[வியாழக்கிழமை, 01 ஜூலை 2010]

suresh_Premachchanrad_MPஅரசாங்கத்தின் சிங்கள பௌத்த மேலாதிக்கவாத சிந்தனையால் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்திருக்கும் நிலைப்பாடானது அரசாங்கத்திற்கு எவ்வளவு பாரிய பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குகின்றது என்பதை இனியாவது நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என வரவுசெலவு திட்ட விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது உரையின் முழுவடிவம் வருமாறு:

தமிழர் தாயக அழிப்பு

இன்று புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் கடந்த ஆண்டு மே மாதத்தின் இறுதிப்பகுதியில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பெரும் பகுதி நிர்மூலமாக்கப்பட்ட நிலையில் 40000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் குரூரமாகக் கொன்றொழிக்கபட்ட நிலையில் பல்லாயிரக் கணக்கான விதவைகளும் பலநூறு அநாதைச் சிறுவர்களும் உருவாக்கப்பட்ட நிலையில் பல்லாயிரம் தமிழ் மக்கள் வயது பால் வேறுபாடின்றி ஊனமாக்கப்பட்ட நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மூலமாக்கபட்ட நிலையில் பல வைத்தியசாலைகளும் ஏராளமான பாடசாலைகளும் சிதைக்கப்பட்ட நிலையில் இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றது.

மேம்போக்காகப் பார்க்கின்ற மாத்திரத்திலேயே இவ்வரவு செலவுத் திட்டமானது தென்னிலங்கையைப் பொறுத்தவரை கட்சி ஆதரவுத்தளம் என்ற பாரபட்சத்துடன் தயாரிக்கப்பட்டதாகவும் வடக்கு கிழக்கை பொறுத்த வரை நிகழ்த்தப்பட்ட மேலதிக பட்டியலிடப்பட்ட அழிவுகளிலிருந்து தமிழ் மக்கள் மீண்டுவிடக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டுடனும் எமது தாயகத்திலேயே எமது அரசியல் பொருளாதார கலாசார உரிமைகளைப் பறித்து எமது தனித்துவத்தை அழித்து பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை அங்கு நிலை நாட்டுவதற்கான வக்கிர போக்கையும் வெளிப்டையாகக் காட்டி நிற்கின்றது. வெட்கக்கேடான இந்த வரவு செலவு திட்டத்தை முதலிலேயே நான் நிராகரிக்கின்றேன் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தமிழ் இனத்திற்கு எதிரான போர் இன்றும் தொடர்கின்றது

கௌரவ சபாநாயகர் அவர்களே!

எந்த ஓர் ஜனநாயக நாட்டிலும் ஜனநாயகத்தை உண்மையாக நம்புகின்ற அதனை நிலைநிறுத்த முயல்கின்ற நாட்டிலும் இத்தகைய போர் அழிவின் பின்னரான வரவு செலவு திட்டமானது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் அந்த மக்கள் தமது சொந்த வீடுகளில் மீண்டும் வாழ வைக்கும் திட்டங்கள் அந்த மக்களின் வாழ்வாதாரங்களை மீளுருவாக்கும் திட்டங்கள் வைத்தியசாலைகள் பாடசாலைகள் வீதிகள் மற்றும் அரச நிர்வாகக் கட்டிடங்கள் உட்பட்ட உட்கட்டமைப்புக்களை மீள நிர்மாணம் செய்தல் ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்படும். ஆனால் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிக்கும் மனிதாபிமான நடவடிக்கை என்ற ஆளும் தரப்பினரின் கூற்றுக்கு நேர்மாறாக இந்த வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது.

இந்த நாட்டில் பயங்கரவாத்திற்கான போர் என்ற போர்வையில் தமிழ்த் தேசிய இனத்தைப் பூண்டோடு அழிப்பதற்கான யுத்தம் நாசுக்கான பல புதிய வடிவங்களில் தொடர்வதையே இன்றைய வரவு செலவுத்திட்டம் வெளிப்படையாக சுட்டி காட்டி நிற்கிறது. இந்த வரவு செலவுத்திட்டம் பொதுவாக இலங்கை மக்கள் அனைவரது அடிப்படை மற்றும் மனித உரிமைகளைத் தொடர்ந்தும் பாதிப்பதற்கும் அவர்களை பட்டினிக்குள் தள்ளுவதையுமே நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக தமிழ்த் தேசிய இனத்தை மொத்தமாக அழித்தொழிப்பதை அல்லது நாட்டை விட்டு விரட்டுவதை நோக்கமாக கொண்டதாகவே இந்த வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது.

இப்போதும் பாதுகாப்பு செலவினங்களுக்கு அதிகளவு செலவு

யுத்தம் கொடூரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் யுத்தத்;திற்காக தளபாடங்கள் குண்டுகள் கொள்வனவு ஆளணிச் செலவுகள் மற்றும் அத்தோடு தொடர்புபட்ட கடன்களுக்காகவும் அதிகூடியளவு பணம் செலவிடப்பட்டுள்ளமையினால் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நாட்டின் மொத்தச் செலவில் 50 வீதத்திற்கும் அதிகளவான தொகை யுத்தச் செலவு கடன்கள் மற்றும் வட்டிகளுக்காக செலவிடப்படுகின்றது. இதனால் பொருளாதார அபிவிருத்திக்கு மிகக் குறைந்தளவு பணமே ஒதுக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சிற்கு 202 பில்லியன்களை ஒதுக்கியுள்ள அரசு நாட்டை அபிவிருத்தி செய்யும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு வெறும் 61 பில்லியன்களை மாத்திரமே ஒதுக்கியுள்ளது.

அம்பாந்தோட்டை கொழும்பைவிட வளர்ந்துள்ளது

ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் கூட நாட்டின் பொருளாதார அபிவிருத்தி புறக்கணிப்பட்டுள்ளமையின் அர்த்தம் என்ன? பாதுகாப்பு ஒதுக்கீடு குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கப்பட்டதன் பொருள் என்ன? உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளன. தலைநகரில் தினமும் இந்த அரசிற்கு அதிகவருவாயைத் அள்ளிக்கொடு;க்;கின்ற புறக்கோட்டைப் பகுதி நகரமாக அல்ல நரகமாகக் காட்சியளிக்கின்றது. மேலும் முன்பெல்லாம் இலங்கையின் வறுமை குறைந்த மாவட்டமாக கொழும்பு காணப்பட்டது. இப்போது வறுமை குறைந்த மாவட்டமாக அம்பாந்தோட்டை காணப்படுகிறது. அம்பாந்தோட்டையில் வறுமை போக்கப்பட்டதை பாராட்டுகின்றேன். ஆனால் ஏனைய மாவட்டங்களை வறுமைக்குள் தள்ளாமல் அம்;பாந்தோட்டையை செல்வந்த மாவட்டமாக்க வேண்டும். கொழும்பு வாக்கு வங்கி தொடர்ச்சியாக எதிர்க்கட்சியிடம் இருப்பதால் இந்தப் பாகுபாடா? என்பதற்கு ஆட்சியாளர்கள்தான் பதில் கூறவேண்டும்.

