[Athirvu.com, 18 April 2010]
இந்தக் கட்டுரையானது இலங்கை மத்திய அரசின் பாராளுமன்றச் செயலகத்தின் மேலதிக செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற மற்றும் சென்னையிலுள்ள Institute For Topical Studies நிறுவனத்தின் பணிப்பாளருமான பி.ராமனால் எழுதப்பட்டது.
இலங்கைக்குள் சீனர்கள் படையெடுக்கிறார்கள்
• சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நெருங்கிய உறவுகளைப் பேணுவதில் இலங்கைக்கு உரிமையுள்ளது. இதை இந்தியா சட்டரீதியாக எதிர்க்கமுடியாது.
• அதே நேரம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் கேடு விளைவிக்கக்கூடியதான அந்த உறவுகளின் பல்வேறு நோக்குகள் குறித்துக் குறிப்பெடுப்பதும் அதற்குப் பொருத்தமான கொள்கை மாற்றங்களை ஏற்படுத்துவதும் இந்திய அரசாங்கத்தின் கடமையாகும்.
• இக்கொள்கையானது இலங்கையில் அவர்களின் செல்வாக்கைத் தீவிரமாகக் கணக்கெடுப்பதாக அல்லது இலங்கையுடன் எங்கள் ஆர்வத்தை மேம்படுத்துவதாக அல்லது இரண்டின் கலவையாகவும் இருக்கலாம்.
• இன்னொரு மறுதாக்கம் செயலாக்கத்தைத் தூண்டுவதும், தடையேற்படுத்துவதுமாக இரண்டும் கலந்ததாக இருக்கலாம் - தூண்டுவது என்பது இலங்கையின் முயற்சிக்கேற்றாற் போல செயற்பட்டு சீனா அல்லது பாகிஸ்தானைவிட இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்துவதாகும், தடையேற்படுத்துவது என்பது இந்தியாவின் கருத்துக்கள் ஆர்வங்களுக்கு சாதகமான நிலை ஏற்படுவதாகும்.
• இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இந்தியாவில் பாரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவது, இலங்கையுடன் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பகிர்வது, இரு நாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் உலகத்துடன் வலைப்பின்னலை ஏற்படுத்துவது ஆகியவற்றின்மூலம் இலங்கையை எம்பக்கம் திருப்பலாம்.
• இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளிலும், இலங்கை சமூகத்தின் மிகப்பெரிய பிரிவுகளிலுள்ள இந்தியாவுக்கான நல்லெண்ணத்திலும் இலங்கையின் சுற்றுலாத்துறைப் பொருளாதாரம் தங்கியிருப்பதால் பாரம்பரிய அழுத்தங்களைப் பயன்படுத்தி பலமான தடையை இலங்கையில் ஏற்படுத்தலாம்.
• துரதிர்ஷ்டவசமாக, விரிவான, செயலாற்றக்கூடிய கொள்கை மாற்றத்தில் நாங்கள் இனித்தான் பணியாற்றவேண்டும்.
• சீனாவின் அதிகரித்துவரும் ஆதிக்கம் மற்றும் உள்நோக்கங்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு கேடென நாங்கள் கவலைப்படுகிறோம், ஆனால் அதை நாங்கள் வெளியில் கூறவில்லை. இந்திய மற்றும் சீன ஈடுபாடுகள் இலங்கையில் ஒருபோதும் மோதலை உண்டாக்காது என நாங்கள் பாசாங்கு செய்கிறோம், இதை எங்கள் கவனத்தில் எடுத்துவிடுவோம் என ஒரு கருத்தை ஏற்படுத்தப் பாடுபடுகிறோம்.
• எங்கள் கொள்கை பதிலளிப்பானது, அப்படி ஏதேனும் இருந்தால், அது குறிப்பிட்ட நோக்கத்துக்கானது, ஆனால் மேற்படி தாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் உடனடி மற்றும் நீண்ட கால ஈடுபாடுகளுக்கு முக்கியத்துவம் இல்லாதது.
