[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 03:26 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப்போரின் போது சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் வே.பாலகுமாரன் மற்றும் மூத்த உறுப்பினர் யோகரட்ணம் யோகி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அமைச்சர் டியூ.குணசேகர இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான க.வே. பாலகுமாரன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், சமராய்வுப் பொறுப்பாளராக இருந்தவருமான யோகி ஆகியோர் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்திருந்தனர்.
அவர்கள் கொழும்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கடந்த ஆண்டு கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் பின்னர் அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்தநிலையிலேயே இவர்கள் வன்னி இறுதிப்போரின் போது கடந்த ஆண்டு கொல்லப்பட்டு விட்டதாகக் கூறியிருக்கிறார் சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மீளமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர.
போரினால் கணவனை இழந்தவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அவசரத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் கொழும்பு ஆங்கில நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.
வவுனியா,யாழ்ப்பாணம். கிளிநொச்சிப் பகுதிகளில் போரினால் கணவனை இழந்த பெண்களைச் சந்தித்த பின்னரே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
அவர் அந்தப் நாளிதழுக்கு மேலும் கருத்து வெளியிடுகையில், தான் சந்தித்த கணவனை இழந்த பெண்களுள் க.வே. பாலகுமாரனின் மனைவி மற்றும் யோகரட்ணம் யோகியின் மனைவியும் உள்ளடங்கியிருந்தனர் என்று கூறியிருக்கிறார்.
பாலகுமாரன் கடந்த ஆண்டு வன்னி கிழக்கில் நடந்த போரின் போது கொல்லப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் யோகியின் மனைவியை கணவனை இழந்தவர் என்று கூறியுள்ள அமைச்சர் டியூ.குணசேகர அவர் எங்கே, எப்போது கொல்லப்பட்டார் என்ற தகவலை வெளியிடவி்ல்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கணவனை இழந்தோர் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள அமைச்சர் டியூ. குணசேகர, கடந்த ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் இதுபற்றி அரசாங்க அதிகாரிகளும் சரி உதவி நிறுவனங்களும் சரி காலத்துக்குக் காலம் வெவ்வேறு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கடந்தவாரம் வடக்கில் போரினால் கணவனை இழந்த பெண்களைச் சந்திப்பதற்கு முன்னர் தமது அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டது என்றும், இதற்கு 8000 பெண்களிடம் இருந்து பதில் கிடைத்ததாகவும் கூறிய அவர், இவர்களில் 98 வீதமானோர் இளம் கணவனை இழந்தோர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்தே கடந்த 10ம் திகதி யாழ்ப்பாணத்திலும், 11ம் திகதி கிளிநொச்சியிலும், 12ம் திகதி வவுனியாவிலும் அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
”போரினால் கணவனை பெண்களுக்கு ஐ.நாவிடம் இருந்து உதவிகளைப் பெறுவது தொடர்பாக விமல் வீரவன்சவின் உண்ணாநிலைக்கு முன்னதாக கொழும்புக்கான ஐ. நா வதிவிடப் பிரதிநிதி நீல் புனேயுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால் ஐ.நாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் தோன்றிய இழுபறிகளால் இந்த உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.” என்றும் அமைச்சர் டியூ.குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.puthinappalakai.com/view.php?20100719101531