பிச்சைக்காரர்களையே கண்டிராத வந்தவர்க்கெல்லாம் உணவளித்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் பெரும் பகுதி மக்களை உணவுக்குக் கையேந்தும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றீர்கள். இது அடிப்படை பொருளாதார தத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் முரணானது. இத்தோடு முடிந்துவிடவில்லை. நிதி ஒதுக்கீட்டில் இந்த அரசின் அப்பட்டமான இனப்பாரபட்சக் கொள்கை ஒவ்வோர் துறையிலும் தெளிவாய் புலப்படுகிறது. உதாரணமாக மாவட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டால் மிகவும் வளர்ச்சி அடைந்த மாவட்டங்களான கம்பகா மாவட்டத்திற்கு 562மில்லியன்; ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏன்? பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்டம் என்ற காரணத்திற்காக இவ்வளவு அதிக ஒதுக்கீடா?

அதேசமயம் எந்தப் பாதிப்பும் ஏற்படாத ஜனாபதியின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டைக்கு378 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டள்ள அதேவேளை இந்த அரசால் துவம்சம் செய்யப்ட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெறும் 99 மில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு வெறும் 122மில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. உண்மையாகவும் நேர்மையாகவும் இதனை அணுகுவோமாக இருந்தால் கம்பகாவிற்கும் கொழும்பிற்கும் ஒதுக்கப்பட்ட பணம் கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவிற்கும் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு மறுதலையாக இருக்கின்றது. இவர்கள் தான் இந்த நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை என்று எதுவுமில்லை எல்லோரும் இலங்கையர்களென வார்த்தை ஜாலங்களை விட்டு உலகை ஏமாற்றுகின்றனர். எல்லோரும் இலங்கையர் என உண்மையில் இந்த அரசு நினைத்திருந்தால் இந்த வரவு செலவுத்திட்டம் நேரெதிராக இருந்திருக்கும்.

தரப்படுத்தல்களும் கல்வி வசதிகளும்

அடுத்ததாகக் கல்வி மற்றும் உயர் கல்வியை எடுத்துக்கொண்டால் சர்வதேச கல்வித்தரத்துடன் நோக்குகின்ற பொழுது இந்த நாட்டின் கல்வி நிலை மிகமோசமான நிலையில் இருப்பதைக்; காணலாம். இங்குள்ள பல்கலைக்கழகங்கள் சற்று மேம்படுத்தப்பட்ட பாடசாலைகள் போன்றவையாகவே காணக்கிடக்கின்றன. வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் உற்பத்தி நிலையங்களாகவே இன்றும் இருக்கின்றன. மாணவர்களை அறிவுத்தேடலுக்கான ஆர்வத்தை ஊட்டுவதாகவோ ஆய்வுக்கலாசாரத்தை வளர்ப்பதாகவோ இல்லை. இந்தியாவில் காணப்படும் பெரும்பாலான கல்லூரிகள் இங்குள்ள பல்கலைக்கழகங்களைவிட தரம் மிக்கவையாகவே உள்ளன. இந்த நாட்டில் மட்டுமே மாணவர்கள் எதைக் கற்க வேண்டும் எத்துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்கின்றது. ஏனைய நாடுகளில் மாணவர்களுக்கு எத்துறையில் நாட்டமோ அத்துறையில் நிபுணத்துவம் பெறும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அதனால்தான் எமது நாட்டுக்கு நிபுணர்களை இறக்குமதி செய்யவேண்டியுள்ளது.

இந்த நாடு எல்லாத்துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டுமானால் அதன் கல்வித்தரம் சர்வதேசத் தரங்களுக்கு உயர்த்தப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டும். எனவே தரமிக்க ஆற்றல் மிக்க போதிய விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். கல்வித்தரக் குறைபாட்டிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளப் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஒரு விரிவுரையாளருக்கு 30000ரூபாய் வரையான சம்பளமும் பேராசிரியர்களுக்கு 60000 ரூபாய்வரையான சம்பளமுமே வழங்கப்படுகின்றது. இது அவர்களின் வாழ்க்கைச் செலவில் பாதியளவை சமாளிக்கக்கூடப் போதுமானதாக இல்லை. இதனாலேயே அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வெளியேயும் வருமானத்தைத் தேடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடைகின்றது. இந்தியாவில் இத்தொகை இலங்கை ரூபாவிற்கு ஒருலட்சம் ரூபாவிலிருந்து இரண்டே கால் லட்சம் ரூபா வரையாக உள்ளது.

கல்வி உயர்கல்வி ஆகியவற்றிற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன் மூலம் மட்டுமே உற்பத்தித்திறன் நிர்வாகத்திறன் மிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும். வடக்கு-கிழக்கில் பாடசாலைகள் முற்றாகவோ பகுதியாகவோ அழிக்கப்பட்டுள்ளன. சில பாடசாலைகள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. சில பாடசாலைகள் இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் முகாம்களாக உள்ளன. அண்மையில் கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. யுத்தம் முடிவடைந்த பின்னரும் பலாலி வீமன்காமம் மகா வித்தியாலயம் புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இராணுவ பயிற்சிக்கான நிலமாக மாற்றப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கின் கல்விக்கு இந்த ஆட்சியாளர்கள் கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான்.

கல்விக்கான ஒதுக்கீட்டால் வடக்கு கிழக்கின் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மீள் கட்டுமானம் செய்யப்பட்டு தேவையான தளபாடங்கள் உபகரணங்கள் வழங்கப்பட்டு அது முழுமையாக செயற்பட வேண்டும். வடக்கு கிழக்கின் பல்கலைக்கழகங்களுக்கு போதிய தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.; வவுனியா பல்கலைக்கழக வளாகம் திருமலை பல்கலைக்கழக வளாகம் ஆகியவை முழுமையான பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்தப்பட வேண்டும். இவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் அழித்தெரிப்பதற்கும் ஒதுக்கப்படும் நிதியை ஆக்கத்திற்குரிய நிதியாக மாற்;றினால் மட்டுமே இந்த நாடு முன்னேற்றம் பற்றிச் சிந்திப்பதாகக் கொள்ள முடியும்.

