பட்ட குருதி இந்தியப் பிராந்தியத்திலேயே அதிகம் எனலாம்.

இந்தியாவின் இத்தகைய நிலைப்பாட்டையும் போக்கையும் இலங்கை மற்றும் பாகிஸ்தானியத் தலைவர்கள் அறிந்தே இருந்தார்கள். (ஆனால், அவர்களுடைய விவேகத்தையும் விட இந்தியாவின் விவேகம் வலுவானது. ஆனாலும் இதில் பாகிஸ்தானை விட இலங்கை இந்தியாவைக் கையாள்வதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது எனலாம்). என்றபடியால்தான் இலங்கையும் பாகிஸ்தானும் நீண்டகாலமாகவே இணைபிரியாத நண்பர்களாக இருக்கின்றன. இந்தியாவின் அச்சுறுத்தலை தவிர்க்கும் முகமாக இரண்டு நாடுகளும் சீனாவோடும் அமெரிக்காவோடும் நீண்டகாலமாக ஒரு உறவு நிலையைக் கொண்டிருந்தமையையும் இங்கே நாம் கவனிக்கலாம். அந்த உறவு நிலை அமெரிக்காவுக்கும் தேவையாக இருந்தது. அப்போது 1990 களுக்கு முன்னர் இந்தியா அமெரிக்காவுக்கு அப்பால், ரஷ்யாவோடு கொண்டிருந்த உறவை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா இலங்கையையும் பாகிஸ்தானையும் தன்னுடைய நெருக்கமான வட்டத்தில் வைத்துக் கொண்டது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இந்தியா எதிர் நிலைச் சக்தியாக இருந்தபோது மேற்படி இந்த நாடுகளுடனான உறவும் தொடர்பும் அவற்றுக்கு அவசியமாக இருந்தன. இது விருப்பங்களின் விளைவான உறவல்ல. அரசியலில் எப்பொழும் உள்ள உண்மை என்று சொல்லப்படும் தேவைகள், நிலைமைகள், நிர்ப்பந்தங்களின் விளைவான உறவாகும். இந்த உறவே தவிர்க்க முடியாதபடி, அரசியல் நடவடிக்கைகளாக மாற்றமடைகின்றன. இந்தத் தொடர்புகளையும் உறவுகளையும் நாம் கொள்கை வழிப்பட்ட உறவுகளாகப் பார்க்காமல், அரசுகளுக்கிடையிலான உறவுகள் என்ற அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ள வேண்டும்.

