[Ponguthamil.com, 04 April 2010]

தாமரை காருண்யன்
ஈழம் தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா?
நாம் கடந்த சில அங்கங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபட்ட கெடுபிடி யுத்தக்கால புவிசார் அரசியல் நிலைமைகளின் சில அம்சங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிக் கவனம் செலுத்தியிருந்தோம்.
இந்த அங்கம் கெடுபிடி யுத்தத்திற்குப் பின்னரான காலத்து புவிசார் அரசியலுக்குள் (Post- cold war geo politics) காலடி வைக்கிறது.
சோவியத் யூனியன் சிதறி உடைந்து போய் - உலகம் இரட்டை மையை உலக ஒழுங்கிலிருந்து மாறி அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் ஆளுகைக்குள் உள்ளாகி - ஒற்றை மைய உலக ஒழுங்கு உருவாகியமையே கெடுபிடிப் போரின் பின்னரான காலத்து புவிசார் அரசியல் அம்சங்களில் முக்கியமானது.
இந்த ஒற்றை மைய உலக ஒழுங்கு நிரந்தரமானது அல்ல – காலச் சுழற்சிக்குள் ஒற்றை மைய உலக ஒழுங்கிலிருந்து உலகம் விடுபட்டு பல்மைய உலக ஒழுங்கினுள்(Multi-polar world order) நுழைந்து கொள்ளும் எனவும் சில ஆய்வார்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
உலகம் பல்மைய உலக ஒழுங்கினுள் நுழைவது என்பது உலக நாடுகள் இரண்டிற்கு மேற்பட்ட – மூன்றோ அல்லது நான்கு முகாம்களை - மையமாக வைத்து அணிதிரளும் நிலை உருவாகுவதனைக் குறித்து நிற்பது.
உலகம் பல்மைய உலக ஒழுங்கினுள் நுழைவதன் ஆரம்பப்படியாக ஒற்றை மைய உலக ஒழுங்கு பலவீனமடையும் எனவும் உலகின் வலுவுள்ள சக்திகளாக பிராந்திய அடிப்படையிலோ அல்லது ஏனைய உறவுகளின் அடிப்படைகளிலோ எழும் கூட்டுக்கள் எழுச்சியடையும் என்றும் எதிர்வு கூறப்பட்டது.
சீனா, இந்தியா, பிறேசில் போன்ற நாடுகள் தேர்வு செய்திருந்த பொருளாதார வளர்ச்சிப்பாதையும் - உலக வல்லரசுகளாவதற்கு இவை போன்ற நாடுகள் கொண்டிருந்த பெருவிருப்பும் - இஸ்லாம் அரசியலின் எழுச்சியும் - சோவியத் உடைந்து போனாலும் ரஷ்யாவிடம் இருந்த மேற்குலக எதிர்ப்புப் போக்கும் - பல்மைய உலக ஒழுங்கு உருவாகும் என்ற இந்த எதிர்வுகூறலின் பின்னணியில் இருந்தன.
ஓற்றைமைய உலக ஒழுங்கு திடமடைந்து விடுவதற்கு முன்னர் தமது நாடுகளைப் பலப்படுத்துவதில் புதிய வல்லரசுகளாக உருவாகுவதற்கு வியூகம் வகுத்திருந்த நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் கூடிய கவனம் செலுத்தத் தொடங்கியிருந்த காலகட்டம் இது.
தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினையும் தாண்டி உலகின் புதிய வல்லரசாக தன்னை நிலைநிறுத்துவதற்கான வியூகத்தினை இந்தியாவும் வகுத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.
இருந்த போதும், இக் காலகட்டத்தில் இந்தியாவில் நிலவிய ஸ்திரமற்ற அரசியற் சூழல் இதற்குரிய காத்திரமான படிகளை எடுத்து வைக்கப் பெரிதும் ஒத்துழைப்பதாக இருக்கவில்லை.
கடந்த அங்கத்தில் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜீவ் காந்தி தோல்வியடைந்து வி.பி. சிங் பிரதமராகப் பதவியேற்றிருந்தமை பற்றிக் குறிப்பிட்டிருந்தோம்.