1972 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இனவாரித் தரப்படுத்தல் உயர்கல்வியில் தகுதி அடிப்படையில் நடைபெற்ற அனுமதிமுறையில் தமிழர்கள் தமது விகிதாசாரத்திற்கு மேலாக அனுமதியைப் பெற்றுவிடுவார்கள் என்பதனால் அவர்களது சந்தர்ப்பங்கள் பறிக்கப்பட்டு சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 38 ஆண்டுகளில் எல்லா மாவட்டங்களையும் கல்வியில் சமவளர்ச்சி ஏற்படுத்தி தகுதி அடிப்படையிலான தெரிவை மீண்டும் நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அனுமதியை பிரித்தது மட்டுமின்றி வடக்கு கிழக்கில் ஒரு தலைமுறை மாணவர் இளைஞர்களை அழித்தொழித்து பாடசாலைகளை அழித்து கல்விமான்களை நாட்டை விட்டு விரட்டியடித்தது தான் இனவாத ஆட்சியாளர் இதுவரையில் கல்வித்துறையில் செய்த சாதனையாகும். எந்த ஓர் நாடும் காலங்காலமாக இத்தகைய இனவாத அடிப்படையில் பாரபட்சக் கொள்கைகளைக் கடைபிடிப்பதில்லை.

38 ஆண்டுகளில் 25 மாவட்ட கல்வி நிலையை சமப்படுத்த முடியாதவர்கள் இலங்கையை ஆசியாவின் அதிசயமாகக் காட்டப்போவதாக கூறுவது நகைப்பிற்கிடமானது. ஆசிய மட்டத்தில் அல்ல உலகமட்டத்திலேயே எமது நாடு அதிசயமாகத்தான் தெரிகிறது. தோல்வியடைந்த நாடுகளில் 25 வது இடம் முன்னேறாத நாடுகளில் 23 வது இடம் தற்கொலையில் முதல் 3 இடங்களுக்குள் பத்திரிகை சுதந்திரம் மறுப்பில் முன்னணி மனிதர்களை படுகொiலை செய்வதில் முன்னணி போர்க்குற்றங்களில் முன்னணி அது மாத்திரமல்ல பிச்சைக்காரர்களின் பிச்சைப் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே ஏழுக்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அண்மைக்காலங்களில் இந்நாட்டில் கொல்லப்பட்டுள்ளனர் எவ்வளவு மோசமான பொருளாதார நிலைமைகள் இருந்தால் இப்படியான கொலைகள் இடம்பெறும்? இதைவிட ஒரு அதிசயம் உலகில் இருக்கமுடியுமா? இப்படி உலக அதிசயங்களில் ஒன்றாக்கக் காணப்படும் இந்த நாட்டை ஆசியாவின் அதிசயமாக்கப் போவதாகக் கூறுவதுதான் அதிசயம். இந்தியா சீனா பாகிஸ்தான் ஈரான் யப்பான் ஆகிய ஆசிய நாடுகளின் உதவிகளுடன் தனது மூச்சைப் பிடித்திருக்கும் இவ்வரசின் வரவு செலவுத்திட்டம் மேற் சொன்ன வகையான அதிசயங்களைத் தொடர்ந்தும் நிகழ்த்தவே இந்த வரவு செலவு திட்டம் வழிவகுக்கும்.

இன்னும் யுத்தமமதை கொண்ட ஆட்சியாளர்கள்

யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்றும் யுத்த மமதைக்குள்ளும் யுத்த மாயைக்குள்ளும் மக்களை அமிழ்த்தி உங்கள் ஆட்சியை நடத்துவதற்கான உத்திகள்தான் உங்கள் பேச்சிலும் செயலிலும் வரவு செலவு திட்டத்திலும் வெளிப்படுகின்றது. இந்த நாட்டில் ஒரு நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் இந்நாட்டில் நிரந்தர பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமாக இருந்தால் முப்படைகளின் தொகை 1983க்கு முன்னரான நிலைக்குக் குறைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் 1983க்கு முன்னர் இருந்தளவுக்கு குறைக்கப்பட வேண்டு;ம். வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ஆட்சியை வலுப்ப:டுத்துவதற்கான முனைப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனூடாக பல முனைகளில் தமிழ் இன அழிப்பை வேகப்படுத்துவதற்கே இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டள்ளது.

தமிழ் மக்களை புலிகளிடமிருந்து விடுவித்தல் என்ற பெயரால் தமிழ் மக்களை இந்த நாட்டிலிருந்தும் இந்த உலகத்திலிருந்தும் விடுவிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் தமது ஜனநாயகபூர்வ கருத்துக்களைத் தெரிவிக்க முடியாத சூழலிற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். தமிழ் மக்கள்கூடி அரசியல் நிலைமைகளையோ நாட்டு நிலைமைகளையோ விவாதிப்பதே ஒரு அச்சத்திற்குரிய விடயமாக மாற்றப்பட்டுள்ளது. அப்படியான கூட்டங்கள் விவாதங்களில் ஈடுபடுவோர் அரச புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கப்படுகின்றனர். அவர்கள் கொல்லப்படுவர் என மிரட்டப்படுகின்றனர். மக்கள் ஊமைகளாகவும் மந்தைகளாகவும் வாழவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வடக்;கு-கிழக்கின் ஜனநாயகம் இந்த வள்ளலில்தான் இருக்கின்றது.

வடக்கு கிழக்கு வழமையான வாழ்வுக்கு திரும்புமானால் அரிசி மீன் பால் உப உணவுகள் போன்றவற்றில் நாடு தன்னிறைவு அடையக் கூடிய நிலை ஏற்படும் ஆனால் வடக்கு கிழக்கு முழுமையாக வழமைக்கு திரும்பி விடக்கூடாது என்ற திட்டத்திலேயே இந்த அரசு செயற்படுகின்றது. வடக்கு கிழக்கில் ஏறத்தாழ 3 லட்சம் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையின் சம்பூர் பிரதேசத்தில் பல நூற்றுக் கணக்காண மக்கள் வாழ்ந்த இடங்கள் புல்டோசர் (டீரடடனழணநச) கொண்டு தரைமட்டமாக்கப்பட்டு வீடுகள் இருந்த அடையாளம் இன்றி வெட்டை வெளி ஆக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் தென்மராட்சி பாதுகாப்பு வலயத்திலும் இதே நிலைதான்.