சீனப் பொருளாதாரக் கொள்கை மாற்றமடையத் தொடங்கியபோது அதன் அயல்நாட்டுக் கொள்கைகளும் அணுகுமுறைகளும் மாறத் தொடங்கிவிட்டன. சந்தைப்போட்டி, மூலப் பொருட்தேடுகை என்ற அம்சங்கள் இத்தகைய நிலையை சீனாவுக்கு ஏற்படுத்தின. (இப்போது சீனாவுக்குள்ள நெருக்கடியும் தேவையும் இந்தவகையில் அகதிமாக இருக்கிறது. ஏனெனில், அது மாபெரும் வல்லரசாக வளர்ச்சியடைந்து வருகிறது. அந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் ‐ அந்தப் பசிக்கு தீனி போடும் வகையில் ‐ அது தீனியைத் தேடித்தான் ஆகவேண்டும். ஆகவே அது கொள்கைக்கு அப்பால், தனது பொருளாதார நலன்களுக்காக வேறு பிராந்தியங்களை நோக்கி நகரவேண்டியதாயிற்று. அந்த அடிப்படையிலேயே அது இப்போதும் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இந்தியப் பிராந்தியத்தில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தேவையை அது அதிகம் பயன்படுத்த விளைகின்றது. சீனாவின் இந்தத் தேவையை இலங்கை விளங்கிக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான வியூகத்தை வகுத்து, சீனாவுடன் இணைந்து செயற்படுகிறது. அதேவேளை சீனாவை வைத்தே அது இந்தியாவைக் கையாளுகிறது. இது சிங்கள ராஜதந்திரத்தின் தேர்ந்த, நுட்பமான ஒரு விசயமாகும். ஒரு காலத்தில் மேற்குலகத்தையும் பாகிஸ்தானையும் வைத்து இலங்கை இந்தியாவைக் கையாண்டது. 1987 இல் அது நெருக்கடியடைந்தபின்னர் அணுகுமுறையை மாற்றி வேறு அணுகுமுறையில் இந்தியாவோடு நட்பைப் பாராட்டிக் கொண்டே சீனாவோடும் பாகஸ்தானோடும் உறவாடி தனது நலன்களை இலங்கை அடைந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் சீனாவுக்கிருப்பதால், அது பாகிஸ்தானை எப்போதும் தன்னோடு வைத்திருக்க முயற்சிக்கிறது. அடுத்ததாக அந்த அடிப்படையில் இலங்கையையும் தன்பக்கம் இழுக்க முயன்று கொண்டிருக்கிறது. சரவதேச நிலவரங்களை சரியாக கணிப்பிடுகின்ற இலங்கை அந்தப் போட்டிகளுக்குள்ளால் தனது நலன்களைப் பெற்றுக் கொண்டு செல்கிறது. இந்தியாவை வைத்தே அது மேற்குலகத்தையும் சமனிலைப்படுத்துகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், முன்னர் மேற்குலகத்தை வைத்து இந்தியாவைக் கையாண்ட இலங்கை இப்போது இந்தியாவைப் பயன்படுத்தி மேற்குலகத்தைக் கையாள்கிறது. இது அரசுகளுக்கிடையிலான – அதிகாரத்தரப்பினருக்கிடையிலான உறவாடல்கள். அவர்களின் நலன்சார்ந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தந்திரோபாய நடவடிக்கைகள்.

இத்தகைய ஒரு அரசியற் பொருளாதாரப் பின்னணியில்தான், இலங்கைத்தீவின் அரசியற் பிரச்சினைகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பன கையளப்பட வேண்டியிருக்கின்றன.

ஆனால், இவற்றுக்குப் புறம்பாக, எடுத்த எடுப்பிலேயே இந்தியா ஈழுத்தமிழருக்கு ஆதரவா இல்லையா? இந்தியாவை நம்பலாமா விடலாமா? இந்தியாவைக் கையாண்ட விதம் சரியா தவறா? என்று பட்டிமன்ற விவாதங்களில் முன்வைக்கப்படும் விவாதங்களைப் போல தமிழ்த்தரப்பினரால் விசயங்கள் கையாளப்படுகின்றன. இந்தியாவை தமிழர்கள் எப்போது கையாண்டார்கள்? அல்லது இப்போது இலங்கைத்தீவில் ஒரு நிர்ணய சக்தியாக இருக்கும் சீனாவுடன் தமிழர்களின் உறவு நிலை என்ன? எந்த ஒரு தமிழ்ப்பிரதிநிதியாவது சீனாவுடன் இதுவரையில் பேசியிருக்கிறாரா? அப்படியொரு உறவாடலும் தொடர்பு கொள்ளுதலும் அவசியமானது என தமிழ்த்தரப்பினால் உணரப்பட்டிருக்கிறதா?

இன்றைய உலகில் எந்தப் பிரச்சினையும் எந்த விசயமும் சர்வதேச மயப்பட்டவை. இதுவொரு பொது நிலை. இந்த நிலையை யாரும் தவிர்க்க முடியாது. அவ்வாறு சர்வதேச மயப்பட்ட விசயங்களையும் விவகாரங்களையும் அவற்றிலிருந்து தனிமைப்படுத்தி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ, நமக்குத் தெரிந்த அளவின்படியோ, நமக்குப் பழக்கப்பட்ட முறைகளிலோ செய்யவியலாது. அவ்வாறு செய்ய முற்பட்டால் அது தவறான விளைவுகளையே தரும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக புழகிய வாய்பாட்டின்படி இந்தியாவைப் பற்றிச் சிந்திப்பதே தமிழ்மக்களின் அரசியற் சிந்தனையாக இருக்கிறது. எனவே, அதற்காக இந்தியாவை தமிழ் மக்கள் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக ஏராளம் அணுகுமுறைகள் முன்வைக்கப்படுகின்றன. இங்கே கவனிக்கவேண்டியது இந்தியாவை எப்படிக் கையாள்வது என்பதற்கப்பால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை, அதன் நிகழ்ச்சிப் போக்குகள், வரலாற்றுப் போக்குகளுக்குள்ளால் எப்படிக் கையாள்வது என்பது பற்றிச் சிந்திப்பே இன்று அவசியமாகும் என்பதே. இதுவொரு வலைப்பின்னல் போன்ற செயற்பாடு. மின்சாரம் அனைத்து தொடுப்பிகளிலும் சமனிலையில் பாய்ந்து கொண்டிருப்பதைப்போல, இந்தப் பொறிமுறையும் அறிவு ப+ர்வமாக சகல தளங்களிலும் பிரக்ஞையோடு செயற்பட வேண்டும்.

