[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூன் 2010, 05:38.19 AM GMT +05:30 ]
பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு கைது செய்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட கே.பி. என்ற நபரை வடக்கிலுள்ள அகதி முகாம்களுக்கு இராஜ மரியாதையுடன் அழைத்துச் சென்ற நிலையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களை அகதி முகாம் வாசலில் வைத்து உட்செல்ல அனுமதி மறுத்து திருப்பியனுப்பியது ஜனநாயகமா? எனத் த.தே.கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும், தற்போது இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளவருமான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை அரச சாட்சியாளராக ஏற்றுக்கொள்ள சட்டத்தில் இடமிருப்பதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை தொடர்பில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுரேஸ் பா.உ.,
கே.பி. என்பவர் பயங்கரவாதியாக சர்வதேச ரீதியாகத் தேடப்படும் ஒரு நபராகவே இதுவரை காலமும் இருந்து வந்தார்.
ஒரு பயங்கரவாதியைத் தாங்கள் கைது செய்து விட்டோமென்று இலங்கை அரசாங்கம் பாரிய பிரசாரங்களைக் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தது.
அப்படிப்பட்ட ஒருவரை இங்கு கொண்டு வந்து அரசாங்கத்தின் சாட்சியாளராக மாற்ற முனைவது வேடிக்கையான, விந்தையான விடயம். இது அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகின்றது.
இலங்கையில் யுத்தக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பது தொடாபில் ஆராய்வதற்காகவே ஐக்கிய நாடுகள் தற்போது மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.
ஆனால், கே.பி. என்பவர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற காலத்தில் அந்த மண்ணில் இருந்த ஒருவரல்ல. அவர் இலங்கையை விட்டு வெளியேறி இருபத்தைந்து வருடங்களாகின்றன. இப்படிப்பட்ட ஒருவரின் சாட்சியம் என்பது எவ்வாறு இருக்கப் போகிறதென்பது என்பது ஒரு கேள்வியாகும்.
கே.பி. என்பவர் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் நபர் என்பது இன்று சர்வதேசம் அறிந்த விடயம். அவரிடமுள்ள நிதிவளத்தினைப் பெற்றுக் கொள்வதற்காகவும் வேறு சில தேவைகளுக்காகவுமே அரசாங்கம் இன்று அவரை வைத்துக் கொண்டிருக்கிறது.
சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் ஒருவரை இன்று அரசாங்கம் சொகுசான மாளிகையில் வைத்துள்ளது. அத்துடன் வடக்கு,கிழக்குக்கு சுதந்திரமாகச் சென்று வரவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இவையெல்லாம் இந்த அரசாங்கத்தின் நீதி, நேர்மையற்ற செயற்பாடுகளையும் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து தமது தேவைகளுக்காக யாரையும் எதனையும் எப்படியும் பாவிக்கலாமென்ற வெட்கம் கெட்ட தனத்தையுமே காட்டுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.