• மாறாக சீனாவின் கொள்கை இன்றைய, நாளைய மற்றும் நாளை மறுநாளைய ஆர்வங்களையெல்லாம் அடக்குகிறது. அது தனிப்பட்ட ஒன்றுக்கென அமைக்கப்பட்டது அல்ல.
• சீனா தெற்காசியாவின் சக்தியாக இல்லை என்றாலும்கூட, அது பாகிஸ்தான், இலங்கை, மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் கவனமாக வளர்த்துள்ள உறவுகளின் மூலம் தெற்காசிய நாடுகளில் மூர்க்கத்தனமாக நுழைந்துள்ளது.
• சீனா இந்து சமுத்திரத்தின் சக்தியும் அல்ல, ஆனால் மியன்மார், பங்களாதேஷ், இலங்கை, மாலைதீவு, மௌரிட்டியஸ் & ஷைசெல்ஸ் ஆகியவற்றின் தொடர்புகள் மூலம் அதை அடைய எண்ணுகிறது.
• தெற்காசிய மற்றும் இந்து சமுத்திரத்தின் அதிகாரம் இந்தியாவிடம் உள்ளது, ஆனால் இதன் தெற்காசிய மற்றும் இந்து சமுத்திர ஆதிக்கமானது இந்தியாவை விலக்கி சீனா படையெடுப்பதால் கரைந்துவருகிறது.
• இந்த கட்டுரை பாகிஸ்தானை அல்லாது சீனாவின் ஆதிக்கத்தையே கருத்திலெடுக்கிறது. இலங்கையூடாக இந்தியாவுக்கு பாகிஸ்தானால் ஏற்படும் அச்சுறுத்தல் திட்டமிட்ட ஒன்றைவிட தந்திரமானது, ராணுவரீதியானதைவிட சதித்திட்டத்தால் ஆனது, பொருளாதாரரீதி அன்றி அரசியல்ரீதியானது. சீனா ஒரு ராட்ஷதன், ஆனால் பாகிஸ்தான் இப்போதும் ஒரு குண்டூசி தான்.
• சீனாவும் பாகிஸ்தானும் இரட்டைக் குதிரைவண்டிபோல இலங்கையில் செயல்படலாம் என்பதிலும், இந்தியாவின் ஆதிக்கத்தை மாலைதீவு குழிதோண்டிப் புதைக்கலாம் என்பதிலும் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இது நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய வழி இன்னமும் அமையவில்லை, ஆனால் நீண்ட கால நோக்கில் இது நடக்கலாம். இதை எங்கள் கொள்கைமூலம் முளையிலேயே கிள்ளிவிடவேண்டும்.
பொதுவான கவனிப்புகளும் மேற்கோள்களும்
• ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்கீழ், சீனாவின் வருகை மற்றும் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 3 தடவைகள் சீனா சென்றுள்ளார், இருதரப்பு உறவுகள், விஜயங்கள் அதிகரித்துள்ளன. சீனாவில் தனது இரண்டாவது துணைத்தூதரகத்தை செங்குடு என்ற இடத்தில் இலங்கை திறந்துள்ளது, அதேவேளை அந்த இடத்தில் பாகிஸ்தான் தூதரகம் ஏற்கனவே உள்ளது. இந்த இடம் சீனாவின் ராணுவத் தளமும் கூட.
• "சீனாவும் இலங்கையும் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் நட்பு நாடுகள். இலங்கைக்கு அழுத்தமான வேளைகளில் சீனா ஒருபோதும் கைவிடுவதில்லை" என ஏப்ரல் 2008 இல் சீன உதவியுடன் இலங்கையில் கட்டப்படும் கலைக்கூட ஆரம்பவிழாவில் மஹிந்த பேசினார்.