இதேவேளை, இங்கே கவனிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை சர்வNhதச சக்திகளுக்கு இணையாக ‐ சிங்கள மக்களுடன், சிங்களத்தரப்புடன் எத்தகைய தொடர்பாடலை, உறவை மேற்கொள்வது என்பதாகும். இனப்பிரச்சினைத் தீர்வைப்பற்றிக் கதைத்தால், எல்லோரும் இந்தியா, மேற்குலகம், பிராந்தியம், சரவதேச சமூகம் என்று பேசகிறார்களே தவிர, சிங்கள மக்களுடன், சிங்களத் தரப்பினருடன் உறவை மேம்படுத்தவேண்டும். சிறப்பான அடிப்படைப் புரிதலை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பதாகத் தெரியவில்லை.

இலங்கைத் தீவின் உள்நாட்டு நெருக்கடியானாலும் சரி, சர்வதேச நெருக்கடியானாலும் சரி, அவை ஒட்டு மொத்தமாக தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் பொதுவான பிரச்சினைகளாகவே அமைகின்றன. இதன் பாதிப்பு வீதங்களில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஏற்படும் விளைவுகள் இலங்கையர் என்ற அடிப்படையிலேயே அமைகின்றன.

ஆகையால், இந்தப் புரிதலை பொதுவாக சகல தரப்பு மக்களுக்கும் புலப்படுத்த வேண்டும். சகல தரப்பின் அரசியல் அமைப்புகள், சமூக அமைப்புகளுக்கும் உணர்த்தப்பட வேண்டும். இதற்கு பெரும் பொறுப்பையும் பங்கையும் ஆற்றவேண்டியவை ஊடகங்கள், சிந்திப்போர், செயற்படுநர்கள் போன்றதரப்புகளாகும். இவை ஏறக்குறைய ஒரு அழுத்தத்தை அதிகாரத்தரப்புகளுக்கும் அரசியற் தரப்புகளுக்கும் ஏற்படுத்தவேண்டும்.

அவ்வாறு தொடர் அழுத்தத்தை இந்தத் தரப்புகளுக்கு வழங்கும்பொழுது அந்த நிர்ப்பந்தமானது ஒரு செயல்வடிவத்துக்குச் செல்லும். எந்த அரசியல் நடவடிக்கைகளும் வெறும் ஞானங்களில் இருந்து உருவாகுவதில்லை. அவை மக்களின் ‐ அதிகாரத்தரப்பின் நெருக்கடிகளில் இருந்தே உருவாகின்றன. இங்கே அதிகாரத்தரப்பைக் கட்டுப்படுத்தி வழிப்படுத்தவேண்டிய மக்களின் விழிப்புணர்வையும் பங்கேற்பையும் நாம் மேலெழ வைப்பதே.