தமிழர் நில அபகரிப்புகள்

தனியார் நிலங்களையும் வீடுகளையும் ஆக்கிரமிப்பது அரசாங்கமாக இருந்தாலும் அது சட்ட விரோதமானதே. இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது. அவர்களின் வீடுகளை யார் வேண்டுமானலும் அழிக்கலாம். உடமைகளை கொள்ளையிடலாம் நிலங்களை ஆக்கிரமிக்கலாம். அதனை அவர்கள் பாதுகாக்க இந்த நாட்டில் சட்டம் நீதித்துறை நிர்வாகம் எதுவும் உதவி செய்யாது என்ற நிலையே இங்கு வளர்க்கப்பட்டுள்ளது. இந்த அராஜக ஆட்சிப் போக்கு நிறுத்தப்பட வேண்டும். அவர்களின் வீடுகளின் பெறுமதிகள் இழப்பீடாக வழங்கப்பட வெண்டும்.

மாவிலாறு பூட்டியதால் ஒரு போக நெல் விதைத்தல் பாதிக்கப்பட்டதிற்கு அந்த மக்களுக்கு நிவாரணப் பணம் வழங்கிய அரசு காங்கேசன்துறையிலும் தென்மராட்சியிலும் சம்பூரிலும் 4 தொடக்கம் 15 வருடங்கள் வரை அவர்களின் வளம்மிக்க நிலங்களில் விவசாயம் செய்ய விடாது கால்நடைகளை வளர்க்க விடாது தடுத்ததற்கு எத்தகைய இழப்பீட்டினை வழங்கியது? பாதிக்கப்பட்ட அந்த மக்களும் இந்நாட்டுப்பிரசைகளாக இலங்கை அரசாங்கம் கருதினால் சிங்கள மக்களுக்கு உரித்தான அனைத்தும் தமிழ் மக்களுக்கும் உரித்தானது என இந்த அரசாங்கம் கருதினால் அந்த மக்களுக்குமான இழப்பீடுகளை வழங்க இந்த அரசு முன்வரவேண்டும். அப்படி வழங்காத பட்சத்தில் நீங்கள் பாரபட்சமான இனவாதத்தன்மைடி கொண்ட ஒரு அரசாங்கம் என்பதையே நிரூபித்திருப்பித்திருக்கின்றீர்கள் என்பதை இச்சபையில் நான் தெளிவாகப் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

(வலி வடக்கு) பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தென் மராட்சி சம்பூர் வன்னியில் யு 9 ற்கு கிழக்காக உள்ள பிரதேசம் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வளம்மிக்க நிலங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன. வந்தோரை உணவளித்து உயர்வித்த அந்த மக்கள் இன்று பஞ்சை பராரிகளாக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு உணவுக்குக் கையேந்தும் நிலையை ஏற்படுத்தியிருக்கின்றீர்கள். அந்த நிலையை ஏற்படுத்தியதின் பின்னர் அந்த மக்களிடம்போய் உங்களுக்கு உணவு வேண்டுமா? உரிமை வேண்டுமா என்று கேட்கின்றீர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ் மக்கள் உரிமைகளைக் கேட்கவில்லை அவர்கள் இருப்பதற்கு வீடும் உண்பதற்கு உணவும் கேட்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்கின்றீர்கள். உங்களது கேவலமான இந்நடவடிக்கைகட்கு நீங்களே வெட்கப்பட்டுள்கொள்ள வேண்டும்.

சம்பூரில் அனல் மின்னிலையம் அமைப்பது என்ற பேரில் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் கபளீகரம் செய்யப்பட்டு அதன் உரிமையாளர்கள் எந்த வசதியுமற்ற ஒதுக்குப்புறமான இடங்களிற்கு விரட்டப்பட்டுள்ளனர். அனல் மின்னிலையத்திற்கு அவ்வளவு இடம் தேவையில்லை என்பதுடன் இலங்கை வரலாற்றில் ஏதேனும் ஒர் அபிவிருத்தி திட்டத்திற்கு பத்தாயிரம் ஏக்கர் நிலம் பயன்படத்தப்பட்டுள்ளதா? இவை தனியார் நிலச்சுவீகரிப்புக்கான அனைத்து சட்டதிட்டங்களையும் நடைமுறைகளையும் மீறி இப்பாரிய நிலம் மக்களிடமிருந்து திருடப்பட்டுள்ளது. வடக்கின் வசந்தமும் கிழக்கின் உதயமும் மிச்சம் மீதமாக அந்த மக்களுக்கென உள்ள சிறு வளங்களையும் அபகரிக்கவும் சுரண்டவுமே செயற் திட்டங்கள் வகுக்கப்படுகின்றதேயன்றி அப்பிரதேச மக்களின் அபிவிருத்தியின் நோக்கின் பாற்பட்டதல்ல. உயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு உரியவர்களின் நிலங்கள் உரிய இழப்பீட்டுடன் உரிமையாளர்களுக்குச் சேர்க்கப்பட வேண்டும். இதற்காக அவ்வப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களையும் உரிய அதிகாரிகளையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு மீள் குடியேற்றம் விரைவு படுத்தப்பட வேண்டும்.

தமிழ் மீனவர்களின் வாழ்க்கை நிலையும் நந்திக்கடல் திட்டமும்

யுத்தம் முடிவடைந்து 16 மாதங்கள் கடந்தும் இன்னும் வடக்கு கிழக்கின் பல பிரதேசங்களில் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. முல்லைத்தீவு கரையோரம் முழுவதும் இன்னமும் அந்த மக்களுக்கு சூனிய பிரதேச மாக்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னிலங்கை மீனவர்கள் அங்கு வந்து மீன் பிடித்துச் செல்கின்றார்கள். 1983 இன் முன் இலங்கையின் மொத்த மீன் தேவையின் பாதிக்கு மேல் வடக்கு கிழக்கு மீனவர்கள் வழங்கி வந்தார்கள். 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களுக்கு அவர்களுடைய தொழில் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்டின் பாதிக்கு மேற்பட்ட கடலுணவும் கடலுணவு ஏற்றுமதி மூலம் இந்த நாட்டுக்கு பெருமளவு அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தந்த மக்கள் ஒன்றரை தசாப்தத்திற்கு மேலாக சொந்த இடத்தில் வாழும் உரிமை பொருளாதார சுதந்திரம் மறுக்கப்பட்டு உலக உணவுத்திட்டத்தின் தானியங்களில் தங்கி வாழ்வை ஓட்ட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு மேல் அரசாங்கம் அவர்களை குடியமர்த்துவதற்கும் அவர்களுடைய தொழில் உரிமையை மறுப்பதற்கும் கூறக்கூடிய எந்தக் காரணமும் தமிழின ஒழிப்புத் திட்டத்தின் அம்சங்களாகவோ தமிழ்த் தேசிய இனத்தின் மீதான சிங்கள மேலாதிக்கத்தை நிறுவும் முயற்சிகளாகவோ மட்டுமே நோக்க முடியும். எனவே வடக்கு கிழக்கு மீனவர் தொடர்பான இப்பாரபட்ச போக்குக்கு உடனடி முற்று புள்ளி வைக்கப்பட்டு வடக்கு கிழக்கின் அனைத்து மீனவர்களும் மீள்குடியேற்றப்பட்டு படகு வலைகள் இலவசமாக வழங்கப்பட்டு சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியைச் சேர்ந்த 350 குடும்பங்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு சிங்கறால் இறால் நண்டு போன்ற விலைமதிப்புள்ள மீனினங்களைப் பிடித்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு உதவி வந்தனர். இது அவர்களுக்கு நல்ல வாழ்வாதாரமாக அமைந்திருந்தது. சமீபத்தில் மீன் பிடித்துறை அமைச்சர் இந்தக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை சீனாவிற்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்போவதாகத் தெரிவித்துள்ளார் இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இச்செயல் எமது மக்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பதோடு மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கின்ற செயலாகும்.