• "இரு நாடுகளினதும் நட்பு நீண்டகாலம் சோதிக்கப்பட்டது, நாம் சோதிக்கப்பட்ட நண்பர்கள். இலங்கையானது ஒரு-சீன கொள்கை குறித்து ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்தாது" என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவை வரவேற்றபோது செப்டம்பர் 4, 2009 இல் தெரிவித்தார் மஹிந்த.
• "இலங்கையுடனான உறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்க சாமாதானமான வாழ்வின் ஐந்து கொள்கைகளின் அடிப்படையில் சீன அரசாங்கம் பெருமுயற்சி எடுக்கிறது. சீன பெருநிறுவனங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கட்டவுள்ளன. சாதாரண வியாபாரத் தொடர்பினைத் திரித்துக்கூற எதுவித ஆதாரமும் இல்லை. சமூக உறுதி, பொருளாதார அபிவிருத்தி, இனப்பிரச்சனைக்கான தீர்வு ஆகியன இலங்கை மக்களின் அடிப்படை அபிலாஷைகள். இந்த நோக்கம் வெகுவிரைவில் அடையப்படும் என நம்புகிறோம்" என்று சீன வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் மே 12, 2009 இல் நடந்த ஒரு கருத்தமர்வில் தெரிவித்தார்.
• "இலங்கைக்கு வழக்கமாக நிதியுதவி அளித்துவந்த அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன பின் தள்ளப்பட்டு அந்த இடம் கிழக்கத்திய நாடுகளுக்குச் சென்றுள்ளது. புதிய நிதியாளர்கள் பக்கத்து நாடுகள். சீனாவின் உதவி கடந்த ஆண்டில் மட்டும் 5 மடங்கு அதிகரித்துள்ளது, கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக அளித்து இலங்கையின் நீண்டகால பெரிய நிதியுதவியாளரான ஜப்பானையும் விஞ்சியுள்ளது"
இருதரப்பு வணிகம்
• கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்குமிடையேயான வணிகம் இருமடங்காகியுள்ளது, இலங்கைக்கு பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனா இரண்டாவது இடமாகியுள்ளது, இலங்கை தனது பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனா 13 ஆவது இடத்திலுள்ளது. "அமெரிக்க ஏற்றுமதிச் சந்தைகளில் நாங்கள் ஏராளமான கவனம் செலுத்திவிட்டோம். ஆனால் இப்போது ஆசியாவின் பிரமாண்ட சந்தையான சீனாவை நோக்கிச் செல்லவேண்டும்' என இலங்கை பொருளாதாரச் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
• இலங்கை சீனாவுக்கு அனுப்பும் தேங்காய் நார்ப் பொருட்கள், இயற்கை ரப்பர், தேயிலை, வாசனைத்திரவியங்கள், வைரம் ஆகியவற்றின் ஏற்றுமதியில் 2000 ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் பணித்திட்ட உதவி - அம்பாந்தோட்டை துறைமுகம்
•சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டையில் கட்டப்படும் நவீன துறைமுகத்தின் அடிக்கல் ஒக்ரோபர் 2007 இல் போடப்பட்டும், அது ஜனவரி 2008 இல்தான் வேலைகளை ஆரம்பித்துள்ளது.
•இந்த 15 ஆண்டுகாலத் திட்டம் கட்டம் கட்டமாக முடிக்கப்படவுள்ளது. இதற்கான செலவு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள். இப்போதைய சீன அரசு முதற்கட்டத்தை மட்டும் கட்ட பொறுப்பெடுத்துள்ளது, இதற்கு 360 மில்லியம் டொலர்கள் செலவாகும். தள்ளுபடியான வட்டியுடன் 85 வீதமான கட்டுமானத் தொகையை வழங்க சீனா சம்மதித்துள்ளது. மிகுதி இலங்கை அரசால் அளிக்கப்படும்.
•முதல் கட்டம் 2010 இன் முடிவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்கான தொழில்துறை துறைமுகமாக செயல்படுவதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
•இத்துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் எரிபொருள் நிரப்பவும் வசதி அமைக்கப்படவுள்ளதால் இது தென்னிந்திய துறைமுகங்களை விடுத்து தமக்கு அதிக நன்மைகள் கிடைக்க வழிசமைக்குமென அரசு நம்புகிறது.