இப்பொழுது இலங்கைத்தீவு யுத்தத்துக்குப் பின்னான – யுத்தத்தின் விளைவான நெருக்கடிகளால் சூழப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள், போருக்குப் பின்னரான அபிவிருத்தி, மீளமைப்புப் பணிகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு, நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகள் ( விலைவாசி அதிகரிப்பு முன்னெப்போதையும் விட இப்பொழுது பல மடங்கு கூடியிருக்கிறது. குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு பொதுமக்களைக் கோபமடைய வைக்கும் அளவுக்கு ஏறியிருக்கிறது ). எனவே நெருக்கடிகளால் சூழப்பட்டிருக்கும் மக்களை விழிப்படைய வைத்தல், அவர்களுடன் விசயங்களைப் பேசுவதற்கான யதார்த்தப் பின்புலத்தை அதிகம் வழங்குகின்றது. எனவே இந்த வாய்ப்பான சூழலைப் பயன்படுத்துவது அவசியம்.

போர் முடிந்திருக்கிறது. உயிர் அச்சுறுத்தலைத் தவிர வேறு அத்தனை பிரச்சினைகளும் அப்படியேதான் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், நாடும் மக்களும் ஏராளம் பிரச்சினைகளாலும் நெருக்கடிகளாலும் சூழப்பட்டேயிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் சாதாரணமானவையும் அல்ல. இவை ஒரு நாளில் தீர்ந்து விடக்கூடியவையுமல்ல.

இதேவேளை, இனப்பிரச்சினைக்கு தமிழ்க்கட்சிகள், தமிழ்த்தலைவர்கள் எல்லாம் ஒன்று பட்டு விட்டால், அல்லது ஒன்றிணைந்து நின்றால், எல்லாமே சரியாகிவிடும் என்ற ஒரு எண்ணமும் தமிழ் மக்களிடம் இருக்கின்றது. இது தவறான அபிப்பிராயமாகும். இலங்கைத்தீவில் உள்ள மக்களில் 75 வீதமானவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிங்கள மக்களாவர். இவர்கள் மகாவம்சக் கருத்துகளாலும் சிங்கள இனவாதச் சிந்தனையினாலும் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். இவர்களுடைய சிந்தனையின்படி இந்தியா தமிழர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஆதரவுச் சக்தி என்ற புரிதலே இருக்கிறது. இது அவர்களுடைய உளவியலில் நெருக்கடியான ஒரு அம்சம். அதைப்போல தமிழர்கள் ஏதோ ஒரு தளத்தில் ஒன்று படுகிறார்கள் என்பதை சிங்களச் சக்திகள் அச்சத்துடனேயே பார்க்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் கூட இதைப்பற்றிய தவறான விளக்கமே காணப்படுகிறது.

தமிழர்கள் என்ன கருதுகிறார்கள் என்றால், எல்லோரும் பிரிவின்றி, ஒன்று பட்டு நின்றால், அது அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும்

இந்த ஒன்றுபட்ட குரலுக்கு வலு அகதிகமாக இருக்கும் எனவும் சர்வதேச ரீதியாக ஒரு மதிப்பு ஏற்படும் எனவும் ஒரு எண்ணமுண்டு. ஆனால், உண்மையில் நிலைமை அப்படி இருக்கப்போவதில்லை. இந்த ஒற்றுமையை, இந்தத் திரட்சியை சிங்களத்தரப்பு அச்சத்துடனேயே பார்க்கும். தனக்கு நெருக்கடியைத் தரும் ஒரு போக்காவும் விவகாரமாகவும்தான் இதைப்புரிந்து கொள்ளும்.

அதேவேளை இந்த ஒன்று பட்ட தரப்பு பகிரங்கமாக வெளிநாடுகளில் இயங்கும் போதும் தொடர்பாடும் போதும் அதைச் சிங்களத்தரப்பு அங்கீகரிக்கப்போதில்லை. ஆகவே இப்போது இனப்பிரச்சினை என்பது மிகவும் சிக்கலான உளவியல் நெருக்கடிக்கூறுகளையும் உள்ளார்ந்த பல சிக்கலல்களையும் கொண்டதாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. ஆனால், இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க முடியாது. அதோடு சர்வதேச அரசியற் போக்குகளும் நிலைமைகளும் மாறிவிடும். அதுவரை பல முனைகளிலும் பல தளங்களிலும் நல்ல திட்டமிடலுடன் சிறப்பாக இயங்கவேண்டியதே இன்றுள்ள பணியாகும்.

http://globaltamilnews.net