கடந்த 20வருடங்களக காங்கேசன்துறையிலிருந்து தொண்டமானாறுவரையிலான கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் முற்றுமுழுதாகப் பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இராணுவத்தினரால் இடம் பெயர்க்கப்பட்டனர்.

இன்று யுத்தம் முடிந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த மக்கள் மீளக் குடியேறுவதற்கு அரசாங்கம் உரிய அக்கறை செலுத்த வேண்டும்.

வடக்கின் வசந்தமும் கிழக்கின் உதயமும்

வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என்பவற்றின் வேலைத்திட்டங்கள் என்ன? அவற்றுக்கான ஒதுக்கீடுகள் எவ்வளவு? அவற்றை முடிப்பதற்கான கால அட்டவணை என்ன? நாட்டின் அதியுயர் நிறுவனமான இச்சபையில் யாருக்காவது இதனைப்பற்றித் தெரியுமா? இவற்றுக்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்; இவை பற்றி முழுமையான தகவலை இந்த சபைக்கு வழங்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் போரால் அழிக்கப்பட்ட வைத்தியசாலைகளை முழுமையாக மீளக் கட்டி தேவையான நவீன உபகரணங்கள் மருத்துவர்களுடன் தொழிற்பட வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆதார வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகள் அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவ வசதிகளை செய்யக்கூடிய வகையில் தரமுயர்த்தப்பட வேண்டும். தேசியப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டது போல் வெறும் பெயர்ப்பலகை மாற்றங்களை நாம் இங்கு கோரவில்லை. தரமுயர்த்தல் என்பதற்கான உண்மையான அர்த்தத்தில் அவை செயற்பட வேண்டும். இவற்றுக்கு தேவையானயளவு நிதி ஒதுக்கீடு சுகாதார அமைச்சிலிருந்து வழங்கப்பட வேண்டும்.

இந்தப் போர் பல்லாயிரம் தமிழ் மக்களை அங்கவீனர்களாக ஊனமுற்றவர்களாக நீண்ட கால நோயாளிகளாக உள்ளார்ந்த உபாதை கொண்டவர்களாக (உடலுக்குள் செல் துண்டுகள்) பார்வைக்கு சாதாரணமாக தோன்றினாலும் உழைக்க முடியாதவர்களாக ஆக்கியிருக்கிறது. இவர்களில் எந்தத் தொழிலும் செய்ய முடியாத ஊனமுற்றோருக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்டு அவர்களின் வாழும் உரிமை நிறைவு செய்யப்பட வேண்டும். ஏராளமானோருக்கு அறுவைச் சிகிச்சைகள் நிபுணத்துவம் பெற்றவர்களால் செய்யப்படுவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். இவர்களுக்கு நிதியுதவி வழங்கி தமது ஆற்றலுக்கும் தமது உடல் நிலைக்குமேற்ற பொருத்தமான சுயதொழிலை மேற் கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

வீடமைப்பு

30 ஆண்டுகால யுத்தத்தில் தமிழ் மக்கள் இராணுவத் தாக்குதல்களால் பல தடவைகள் இடம்பெயர்க்கப்பட்டனர். ஒவ்வொரு இடப்பெயர்;வின் பொழுதும் ஒவ்வோர் குடும்பத்தினரும் தம் உயிர்களையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். சுனாமியால் வடக்கு கிழக்கில்தான் மிக அதிகமாக உயிர் உடமை அழிவுகள் ஏற்பட்டன. சுனாமித் தாக்கத்திற்காகக் கிடைத்த சிறு சிறு உதவிகள் தவிர எந்த வகை இழப்பீடும் அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. சுனாமி வீட்டுத்திட்டங்கள் கூட பல இடங்களில் பாதுகாப்பை காரணம் காட்டி செயற்படுத்தப்படவில்லை. உயிரிழந்தோர் குடும்பங்கள் சொத்துக்களை இழந்த குடும்பங்கள் இரண்டையும் இழந்த குடும்பங்கள் என ஏராளம் குடும்பங்கள் உள்ளன. இறுதியுத்தத்தில் இறந்த மக்களின் இறப்பு சான்றிதழை வழங்குவதில் பாதுகாப்புத்துறை தலையீடுகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

இறுதிக்கட்ட யுத்த தினங்களில் கொல்லப்பட்டோருக்கு உரிய தினங்களை விட்டு வேறு தினங்களில் இறந்ததாக பதியுமாறு அதிகாரிகள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். அதுமாத்திரமல்ல யுத்தம் முடிந்து 16மாதங்களாகிவிட்ட நிலையில் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. சிவில் நிர்வாகத்திடமிருந்து இராணுவம் முற்றுமுழுதாக விலகியிருக்க வேண்டும். சிவில் நிர்வாகத்தில் தீர்மானம் எடுப்பதிலிருந்தும் சிவில் நிர்வாக்த்தின் தீர்மானத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதிலிருந்தும் இராணுவம் முற்றாக விலக்கப்பட வேண்டும். சொத்துக்கள் குடும்ப உழைப்பாளர்களை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு முறையாக வழங்கப்பட வேண்டும்.