உண்மையில் 1989 ஆம் ஆண்டுத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான அகில இந்தியக் கொங்கிரஸ் கட்சியே கூடுதல் ஆசனங்கள் பெற்ற தனிப் பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் கொங்கிரஸ் கட்சியால் ஏனைய கட்சிகளின் ஆதரவினைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியவில்லை.
எதிர்க் கட்சிகளின் கூட்டாக அமைந்திருந்த ஜனதாதள் சார்பில் வி.பி.சிங் பிரதமராக – பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவுடன் - பதவியேற்றிருந்த போதும் அவரது அரசு சிறுபான்மை அரசாகத்தான் இருந்தது.
ஜனதாதள் அரசாங்கத்துக்குள் குழப்பம் ஏற்பட்டு உடைவு ஏற்பட 1990 ஆண்டு நவம்பர் மாதம் ராஜீவ் காந்தி தலைமையிலான கொங்கிரஸின் ஆதரவுடன் ஜனதாதள்ளின் ஒரு பிரிவின் தலைவர் சந்திரசேகர் பிரதமராகப் பதவியேற்கிறார். இவரது ஆட்சிக்காலமும் நீண்டகாலம் நீடிக்கவில்லை. கொங்கிரஸ் ஆதரவினை விலக்கிக் கொள்ள அரசு கவிழ்கிறது. புதிய தேர்தல் 1991 ஆம் ஆண்டு யூன் மாதம் அறிவிக்கப்படுகிறது.
இத் தேர்தல் ஊடாக, புதிய உலக ஒழுங்கில் இந்தியாவினை நிலைநிறுத்தக்கூடிய ஸ்திரமான அரசியல் தலைமையினை உருவாக்குவதற்கான முயற்சியில் இந்தியதேசம் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் - தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியங்களை மட்டுமல்ல – உலகையே அதிர வைத்த அந்தச் சம்பவம் நிகழ்கிறது.
1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி தமிழ் நாட்டில் சிறிபெரும்புதூரில் தேர்தல் பரப்புரைக்கு வந்திருந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்படுகின்றார். இவருடன் மேலும் 18 பேரும் இச் சம்பவத்தில் கொல்லப்படுகின்றனர்.
விசாரணைகள் விடுதலைப்புலிகள் மீது குற்றத்தை சுமத்துகின்றன. சம்பவம் நிகழ்ந்து ஒரு வருட காலம் நிகழ்ந்த விசாரணைகளில் 5000 பேர் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பலர் கைது செய்யப்படுகின்றனர். முக்கிய சந்தேக நபரான சிவராசன் உட்பட சிலர் தம்மைத் தாமே அழித்தும் கொள்கின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை எவ்வாறு நிகழ்ந்தது என்பதனையோ - இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பற்றியோ - இது தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த ஜெயின் கமிசன் அறிக்கையைப் பற்றியோ இக் கட்டுரைத் தொடர் பேசமுனையவில்லை. இது இங்கு கூறப்படும் விடயத்திற்கு அவசியமானதுமல்ல.
ஆனால், ராஜீவ் காந்தி ஏன் படுகொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பான வாதங்களை (Discourses) ஆய்வுக்கெடுத்து - இவற்றை தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபடுத்திப் பார்த்து – தமிழர் தேசத்திற்கு இச் சம்பவம் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பதிவு செய்து செல்வது இக் கட்டுரைத் தொடரின் பேசுபொருளுக்குத் தேவையாக உள்ளது.
ராஜீவ் காந்தி கொலையினை விடுதலைப்புலிகள்தான் செய்தார்களா என்ற சந்தேகம் நாளடைவில் அற்றுப் போய், ஏன் இக் கொலை நிகழ்த்தப்பட்டது என்ற பாங்கிலான கருத்துப் பரிமாற்றங்களே மேலெழுந்தன.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள் ராஜீவ் கொலைச்சம்பவம் இயக்கத்தின் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இச் சம்பவம் இயக்கத்துக்குள் ஒரு பேசாப்பொருளாகவே இருந்தது. உள்ளகக் கருத்துப் பரிமாற்றங்களிலும் இந்தச் சம்பவம் குறித்துப் பேசப்படுவதில்லை.
ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் ஏன் நிகழ்ந்தது?
இதற்கு நான்கு வகையான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இவ் வாதங்கள் விடுதலைப்புலிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டவை அல்ல. விசாரணைகளின் போது வெளிவந்திருந்த தகவல்களில் இருந்தும் ஊடகங்களில் வெளிவந்திருந்த கருத்துக்களில் இருந்தும் தொகுத்துச் சுருக்கப்பட்டவையே இவை.
முதலாவது வாதம், இது ஒரு தற்காப்பு நடவடிக்கை.
இந்திய இராணுவம் 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி இலங்கைத் தீவினை விட்டு வெளியேற்றப்பட்டாலும் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் விருப்பத்தை மீறியே இந்திய இராணுவ வெளியேற்றம் நிகழ்ந்திருந்த பின்னணியிலிருந்து இந்தத் தற்பாதுகாப்பு வாதம் ஆரம்பிக்கிறது.
இந்திய இராணுவம் வெளிNறியபோது இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரும் (EPRLF) இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டதும் அங்கு அவர்கள் இந்திய அதிகாரிகளின் பராமரிப்பில் வைக்கப்பட்டிருந்ததும் இந்தியாவின் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பான சந்தேகத்தைத் தோற்றுவித்திருந்தது.
இச் சூழலில் மீண்டும் ராஜீவ் காந்தி பதவிக்கு வந்தால் இந்திய இராணுவத்தை மீள அனுப்புவது என்ற தெரிவு உட்பட விடுதலைப்புலிகளுக்கு எதிரான பல்வேறு வகையான நடவடிக்கைகளை முடுக்கி விடுவார் என்ற அச்சம் இருந்தது.
ஆதலால் அவர் மீண்டும் பிரதமராகப் பதவியேற்பதனைத் தடுக்க வேண்டும். அதற்கு உள்ள ஒரே வழி அவரை இராணுவ ரீதியாக அழித்தொழித்தலே. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்கு இது தவிர்க்க முடியாதது - இவ்வாறு விடுலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சிந்தித்திருக்கலாம் என்கிறது இவ் வாதம்.
இரண்டாவது வாதம், இது ஒரு பதிலடி அல்லது பழிவாங்கும் நடவடிக்கை.
இந்த வாதம் இவ்வாறு பேசுகிறது. 'அவலத்தைத் தந்தவனுக்கு அவலத்தைத் திருப்பிக்கொடு' - இது பிரபாகனின் ஆழ் மனதில் நிலைகொண்டிருந்த ஒரு பதிலடி அல்லது பழிவாங்கும் அணுகுமுறை.
அமைதி காக்கும் படை எனும் பெயரில் இந்திய இராணுவம் தமிழீழ மண்ணில் நிலை கொண்டு, விடுதலைப்புலிகளுடன் யுத்தம் ஆரம்பித்த பின்னர் நடாத்திய கொடுரங்களுக்கு – பதிலடியாக – பழிவாங்கும் நடவடிக்கையாக - இந்திய இராணுவத்தை அனுப்பி வைக்கும் அரசியல் முடிவு எடுத்த ராஜீவ் காந்தி தண்டிக்கப்படவேண்டும்.
இவ்வாறு பிரபாகரன் சிந்தித்தாகக் கூறுகிறது இரண்டாவது வாதம்.
மூன்றாவது வாதம் , பிரபாகரன் முடிவுகளை எடுக்கும் விதம் குறித்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆபத்து எனப் பிரபாகரன் நினைத்து விட்டார் எனில் - அவ் ஆபத்தினை அகற்றுவதற்கு விளைவுகள் எதனையும் நினைத்து அவர் தயங்குவது கிடையாது.
முதலில் ஆபத்தினை அகற்றுவோம், பின்னர் விளைவுகளை எதிர்கொள்வோம் என்பது பிரபாகரன் பின்பற்றும் அணுகுமுறை. மேலும், ஆபத்தினை அகற்றும் முயற்சியில் பாதகங்கள் மட்டுமல்ல சாதகங்களும் வரும். உடனடியாகப் பாதகமாகத் தெரிபவை நீண்ட காலத்தில் சாதகமானவையாகவும் மாறும்.
