[திகதி: 03.06.2010 // தமிழீழம்]
பல தமிழ்த் தேசிய ஊடகங்கள் மற்றும் தேசியத்திற்கு ஆதரவான ஆய்வாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள், கொலை மிரட்டல், வன்முறையைத் தூண்டுதல், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் “யாழ்”; இணையம் இறங்கியுள்ளது தொடர்பில் நாம் இந்த பகிரங்க மடலை வெளியிடுவதுடன். இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம் என ஈழம் ஈ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த வாரம் ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்களும், ஆய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் தான் காரணம் என ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் எமது ஊடகம், அதன் ஊடகவிலயாலர்கள் சக ஊடகங்கள் மற்றும் சக ஊடகவியலாளர்கள் மீது அவதூறு மற்றும் கொலை அச்சுறுத்தல் ஒன்றை யாழ் இணையத்தில் “சுமங்களா” என்பவர் மேற்கொண்டுள்ளார்.
ஆதாரமற்ற இந்த செய்தியின் மூலம் சம்மந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள், வன்முறைமிக்க பயங்கரவாத கும்பல்கள் மற்றும் அன்னிய புலனாய்வு சக்திகளினால் சம்மந்தப்பட்ட ஊடகங்கவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளன. இது தொடர்பில் நாம் ஜேர்மன் காவல்துறையினருக்கும், அதன் புலனாய்வு கட்டமைப்புக்கும், ஜேர்மனிய அரசுக்கும் முறைப்பாடுகளை செய்ய முடிவெடுத்துள்ளோம்.
எனவே யாழ் இணையம் எமக்கு “சுமங்களா” என்ற தனது கருத்துக்கள “முகமூடி” மனிதரின் விபரங்களை உடனடியாக தந்து உதவுவது அவசியமானது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் அவர் வதியும் நாட்டின் காவல்துறை மற்றும் ஊடக வன்முறைகளுக்கு எதிரான அமைப்புக்கள் மூலம் நடவடிக்கைகளை எடுக்க முடியும். யாழ் இணையம் “சுமங்களா” என்ற நபரின் விபரங்களை தரமறுக்கும் பட்சத்தில் நாம் யாழ் இணையத்தின் மீது இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவோம்.
மேலும் “DAM” என்ற யாழ் இணையத்தின் மற்றுமொரு “முகமூடி” நபர் எமது ஊடகங்கள் உட்பட தமிழ்த் தேசிய ஊடகங்கள் மற்றும் தேசியத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்களை பிரான்ஸ் நாட்டு புலனாய்வுத்துறை மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினருடன் சம்பந்தப்படுத்தி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் கருத்துக்கள் தொடர்பில் நாம் பிரான்ஸ் நாட்டில் உள்ள எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு மற்றும் பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு அமைப்பு ஆகியவற்றிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.
“DAM” என்பவர் தனது செய்திக்கான ஆதராங்களை சமர்ப்பிக்குமாறு நாம் கேட்டுள்கொள்வதுடன், அவரின் விபரங்களை யாழ் இணையம் எமக்கு உடனடியாக அனுப்பி வைக்கவேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் அவர் வதியும் நாட்டின் காவல்துறை மற்றும் ஊடக வன்முறைகளுக்கு எதிரான அமைப்புக்கள் மூலம் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
யாழ் இணையம் “DAM” என்ற தனது கருத்துக்கள முகமூடி நபரின் விபரங்களை தரமறுக்கும் பட்சத்தில் நாம் யாழ் இணையத்தின் மீது இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மிக மோசமாக கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையாகவே நாம் இதனை கருதுவதால், யாழ் இணையத்தின் இணையத்தளக் கட்டுப்பாட்டாளர் வதியும் நோர்வே நாட்டு அரசுக்கும், அதன் காவல்துறைக்கும் எமது முறைப்பாடுகளை மேற்கொள்வதுடன், எமது உயிருக்கு பாதுகாப்பு கோரி கோரிக்கைகளையும் விடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
எமது உயிருக்கான பாதுகாப்புக்களை நோர்வே அரசு வழங்கவேண்டும் என்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு, அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, பிரான்ஸ் நாட்டின் புனாய்வுத்துறை, ஜேர்மன் நாட்டு காவல்துறை உட்பட எல்லா அமைப்புக்களிடமும் முறைப்பாடுகளை மேற்கொள்ள நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். யாழ் இணையத்தின் ஊடகப்பயங்கரவாதத்தில் இருந்து எமது உயிருக்கான பாதுகாப்புக்களை வழங்குமாறும் கோரவுள்ளோம்.
இந்த கோரிக்கைகளின் பிரதிகள் சில தினங்களில் எமது தளத்தில் மக்களின் பார்வைக்காக இணைக்கப்படும். முள்ளிவாய்க்காலில் எமது தேசிய விடுதலைப்போராட்டம் சந்தித்த பெரும் போரை ஒத்த ஒரு சமரை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் தற்போது சந்தித்துள்ளனர். இதனை நாம் வெற்றிகொள்ளும் போது தான் எமக்கான வளமான ஊடகத்துறையை நாம் உருவாக்கிக் கொள்வதுடன் எமது விடுதலையை விரைவுபடுத்தவும் முடியும்.
இதில் நாம் தோல்விகண்டால் எமது தேசியத்தின் கொள்கைகளும், விடுதலை வேட்கையும் புலம்பெயர் நாடுகளிலும் பேரழிவை சந்திக்கும் என்பதில் ஜயமில்லை.
எனவே தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவிலயாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல், அவதூறு பரப்பியமை, பயங்கரவாதத்தை தூண்டியமை தொடர்பில் நாம் யாழ் இணைத்தின் நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யதிருக்கிறோம்.