• இந்தப் பணித்திட்டத்துக்கென தனியான ஆலோசகரை அமர்த்தாமல் சீன துறைமுக பொறியியல் நிறுவனம் ஒப்பந்ததாரராகவும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆலோசகராகவும் செயல்படுகின்றன. செப்ரம்பர் 2008 இல், 328 இலங்கையர்களும் 235 சீனர்களும் பணியாற்றினர். ஆனால் இப்போதைய நிலவரம் தெரியவில்லை.
• இந்த ஆண்டு நிறைவடையவுள்ள பணியின்படி 3 கப்பல்கள் தரிக்க அனுமதிக்கப்படும், ஆனால் இதற்கான நிதியுதவியை சீனா இன்னமும் கொடுக்கவில்லை.
• கிடைக்கப்பெற்றுள்ள நம்பத்தகுந்த தகவல்களின்படி, இலங்கையானது தனது கொழும்புத் துறைமுகத்துக்கு தெற்காசியாவில் கிடைக்கின்ற முக்கியத்துவத்தைக் குறைக்காமல் ஆனால் தென்னிந்தியாவிலுள்ள அனைத்து துறைமுகங்களுடன் ஒப்பிடும்போது சிறந்த வசதிகள் மற்றும் திறனுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்க எண்ணியுள்ளது தெரிகிறது.
• சீனாவின் இப்போதைய ஈடுபாடு எதிலென்றால், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் அமையவுள்ள தரிப்பிட மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதிகளைத் தனது வர்த்தக மற்றும் கடற்படைக் கப்பல்களுக்காகப் பயன்படுத்துவதாகும். ஆனால் அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத் தளம் அமைவதற்கான திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை.
கொழும்பில் புதிய கொள்கலன் கையாளும் பிரிவு
• கொழும்பு துறைமுகத்தில் புதிதாக கொள்கலன் கையாளும் பிரிவை அமைப்பதற்கு சீனத் துறைமுக நிறுவனம் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த நிறுவனம் இலங்கையின் ஐட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்படி பணிக்கான ஒப்பந்த விவரத்தை அனுப்பியுள்ளது
மாத்தள விமானநிலையம்—அம்பாந்தோட்டை
• நவம்பர் 27, 2009 இல் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமானக் கட்டடப்பணியை மஹிந்த அம்பாந்தோட்டையில் தொடங்கி வைத்தார்.
• 190 மில்லியன் டொலர்கள் செலவில் 2000 ஹெக்டயர் பரப்பில் கட்டப்படவுள்ள இந்த விமானநிலையத்துக்கு சீன அரசானது அதன் Ex-Im வங்கியூடாக கடன் கொடுக்கவுள்ளது. இந்தப் பணியானது 2 கட்டங்களில் நடக்கவுள்ளது. 2011 இல் முடியவுள்ள முதற்கட்டப் பணியில் ஓடுபாதைகள், டாக்சி பாதைகள் மற்றும் தரிப்பிட வசதிகளும் இரண்டாவது கட்டத்தில் விமானத்தைத் பராமரித்தல், திருத்துதல் வசதிகளும், ஹோட்டல்கள், விமானி பயிற்சி நிலையம் மற்றும்பல வசதிகளும் உள்ளடங்கவுள்ளன. இந்த விமான நிலையத்தில் முதலாவது விமானம் டிசம்பர், 2011 க்கு முன்னர் தரையிறக்கப்படும்.
சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பிற பணித்திட்டங்கள்
• கொழும்பு--கட்டுநாயக்கா அதிவிரைவுப் பாதை கட்டமைப்பு ( 248 மில்லியன் டொலர்கள்)
• ரயில் பாதைகள் மேம்பாடு---சீனாவின் Ex-Im வங்கி 100 மில்லியன் டொலர்கள் வழங்கவுள்ளது. மார்ச் 10, 2010 இன் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
• நுரைச்சோலை அனல் மின்நிலையம் (855 மில்லியன் டொலர்கள்)
• கொழும்பின் புற நகரங்களான கோட்டை, தெகிவளை-மவுண்ட் லாவண்யா, மஹரகம, கெஸ்பேவ மற்றும் மொரட்டுவ பகுதிகளில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும் தொகுதி. 59 மில்லியன் டொலர்களை சீன கட்டுமான வங்கி வழங்கவுள்ளது.
• கொழும்பில் கலைத்துறைக்கான தேசிய திரையரங்கு (21 மில்லியன் டொலர்கள்)
• சீன முதலீட்டாளர்களுக்கென சிறப்பு பொருளாதார வலயத்தை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் ஜூலை 2009 இல் கைச்சாத்திடப்பட்டது. கொழும்பு வடக்கிலுள்ள மிரிகம பகுதியில் அமையவுள்ள இதற்கு சீன ஹுச்சென் முதலீட்டு நிறுவனமானது மூன்று வருடகாலம் நடக்கவுள்ள முதலாவது கட்டத்துக்கு 28 மில்லியன் டொலர்கள் முதலிடவுள்ளது.
• மஹிந்த ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பெற்ற கட்டுமான மற்றும் அபிவிருத்திப் பணிக்கான நிதியில் 50 வீதத்துக்கும் அதிகமானது சீனாவிடமிருந்தே பெறப்பட்டது.
• "2007 இலிருந்து ஒரு செய்மதி தகவல்தொடர்பை இயக்க இலங்கை முயற்சி செய்து வருகிறது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளைச் சீனா வழங்கவுள்ளது" என்று கொள்கைகள் கல்வி நிலையத்தின் பணிப்பாளர் நவம்பர், 2009 இல் கூறியுள்ளார்.
சீனப் பணித்திட்ட உதவி- சில அம்சங்கள்
• அனல் மின்னிலையம் தவிர மிகுதி அனைத்துமே சிங்களப் பகுதிகளிலேயே உள்ளன.
• யாழ் குடாநாட்டில் சாலை விஸ்தரிப்பு உட்பட சில பணித்திட்டங்களைத் தமிழர் வாழும் பகுதிகளிலும் எதிர்காலத்தில் அமைக்க சீனா சம்மதித்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு என்ற பார்வையில் சீனாவின் பணித்திட்டங்கள்
• அம்பாந்தோட்டை துறைமுகம்: கடற்படை முகாம் அமைப்பது என்ற பேச்சு இப்போது இல்லை என்றாலும் கூட, இறுதியில் சீன எண்ணெய் மற்றும் வாயுக் கொள்கலங்கள், கடற்கொள்ளைத் தடுப்பு ரோந்துகள் ஆகியவற்றுக்கான தேவை வரும்.
• சீனாவுடன் சேர்ந்து செய்மதித் தொடர்பு பெறுவதானது தென்னிந்தியாவிலுள்ள இந்திய அணுசக்தி மற்றும் விண்வெளி நிர்மாணங்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க சீனாவுக்கு உதவியாக இருக்கும்.
பிற சீன உதவிகள்
• இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணமாக ஒரு மில்லியன் டொலர்கள்.
• வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணிகளை நீக்குவதற்கான தொழில்நுட்ப உதவி.
• சீனாவின் மனிதாபிமான உதவிகள் வெகுக்குறைவே. அது தனது போர் நோக்கங்களுக்கு ஆதாயமாக அமையக்கூடியவற்றிலேயே அதிக கவனம் செலுத்துகிறது.
புலிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு விநியோகிக்கப்பட்ட சீன ராணுவ தளபாடங்கள்
• Jian-7 போர் விமானங்கள், விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் JY-11 3D வான் கண்காணிப்பு ராடர்கள். ஆண்டுக்கு சராசரியாக 100 மில்லியன் டாலர்கள் ராணுவ தளபாட விநியோகம் நடந்துள்ளது.