இத்தகைய சிந்தனைகள் பிரபாகரன் தீர்மானமெடுக்கும் நடைமுறையைச் சூழ்ந்திருக்கின்றமையால் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முடிவை இவரால் மிகவும் சிரமமில்லாமல் எடுத்திருக்க முடியும் என்கிறது இவ் வாதம்.
நான்காவது வாதம், புதிய உலக ஒழுங்கில் இந்தியா ஒரு பலமிக்க சக்தியாக உருவெடுக்கவிடாது தடுக்க - இந்தியாவில் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்க விரும்பும் அந்நிய சக்திகள் விடுலைப்புலிகள் அமைப்பின் ஊடாகவோ அல்லது தனிப்பட்ட உறுப்பினர்களுக்குள்ளாலோ ஊடுருவி அல்லது பணம் கொடுத்து செய்யப்பட்ட கொலை இது என்பது.
ஜெயின் கமிசன் விசாரணையில் பல்வேறு வகையான மேலதிக சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டதால் - உள்நாட்டு முகவர்களுடன் இணைந்த வெளிநாட்டு சக்திகளின் கைகள் இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கின்றன என்று இன்றும் வாதிடுபவர்கள் இருக்கின்றனர்.
ஓரிரு வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த செய்தியொன்றில், ராஜீவின் மகள் பிரியங்கா சிறையில் இருந்த நளினியைச் சந்தித்ததாகவும் அதன் போது தமது தந்தை நல்லவர் எனவும் என்ன காரணத்திற்காக அவரை விடுதலைப்புலிகள் கொலை செய்தார்கள் எனக் கேட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தமையும் இங்கு நினைவுக்கு வருகிறது.
இக் கொலைச் சம்பவத்தை விடுதலைப்புலிகள் துன்பியல் சம்பவமாக வர்ணித்தமையூடாக தமது பங்கை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருந்தனர். ஆனால் இக் கொலைக்கான காரணத்தை விடுதலைப்புலிகள் எங்கும் வெளிப்படுத்தவில்லை.
இதனால், முன்வைக்கப்பட்ட வாதங்களை கிடைக்கக்கூடிய தகவல்களுடன் இணைத்து ஆய்வுக்குள்ளாக்கி ஒரு மதிப்பீட்டுக்கு வர இக் கட்டுரைத் தொடர் முயல்கிறது.
அரசியல் நோக்கம் தவிர்த்து – விடயங்களை ஆய்வு செய்வோர் நான்காவது வாதத்தினை விரைவில் நிராகரித்து விடுவார்கள். இவ் விசாரணையை தலைமை தாங்கி முன்னெடுத்த கார்த்திகேயன் கூட 1999 ஆம் ஆண்டில் வழங்கிய செவ்வியொன்றில் 'விடுதலைப்புலிகள் கொள்கைக்காக இயங்குவர்கள். கூலிக்காக இயங்குபவர்கள் அல்ல' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இக் கட்டுரைத் தொடரும் மேலே முன் வைக்கப்பட்ட நான்காவது வாதத்தை நிராகரிக்கிறது.
ஏனைய மூன்றும் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முடிவுக்கு வெவ்வேறு அளவுகளின் காரணமாயிருக்கக்கூடியன.
இவற்றில், பதிலடி அல்லது பழிவாங்கும் நடவடிக்கை என்பதற்கு உள்ள முக்கியத்துவத்தினையும் இக் கட்டுரைத் தொடர் நிராகரிக்கிறது.
இச் சம்பவம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை ஒரு தட்டிலும் பதிலடி அல்லது பழிவாங்கும் நடிவடக்கையால் கிடைக்கக்கூடிய நன்மைகளை மற்றைய தட்டிலும் போட்டு நிறுத்து - பிரபாகரன் தொடர்பான இக் கட்டுரையாளரின் புரிதலையும் இணைத்துப் பார்க்கும் போது பதிலடி அல்லது பழிவாங்கும் நடிவடிக்கையாக இம் முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என்ற வாதத்தையும் இக் கட்டுரை நிராகரிக்கிறது.