குறிப்பாக பல இலட்சம் வீடுகள் நிர்மூலமாக்கப்பட்;டு அந்த மக்கள் பல கட்டங்களில் இடம்பெயர்ந்தவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தென்மராட்சி வன்னி சம்பூர் பிரதேசங்கள் அடங்கலாக வடக்கு கிழக்க்pல் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டள்ளன. அந்த வீடுகள் மக்களுக்கு மீளவும் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் மீளக்குடியேற்றத்திற்கு வெறும் 3 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செலவினம் என்ற பெயரால் வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை கட்டியெழுப்புவதற்கு 202 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக அவர்களின் வீட்டுத்திட்டம் வாழ்வாதாரங்களுக்காக ஒதுக்கீடு செய்ய பணமில்லை. ஆனால் ஆட்சியாளர்களால் நிர்க்கதியாக்கப்பட்ட மக்களின் அரசியல் பொருளாதார கலாசார உரிமைகளைப் பறித்து அவர்களது அடையாளங்களை அழிக்க அல்லது நாட்டை விட்டு விரட்டி தங்கள் நீண்ட கால நோக்கமான இலங்கைத் தீவை சிங்கள பௌத்த மயமாக்குவதற்கு 68 மடங்கு அதிக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வீடு கட்ட பணம் இல்லை. கட்டிக் கொடுக்க முடியாது என ஜனாதிபதி எம்மிடம் கூறிவிட்டார். அப்படியானால் மூன்றரை இலட்சம் வீடுகளுக்கு பதில் ஒரு அறையுள்ள சிறிய வீடுகள் கட்டினால் கூட ஏறத்தாழ 5 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டக்கூடிய இந்த சொற்ப ஒதுக்கீடும் வீடு கட்ட வழங்கப்பட மாட்டாது. அப்படியானால் இத்தொகை எத்தகைய செலவுகட்கு என்பதை இம்மன்றத்தில் ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்த வெண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட உழவு இயந்திரங்களும் 30000க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்களும் அநேகமாக எல்லாவீடுகளிலும் துவிச்சக்கர வாகனங்களும் கொண்டவர்களாக அம்மக்கள் இருந்தனர். அதேபோன்று நீரிறைக்கும் இயந்திரங்கள் மருந்து தெளிக்கும் கருவிகள் உள்ளிட்ட பல விவசாய உபகரணங்களும் அவர்களிடம் இருந்தன. ஆனால் இன்று எல்லாம் இழந்த நிலையில் தமது வாழ்வாதாரங்களை மேம்படுத்த முடியாத நிலையில் இந்த மக்கள் இருக்கின்றனர். இவற்றின் ஒருபகுதியையாவது ஈடேற்றுவதற்கு இந்த அரசாங்கம் முன்வரவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய அரசுக்கு நன்றி சொல்ல வேண்டியவனாக நான் இருக்கின்றேன்.

புனர்வாழ்வு பணிகளில் உதவும் இந்திய அரசுக்கு நன்றி

இலங்கை அரசு மறுதலித்தபொழுதிலும்கூட வீடுகளை இழந்த மக்களுக்கு 50000 வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்தியா முன்வந்ததும் அந்த மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 500 உழவு இயந்திரங்களையும் ஏனைய விவசாய உபகரணங்களையும் கொடுக்க முன்வந்தமைக்கும் அழிவடைந்த பாடசாலைகளை புனர் நிர்மாணம் செய்து அதற்கான உபகரணங்களை வழங்க முன்வந்தமைக்கும் அதேபோன்று சிறு வியாபாரிகளை ஊக்குவிக்கவும் அவர்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்பும் முகமாக அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கும் இந்திய அரசு உறுதியளித்திருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் வடமாகாணத்தில் புகையிரதப்பாதை விமானநிலையம் துறைமுகம் போன்ற உட்கட்டுமானப் பணிகளையும் இந்திய அரசு செய்ய முன்வந்திருக்கின்றது. இவற்றிற்காக எங்களது ஆழ்ந்த நன்றியறிதலை இந்திய அரசிற்கும் இந்திய மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கின்றது.

இலங்கை அரசாங்கம் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுவிட்டார்கள் என்றும் இன்னமும் சிறிய தொகையினரே எஞ்சியுள்ளனரென்றும் உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்து வருகின்றது. உண்மையாகவே மீள்குடியேற்றம் என்பதன் பொருள் என்ன? முகாம்களிலிருந்த மக்களை இடைத்தங்கல் முகாம்களுக்குள் வைத்திருப்பதும் தற்காலிக கொட்டிhல்களில் வைத்திருப்பதும் அவர்களுக்கு எந்தவிதமான உதவிகளுமின்றி அலையவிடுவதும்தான் உங்களது மொழியில் மீள்குடியேற்றமா? உங்களிடம் மீள் குடியேற்றம் தொடர்பாக சரியான திட்டங்கள் கிடையாது. நான் ஏற்கெனவே கூறியது போன்று பாடசாலைகள் இன்னமும் உடைந்தநிலையிலேயே உள்ளன. அதேபோன்று பாடசாலைகள் இன்னமும் இராணுவமுகாம்களாகவே இருக்கின்றன. வைத்தியசாலைகள் செயற்பட முடியாத நிலையில் உள்ளன. சந்தைகள் துவம்சம் செய்யப்பட்ட நிலையில் இருக்கின்றது. கலாசார மண்டபங்கள் தரைமட்டமாக்கப்பட்டு அங்கு இராணுவ ஸ்தூபிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முழத்துக்கு முழம் யுத்த வெற்றியின் சின்னங்களே உருவாக்கப்பட்டு வருகின்றது. தனியார் நிலங்கள் உட்பட பாரிய நிலங்கள் யாவும் இராணுவக் கட்டுமானங்களுக்காகப் பறித்தெடுக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில்தான் உங்களது மீள்குடியேற்றம் அமைந்திருக்கின்றது.

நல்லாட்சியை கொண்டுவரவே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள்

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இதுவரைகாலமும் ஐரோப்பிய யூனியனினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி பிளஸ் என்ற ஏற்றுமதி வரிச்சலுகை வருகின்ற ஓகஸ்ட் மாதம் தொடக்கம் நிறுத்தப்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது. இலங்கை அரசாங்கம் இந்த நாட்டில் மனித உரிமைகள் நல்லாட்சி ஊடக சுதந்திரம் போன்ற விடயங்களில் சரியாக நடக்குமாக இருந்தால் இந்த வரிச்சலுகையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும். ஐரோப்பிய யூனியன் விதிக்கும் இம்முன்நிபந்தனைகள் இந்த நாட்டிற்கு உதவாத நிபந்தனைகள் அல்ல. இந்த நாட்டை ஒரு ஜனநாயகபூர்வமான மனித உரிமைகளை மதிக்கின்ற ஊழல் லஞ்சம் அற்ற நல் ஆட்சியை உருவாக்குகின்ற இன்னும் சொல்லப்போனால் உண்மையான மக்களாட்சியை உருவாக்குகின்ற வகையிலேயே அவர்களின் நிபந்தனைகள் இருக்கின்றன.