எண்ணெய் அகழுதல்
• இந்தியாவுக்கு எந்தவொரு நலனை வழங்கினாலும் அதற்குச் சமமான நலனை சீனாவுக்கும் வழங்குவதே மஹிந்த அரசாங்கத்தின் கொள்கையாகும். இதன்படி மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழுவதற்கான இடங்களை இரு நாடுகளுக்கும் இலங்கை வழங்கியுள்ளது.
இந்தியாவின் பதில் செயற்பாடு
• இந்தியாவின் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்காமை.
• ராஜதந்திர வட்டாரங்களூடாக ஏதேனும் தனிப்பட்ட தொடர்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது இன்னமும் தெரியவில்லை, அவ்வாறு இருப்பின் அது எவ்வளவு பலமாகவும் வினைத்திறனாகவும் இருக்கும்?
• இந்திய, சீன மற்றும் பாகிஸ்தான் உதவிகளுடன் தமிழர்களை அடக்கிவைத்துள்ள இலங்கை அரசாங்கத்துடன், இந்தியாவானது இந்த அழுத்தமான விடயத்தை இனி ஒருபோதும் பயன்படுத்த முடியாது
• பொருளாதார அழுத்தம் சில வேளைகளில் செயலாற்றலாம், ஏனெனில் இந்தியாவிலிருந்து செல்லும் பெருமெண்ணிக்கையான உல்லாசப்பயணிகள் அதன் பொருளாதாரத்துக்கு முக்கிய வலுச் சேர்க்கிறது.
• டில்லியிலுள்ள இப்போதைய அரசு பொருளாதார அழுத்தத்தைப் பயன்படுத்த அல்லது இலங்கையில் வளருகின்ற சீன ஆதிக்கத்தைத் தடுக்கும் செயல்களில் ஈடுபட விருப்பம் காட்டவில்லை.
• படிப்படியாக இந்திய ஆதிக்கம் விலக்கப்பட்டு சீன ஆதிக்கம் வளருகின்றதை மாற்றியமைப்பதற்கான நம்பிக்கை எதையும் ஒருவரும் காணவில்லை.
• இந்தியாவானது பொருளாதார அழுத்தத்தை தமிழ் மக்களுள்ள இடங்களில் மட்டும் காண்பிக்காது சிங்களப் பிரதேசத்துக்கும் விஸ்தரிக்க வேண்டும்.
• இந்தியா பின்வரும் நன்மைகளை சீனாவுக்கு எதிராகத் தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும்---இலங்கைக்கு மிக அருகிலுள்ள பிரமாண்ட இந்தியச் சந்தை, எங்களின் ஆங்கிலப் புலமை, இந்தியாவின் வலுவான கூட்டுறவுத் துறை ஆகியவை சீன நிறுவனங்களுக்கு எதிராகப் போட்டியிடக் கூடியவை
• இலங்கையில் இந்திய அரசு காட்டாத தீவிரத்தை இந்திய தனியார் துறை காட்டலாம். முதலில் இந்திய நிறுவனம் ஒன்றைத் தான் அம்பாந்தோட்டை பணித்திட்டத்துக்கு இலங்கை அணுகியது. ஆனால் சாதகமற்ற பதிலால் அது சீனாவிடம் சென்றுவிட்டது. மேலும் கொழும்புத் துறைமுக புதிய கொள்கலன் கையாளும் பிரிவுக்கு ஏலம் கேட்டபோதும் இந்திய நிறுவனங்கள் எதுவும் பதிலளிக்கவில்லை. சீன நிறுவனம் மட்டுமே பதிலளித்தது.
இக்கட்டுரை ஆசிரியரின் மின்னஞ்சல்:
seventyone2@gmail.com
ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் அதிர்வு இணையம்:
மீழ் பிரசுரிக்க விரும்புவோர், மேற்கண்டவற்றை சேர்த்துக்கொள்ளவும் !