மிஞ்சியிருக்கும் எனைய இரண்டு வாதங்களுமே இக் கட்டுரைத் தொடரின் கூடிய கவனத்தினை ஈர்க்கின்றன.
இச் சம்பவம் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக – பிரபாகரனின் முடிவெடுக்கும் அணுகுமுறையின் விளைபொருளாக நடைபெற்றிருக்கின்றது என்ற முடிவுக்கே இக் கட்டுரைத் தொடர் வருகின்றது.
1991 ஆம் ஆண்டு மே மாதத்தில் ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம் இடம் பெறுவதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டு யூன் மாதம் பத்மாநாபா உட்பட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) முன்னணித் தலைவர்கள் 10 பேர் தமிழகத்தில் வைத்துப் படுகொலை செய்யப்படுகின்றனர்.
இச் சம்பவம் அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியினை கோபமடையச் செய்யக் கூடியது என்பதும் அவரது பகையைச் சம்பாதிக்கக்கூடியது என்பது தெரிந்திருந்தும் விடுதலைப்புலிகள் இயக்கம் இந் நடவடிக்கையை மேற்கொள்கிறது.
இதுவும் இந்தியாவுடன் இணைந்த வகையில் எதிர்காலத்தில் இவர்கள் மேற்கொள்ளக்கூடிய எதிர் நடவடிக்கைகளை முறியடிக்கும் தற்காப்பு நோக்கத்தினைக் கொண்டதாகவே கருதப்பட்டது.
மீண்டுமொரு இந்திய இராணுவ நடவடிக்கை நேரடியாகவோ அல்லது தமிழ் இயக்கங்கள் ஊடாகவோ இடம்பெற இடமளிக்கக்கூடாது என்ற சிந்தனையே இக் காலத்தில் பிரபாகரன், பொட்டம்மான் ஆகியோரிடம் மேலோங்கி இருந்திருக்க வேண்டும்.
இந்த சிந்தனையின் தொடர்ச்சியாகவே ராஜீவ் காந்தி இந்திய அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்குள் எழுந்திருக்க வேண்டும்.
இந்த முடிவு எடுக்கப்பட்ட போது இவர்கள் ஒப்பீட்ளவில் வயதில் மிகவும் இளையவர்கள். பிரபாகரனுக்கு அப்போது வயது 37. பொட்டம்மானுக்கு வயது 29. புலிகளின் புலனாய்வுத்துறையும் மிக ஆரம்ப வளர்ச்சி நிலையில் இருந்த காலப்பகுதி இது.
இத் திட்டத்தை மிகவும் இரகசியமாகப் பேணுவதற்கு இவர்கள் விரும்பியிருக்கிறார்கள். இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த பலருக்கு இச் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே இயக்கத்தின் தொடர்பு தெரிய வந்திருக்கிறது.
அப்போது விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியின் தலைவராக இருந்த மாத்தையா, அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் பலருக்கும் திட்டம் மறைத்துத்தான் வைக்கப்பட்டிருந்தது.
திட்டத்தின் நன்மைகளாக உடனடியாக வரக்கூடிய ஆபத்தான இந்திய இராணுவத் தலையீடு தவிர்க்கப்படுதலும் இச் சம்பவம் நீண்டகாலத்தில் இந்தியாவில் ஏற்படுத்தக்கூடிய அரசியல் மாற்றங்களினால் தமிழீழத்திற்கு எதிரான இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் வரக்கூடிய வாய்ப்புக்களும் கருதப்பட்டிருக்க வேண்டும்.
இந்திய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் வரும் குறுங்காலப் பாதிப்புக்களுடன் ஒப்பிடும் போது உடனடியாக களத்திலும் நீண்டகாலத்தில் ஏனைய மட்டங்களிலும் கிடைக்கக்கூடிய நன்மைகள் அதிகம் என இவர்கள் கணிப்பிட்டிருக்க வேண்டும்.