இந்த வழக்கை தமிழ் மக்களின் உதவியுடன் நாம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். எமது மக்களின் பங்களிப்புக்களுடன் நாம் யாழ் இணையத்தின் இந்த ஊடகப்பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்.
இங்கனம்,
ஈழம் ஈ நியூஸ் நிர்வாகம்.
யாழ் இணைய நிர்வாகிகளுக்கு நாம் அனுப்பிய கடிதம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு,
வணக்கம்
கடந்த மே 31 ம் நாள் உங்கள் தளத்தில் “காட்டிக்கொடுப்புக்கள் யாரால்? எங்கே?” என்ற தலைப்பில் சுமங்களா என்பவர் ஒரு “செய்தி”யை (?) இணைத்திருந்தார். அதில் பல தமிழ் ஊடகங்களுடன் எமது ஊடகத்தையும் (ஈழம்ஈநியூஸ்) சேர்த்து சிறீலங்கா புலனாய்வுத்துறையினருடன் சேர்ந்து நாம் இயங்குவதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து “DAM” என்பவர் பிரெஞ்சு புலனாய்வுத்துறையினுடாக சக ஊடகவியலாளர்கள் சிறீலங்கா புலனாய்வுத்துறைக்கு விற்கப்பட்ட “கதை” எழுதியிருக்கிறார். இது தொடர்பாக உங்களிடம் சில விளக்கங்களை எதிர்பார்க்கிறோம். “சுமங்களா” என்பவர் யார்? அவர் ஒரு ஊடகவியலாளரா? அல்லது உங்கள் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரா? அது ஒரு செய்தி ஆய்வா? அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா? உங்கள் தளத்தில் தனிப்பட்ட கருத்தையும் இணைத்து யாரையும் வசைபாடலாம் கொலை அச்சுறுத்தல் விடலாமா? அப்படியென்றால் நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஊடகமா? கட்டப்பஞ்சாயத்தா? அல்லது விபச்சாரவிடுதியா? இதற்கு ஏன் தமிழ்த்தேசியம் என்ற போலி முகமூடி?
ஏற்கனவே நீங்கள் எம்மீது அவதூறு பரப்பியதன் பொருட்டு உத்தியோகபூர்வமாக நாம் எழுதிகேட்டிருந்த இரு கடிதங்களுக்கு பதில் தரவில்லை. இப்போது தங்களது மேற்படி நடவடிக்கை அவதூறு குற்றச்சாட்டுக்கள், கொலை மிரட்டல், வன்முறையைத் தூண்டுதல், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளின் அடிப்படையில் உங்கள் மீது வழக்கு தொடுக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு எம்மைத் தள்ளியுள்ளது.
பின்வரும் தகவல்களை தருவதனூடாக எமது சட்டரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பீர்கள் என்று நாம் நம்புகிறோம்.
01. எமது வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கும் எமது வழக்கறிஞர் வழக்கு தாக்கல் தொடர்பான விடயங்களை அனுப்பி வைப்பதற்கும் தளக்கட்டுப்பாட்டாளரின் முழுப்பெயர் மற்றும் நிரந்தர வதிவிட விலாசம்.
02. சுமங்களா என்ற நபர் குறித்தான தங்களிடமுள்ள முழு விபரம்.
03. “DAM” என்ற நபர் குறித்தான தங்களிடமுள்ள முழு விபரம்.
நீங்கள் மேற்படி விபரம் எதனையும் தரமறுக்கும் பட்சத்தில் தங்கள் மின்னஞ்சலுக்கு வழக்கு விபரம் அனுப்பி வைக்கப்படும். “சுமங்களா” மற்றும் “DAM” ஆகிய முகமூடி மனிதர்களின் விபரம் எமக்கு தெரியாததால் அவர்கள் குறித்த காவல்துறை முறைப்பாடு மற்றும் வழக்குதாக்கல் விபரங்கள் யாழ் மின்னஞ்சலுக்கே அனுப்பி வைக்கப்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஏனெனில் அவர்கள் ஊடகவியலாளர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்தது மட்டுமல்ல பிரெஞ்சு மற்றும் ஜெர்மானிய அரச காவல்துறை மீதும் பழி போட்டு பெரும் பயங்கரவாத அச்சுறுத்தலை தோற்றுவித்திருக்கிறார்கள். சம்பந்தபட்டவர்கள் நீதிக்கு முன் நிறுத்த வேண்டிய பெருங்கடமை எமக்கு இருப்பதையும் சுட்ட விரும்புகிறோம்.
பொய்யான ஆதாரமற்ற தகவல்களை வெளியட்டதனூடாக தமிழ் உடகவியலார்களின் உயிர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தமை மற்றும் அவதூறு பரப்பியமை தொடர்பாக தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சுமங்களா, DAM ஆகிய இருவர் மீதும் தனிப்பட்ட முறையில் வேறு வழக்குகள் பதிவு செய்யப்படும். அவர்களது விபரங்களை நீங்கள் தரமறுக்கும் பட்சத்தில் அவர்களது வழக்குகளையும் உங்கள் மீதே தொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
ஈழம்ஈநியுஸ் நிர்வாகம்.
குறிப்பு : நாற்பத்து எட்டு மணிநேரங்களுக்குள் எமக்கு சுமங்களா, DAM ஆகியவர்களின் விபரங்கள் அனுப்பப்பட வேண்டும் என நாம் யாழ் இணைநிர்வாகத்தினரை மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி: ஈழம்ஈநியுஸ்
வணக்கம்
மேலே கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக நாமும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
நன்றி
சங்கதி