ஆனால் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. அந்நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதானது உள்நாட்டு விவகாரங்களில் ஐரோப்பிய யூனியன் தலையிடுவதாக இருக்கும் என காரணம் கற்பிக்கின்றது. ஆனால் உண்மை என்ன? இவர்களால் ஜனநாயக ஆட்சியை நடத்தமுடியாது. இவர்களால் ஊழலற்ற ஆட்சியை நடத்த முடியாது. இவர்களால் நல்லாட்சியைக் கொண்டுவர முடியாது. மனித உரிமைகள் பத்திரிகை சுதந்திரம் போன்றவற்றை இவர்களால் கட்டிக்காப்பாற்ற முடியாது. இதுவரையில் யுத்தத்தைக் காரணம் காட்டி வந்தவர்கள் யுத்தம் முடிவுற்ற நிலையிலும்கூட இன்னமும் அதே அராஜக ஆட்சியைத் தொடர்கின்றார்கள். உங்களது தான்தோன்றித்தனமான போக்கு 2இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்ப வழிவகுக்கப் போகின்றது. உங்களது தான்தோன்றித்தனமான போக்கு இந்நாட்டின் பொருளாதாரத்தைக் குட்டிச்சுவராக்கப் போகின்றது. கிடைக்கின்ற நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடுகின்ற உங்களது நடைமுறையானது வீம்புத்தனமாக இருக்கலாமே தவிர விவேகமானதல்ல.

யாரையும் நம்பமுடியாத நிலையில் மக்கள்

கௌரவ சபாநாயகர் அவர்களே!

யுத்தம் முடிந்திருக்கின்ற சூழலில் இன நல்லிணக்கம் பற்றிப் பேசப்படுகின்றது. அபிவிருத்தி பற்றிப் பேசப்படுகின்றது. ஆனால் நடைமுறையில் வடக்கு-கிழக்கின் அபிவிருத்தி என்பது முழுமையாக நிராகரிக்கப்பட்டதாகவும் அங்கிருக்கக்கூடிய மக்கள் எவ்வித நம்பிக்கையுமின்றி அவர்கள் இன்னமும் கொடிய பஞ்சமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு ஆண்டவனைத் தவிர யாரையுமே நம்ப முடியாது என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். வடக்கு-கிழக்கில் இருந்த கடத்தல் கப்பம் வாங்குதல் கொலை கொள்ளை போன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அங்கிருந்த நீதிபதிகள் சிலர் துணிச்சலுடன் முயற்சி மேற்கொண்டார்கள். ஆனால் அவர்கள் யாவரும் இன்று பல்வேறுபட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பல்வேறுபட்ட வழக்குகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்படக்கூடாது என நீதிமன்றப் பதிவாளர்களும் சில சமயங்களில் நீதவான்களும்கூட மிரட்டப்படுவதாக அறியப்படுகின்றது. இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நேர்மையோடும் துணிவோடும் நீதித்துறையில் செயற்படும் நீதிபதிகளும்கூட மாற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதுமாத்திரமல்ல வடக்கு-கிழக்கு மாகாணங்களின் நிர்வாகக் கட்டமைப்புக்களில் வேலை செய்யும் உத்தியோகத்தர்கள் அங்கிருக்கின்ற ஆளுநர்கள் விரும்பியவாறும் இராணுவத்தளபதிகள் விரும்பியவாறும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். உண்மைக்கும் நேர்மைக்கும் விரோதமாக அரசாங்கத்தின் கபடத்தனமான நிகழ்ச்சிகளை நிறைவேற்றுவதற்கு இவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்களின் நிர்ப்பந்தத்திற்குப் பணியாவிட்டால் இவர்கள் மிகமோசமான வழிகளில் பழிவாங்கப்படுகிறார்கள். இவையெல்லாம் ஒரு ஆரோக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கோ இன நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கோ ஒருநாளும் உந்துசக்தியாக இருக்காது. மாறாக நம்பிக்கையீனங்களும் இடைவெளிகளும்தான் அதிகரிக்கும்.

மீள்குடியேற்றத்துவதற்கென மெனிக்பாம் முகாம்களிருந்து கொண்டு வரப்பட்டு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பல மாதங்களாக தங்க வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த 1100 ற்கும் மேற்பட்ட மக்களை மீண்டும் தங்கள் சொந்த காணிகளுக்கு அனுப்ப மறுத்து வருகிறீர்கள். இராணுவம் இதற்குத் தடையாக இருப்பதாக நாங்கள் அறிகின்றோம். ஆனால் உங்கள் இராணுவத் தளபதி பொசன் பண்டிகையின்பொழுது கண்டி மகாநாயக்கர்களிடம் ஆசிவாங்கச் சென்ற வேளையில் வடக்கு-கிழக்கில் தாங்கள் நிரந்தர இராணுவக்குடியிருப்புக்களை நிறுவி வருவதாகவும் அங்கு இராணுவத்தினர் குடும்பத்துடன் குடியேற்றப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு வயல்காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருக்கக்கூடிய ஒரு சில மாவட்டங்களில் அவர்களைச் சிறுபான்மையினராக ஆக்கி படிப்படியாக அவர்களை இல்லாதொழிப்பது என்ற சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலை இராணுவத்தளபதியே பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்துள்ளார். நீங்கள்தான் தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் நல்லிணக்கம் தொடர்பாகவும் பேசுகின்றீர்கள்.

காங்கேசன்துறையில் சுண்ணாம்புக்கல் சுரண்டல்

கௌரவ சபாநாயகர் அவர்களே!

யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்காக அதனைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் முன்னர் சுண்ணாம்புக்கல் அகழப்பட்டுவந்தது. ஆனால் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டு 20ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும்கூட அங்கிருந்த சுண்ணாம்புக்கல் மிகப் பாரிய அளவில் அகழப்பட்டு தென்பகுதிக்கு அனுப்பப்படுகின்றது. கடல்நீர் நாட்டுக்குள் புகுமளவிற்கு இந்த அகழ்வுவெலை இன்றும் நடைபெற்று வருகின்றது. இவற்றை நிறுத்தும்படி பலகோரிக்கைகள் விடுத்தும்கூட இவை இன்னமும் நிறுத்தப்படவில்லை. இந்தச் சுண்ணாம்புக்கல் யாரால் என்ன தேவைக்காக அகழப்படுகின்றது என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இந்தப் பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இப்படியான அகழ்விற்கு சூழல் பாதுகாப்புச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பதை இந்த சபைக்குத் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமன்றி இந்த அகழ்வுப்பணிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதா? அல்லது தனிநபர்கள் மேற்கொண்டுள்ளனரா? என்பதையும் இந்த சுண்ணாம்புக்கல்லில் இருந்து வருகின்ற வருமானம் எங்கு சென்றடைகின்றது என்பதையும் இச்சபைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அதேசமயம் யாழ் மாவட்டத்தில் மணல் அகழ்வு வேலை மகேஸ்வரி மன்றம் என்னும் சட்டபூர்வமற்ற நிறுவனத்திடம் முழுமையாக சுரங்க மற்றும் கனிமவளத் திணைக்களத்தினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் மணல் பெற்றுக்கொள்ள கட்டட நிர்மாணத்தில் ஈடுபட்டிருப்போர் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த மகேஸ்வரி நிறுவனமானது பலநூறுகோடி ரூபாய்களை இந்த மணல் வியாபாரத்திலிருந்து கொள்ளை இலாபமாகப் பெற்றுக்கொள்கின்றது. சட்டபூர்வமற்ற இந்த மகேஸ்வரி நிறுவனத்திற்கு எந்த அடிப்படையில் மணல் அகழ்விற்கான உரிமம் வழங்கப்பட்டது என்பதையும் இவர்கள் பெற்றுக்கொண்ட சட்டபூர்வமான மற்றும் சட்டபூர்வமற்ற நிதி தொடர்பான கணக்கு வழக்குகள் யாராலாவது சரிபார்க்கப்படுகின்றதா அல்லது அதுதொடர்பான ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்பதை சம்பந்தபட்ட அமைச்சர்கள் இந்த சபைக்கும் தமிழ் மக்களுக்கும் அறியப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்வதுடன் இப்படியான சட்டபூர்வமற்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் நேர்மையான முறையில் தமது கட்டட நிர்மாணங்களுக்கு மணல் பெற்றுக்கொள்ள ஆக்கபூர்வமான மாற்றுவழிகள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்திய சினிமா நடிகர்களின் புறக்கணிப்பு

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இந்தமாத ஆரம்பத்தில் IIFA என்றழைக்கப்படும் இந்திய திரைப்பட சங்கத்தின் விருது வழங்கும் விழா ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் கொழும்பில் அரங்கேற்றப்பட்டது. அமிதாப்பச்சன் உலக அழகி ஐஸ்வர்யாராய் உட்பட பலநூறு கலைஞர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது. கொரியாவில் நடக்க இருந்த இந்த விழாவை மிகப்பலத்த பிரயத்தனத்தின் பின்னர் கொழும்பிற்கும் கொண்டுவந்து சேர்த்தார்கள். ஆனால் தென்னிந்திய திரைப்படத்துறையினரின் பலத்த போராட்டத்தின்காரணமாக அமிதாப்பச்சன் உட்பட பிரபல்யமான நடிகர் நடிகைகள் இதில் கலந்துகொள்வதைத் தவிர்த்தனர். இதனால் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்த வருமானத்திற்குத் தோல்வியேற்பட்டதுடன் இந்தவிழாவினூடாக பொருளாதாரரீதியில் இவர்கள் எதிர்பார்த்த சகல விடயங்களும் தோல்வியில் முடிந்தன. இலங்கை தமிழ் இனப்பிரச்சினைக்கு இந்த அரசாங்கம் ஒரு நீதியான நேர்மையான தீர்வை எட்டியிருக்குமாக இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்திடமிருந்து எத்தகைய எதிர்ப்பும் வந்திருக்காது இந்த விழாவும் சிறப்பாக நடந்திருக்கும்.

அரசாங்கத்தின் சிங்கள பௌத்த மேலாதிக்கவாத சிந்தனையால் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்திருக்கும் நிலைப்பாடானது அரசாங்கத்திற்கு எவ்வளவு பாரிய பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குகின்றது என்பதை இனியாவது நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைபோன்ற சிறிய நாட்டிற்கு ஆயிரம் மில்லியன் இழப்பென்பது ஒரு சாதாரண இழப்பல்ல. ஒருபக்கத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ்ஸிற்கு மூடுவிழா அதேபோன்று IIFA திருவிழாவிலும் 1000மில்லியன் இழப்பென்பதெல்லாம் அரசாங்கத்தின் தூரநோக்கற்ற சிந்தனையால் ஏற்படுகின்ற மகாமோசமான பின்விளைவுகளாகும். அரசாங்கம் யுத்தத்தில் வென்றிருக்கலாம். ஆனால் இனப்பிரச்சினை என்பது தீர்க்கப்படாமல் இன்னமும் அவ்வாறே இருக்கின்றது. இந்த நிலை தொடரும்வரை இலங்கை அரசாங்கத்தால் பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது என்பதுடன் எந்தக்காலத்திலும் இது ஆசியாவின் அதிசயமாகவும் மாற முடியாது.

இறுதியாக எனது நண்பர் கௌரவ சுமந்திரன் அவர்கள் நேற்றைய தினம் இந்தப் பாராளுமன்றத்தில் உரையாற்றியபொழுது குறுக்கிட்ட பிரதி நிதியமைச்சர் கலாநிதி அமுனுகம அவர்கள் வடக்கு-கிழக்கில் ஏற்படுத்தப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆவணத்திலிருந்து ஒரு போட்டோபிரதியைக் கொடுத்திருந்தார். இது 2008ஆம் ஆண்டுக்கு முன்னர் எடுக்கப்பட்ட மதிப்பீடுகள். கடந்த வருடம் யுத்தத்தினால் ஏறத்தாழ இரண்டு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்தவீடுகள் கட்டுவது தொடர்பாக கேட்கப்பட்டதற்கும் 2008ஆம் ஆண்டிற்கு முன்னரான மதிப்பீட்டைக் காட்டுவதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளைக் கட்ட இலங்கை அரசாங்கம் ஒரு சதத்தையும் செலவழிக்கவே இல்லை என்பதே உண்மை. எப்பொழுதோ எடுக்கப்பட்ட மதிப்பீடுகளைக் காட்டி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டுவதாகக் கூறுவது இந்தப் பாராளுமன்றத்தையே ஏமாற்றுவதான ஒரு செயலாகும். ஆகவே தமிழ் மக்களுக்கு விரோதமான பொருளாதார அபிவிருத்திக்கு விரோதமான பாரிய இராணுவ கட்டுமானங்களை ஆக்குகின்ற ஏறத்தாழ ஒரு இராணுவ வரவு-செலவுத்திட்டம் போன்ற இந்த வரவு-செலவுத்திட்டத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.