இவர்களின் எதிர்பார்க்கைக்கு மாறாக உண்மையில் இச் சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு குறுங்காலத்தில் ஏற்படுத்திய பாதிப்புக்களை விட நீண்ட காலத்தல் ஏற்படுத்திய பாதிப்புக்களே அதிகமாக அமைந்து விட்டன.
ராஜீவ் காந்தி கொல்லப்படாது விட்டிருப்பின் எது நடந்திருக்கும் என்பதனை அவர் கொல்லப்பட்ட பின்னர் நிச்சயப்படுத்திக் கூறுதல் கடினமானது.
ஆனால் இவர் கொல்லப்பட்ட பின்னர் இச் சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புக்களை நாம் இலகுவாக அடையாளம் காண முடிகிறது.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதனால்தான் இந்தியா தமிழீழத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இச் சம்பவத்திற்கு முன்னரே தனது புவிசார் அரசியல் நலன்கள் என்ற நோக்கு நிலையில் இருந்து தமிழீழம் தனி நாடு ஆக அமைவதனை இந்தியா விரும்பவில்லை. இதனை நாம் முன்னைய அங்கமொன்றில் நோக்கியிருந்தோம்.
இதே வேளை, ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் இந்தியத் தரப்பால் ஒரு போர்ப் பிரகடனமாகப் பார்க்கப்படக்கூடியது. இதனை பாகிஸ்தான் உளவுத்துறை செய்து இருந்திருந்தால் இந்தியா பாகிஸ்தான் மீது நேரடியான போர் தொடுத்திருக்கக் கூடியளவு ஒரு பாரதூரமான சம்பவம் இது. கொல்லப்பட்ட வேளை ராஜீவ் காந்தி பிரதமராக இல்லாது விடினும் தமது நாட்டின் பிரதமருக்கெதிரான நடவடிக்கை போலவே இந்தியா இதனை நோக்கியிருக்கும்.
இச் சம்பவத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான இந்தியாவின் போர் வேறு விதத்தில் வடிவமைக்கப்படுகிறது.
இச் சம்பவம் நிகழ்ந்த பின்னர் பிரபாகரனும் பொட்டம்மானும் ராஜீவ் கொலை வழக்கில் முதலாம் இரண்டாம் எதிரிகளாகச் சேர்க்கப்படுகின்றனர்.
இது விடுதலைப்புலிகளது தலைமையை மீளமுடியாத சட்டச் சிக்கலுக்குள் மாட்டி விடுகிறது. அரசியல் ஏற்பாடுகள் எதிலும் உத்தியோகபூர்வமான பங்கினை வகிக்க முடியாதளவு தனிமைப்படுத்தி விடுகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிரான இந்திய மக்கள் அபிப்பிராயம் கட்டி எழுப்பப்படுவதற்கு இச் சம்பவம் வலுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என முத்திரை குத்தும் போதெல்லாம் இச் சம்பவம் ஆதாரத்துக்கு அழைக்கப்படும் வகையில் இந்தியா அனைத்துலக அரங்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தனிமைப்படுத்த முயல்கிறது.
இச் சம்பவத்தின் பின் சற்றும் எதிர்பார்த்திராத வகையில் அரசியல் தலைமையேற்ற நரசிம்மராவ், அதன் பின்னர் பதவிக்கு வந்த வாஜ்பாய் போன்றவர்கள் - ராஜீவ் காந்தியின் சம்பவத்திற்குப் பழிவாங்க வேண்டுமெனத் துடியாய்த் துடித்தாகத் தெரியவில்லை..
இருந்த போதும், சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி போன்றோர் இந்திய கொங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்று ஆட்சியினைக் கைப்பற்றிய பின்னர் புலிகள் மீதான இந்தியாவின் போரைத் தீவிரப்படுவதற்கான அரசியற் சூழலும் அமைந்து விடுகிறது.
ராஜீவ் சம்பவத்திற்கு தனது கணக்குத் தீர்க்கும் போரை இந்தியா முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணம் வரை செய்துதான் முடித்தது.
(அடுத்த சனிக்கிழமை (10.04) தொடரும்)