[Eelamenews, 24 March 2010]
செய்தியளர்: ஆர்த்தி
கனடா தமிழ் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் திரு தங்கவேல் நக்கீரன் அவர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவாக ஒரு கொள்கைவிளக்கக்கூட்டம் ஒன்றை அண்மையில் ரொரன்ரோ நகரில் நடத்தியிருந்தார். தொடர்ந்து கூட்டமைப்புக்கு ஆதரவாக பேசியும் எழுதியும் வருகின்றார்.
திரு நக்கீரன் ஆழமான தமிழ் உணர்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப்பின் மிகவும் சவால் மிகுந்ததும் குழப்பம் நிறைந்ததுமான ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் நடைபெற இருக்கும் தேர்தலை அடுத்து பல அணிகளாக பிளவுற்றிருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலையினூடாக நிலைமையை மேலும் சிக்கலுக்குரியதாக்கியிருக்கிறது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்தப் பிளவு தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும் தமிழத்தேசிய சக்திகளிடையே ஒரு பிளவை – ஒவ்வாமையை தோற்றுவித்திருக்கிறது. இந்த இக்கட்டான நிலையிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தொடர்ந்து ஆதரிக்கும் திரு நக்கீரனிடம் சில குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் விடைகாணும் முயற்சியாக “ஈழம்நியூஸ்” இந்த நேர்காணலை பதிவு செய்திருக்கிறது.
ஆரோக்கியமான முறையில் விவாதங்களை வளர்த்துச் சென்று ஒருமித்த முடிவுக்கு தமிழ்ச்சமூகம் வரவேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த முயற்சியும் அதையொட்டியதே.
இனி அவருடனான நேர்காணல்…
கேள்வி: சிறீலங்காவில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் போட்டியிடும் கூட்டமைப்பில் மிகப்பெரும் பிளவு உருவாகியுள்ளது. இருந்தபோதும் நீங்கள் வெளிப்படையாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பதற்கு சிறப்புக் காரணங்கள் உண்டா?
பதில்: நான் சென்ற ஆட்சித்தலைவர் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி மாற்றத்துக்கான நிலைப்பாட்டை முழு மூச்சாக ஆதரித்தேன். அந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தோடு நான் ஒத்துப் போக முடியவில்லை.
தேர்தலைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டைக் கைவிடுமாறு கஜேந்திரகுமாரோடு மணித்தியாலக் கணக்கில் பேசியும் அவர் தனது முடிவை மாற்ற மறுத்துவிட்டார். செல்வராசா கஜேந்திரன் கூட்டமைப்பு எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வண்ணம் தேர்தல் முடிந்த பின்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களில் 75 விழுக்காட்டினர் தேர்தலைப் புறக்கணித்ததாக ஒரு பாமரத்தன்மையான அறிக்கையை விட்டார். ஏனைய மாவட்டத் தேர்தல் முடிவைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. நணலும் வாயால் கெடும் என்பார்களே?
பொதுவாக மக்களாட்சி முறைமை நடைமுறையில் உள்ள நாடுகளில் தேர்தல் புறக்கணிப்பு எந்த நன்மையையும் பெற்றுத்தராது. இதற்கு எமது வரலாற்றில் நிறைய சான்றுகள் இருக்கின்றன. அதில் 1931 இல் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் சட்டசபைச் தேர்தலைப் புறக்கணிததால் சிங்களவர்கள் நன்மை அடைந்தார்கள்.
1994 இல் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்ததால் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 10,744 வாக்குகளை மட்டும் பெற்று 9 இருக்கைகளை இபிடிபி கைப்பற்றிக் கொண்டது. 2005 ஆம் ஆண்டு நடந்த ஆட்சித்தலைவர் தேர்தலைப் புறக்கணித்ததும் இப்போது திரும்பிப் பார்க்கும் போது (in hind sight) பிழையாகவே தெரிகிறது.
கூட்டமைப்பில் “மிகப் பெரும் பிளவு” ஏற்பட்டுள்ளது எனக் கூறுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒற்றையாட்சியை வலியுறுத்து முகமாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்ற அலங்காரப் பெயரைக் சூடிக் கொண்டிருந்தாலும் அந்தக் கட்சி யாழ்ப்பாணத்தை, இன்னும் சொல்லப் போனால் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் முடக்கப்பட்டுள்ள கட்சி ஆகும். இந்தத் தேர்தலிலும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலேயே அது போட்டியிடுகிறது.
திருமலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னர் கூட்டமைப்பில் இருந்து ஆளும் கட்சிக்குத் தாவியவர்கள். அதன் முதன்மை வேட்பாளர் இம்முறை கூட்டமைப்பில் நியமனம் கேட்டு மறுக்கப்பட்டவர்.
இன்றுள்ள யதார்த்த நிலையில் கூட்டமைப்பே தமிழர்களது தலைமை அரசியல் அமைப்பாகும். அதனைப் பலப்படுத்துவதன் மூலமே தமிழ்மக்களது பேரம் பேசும் ஆற்றலை அதிகரிக்கலாம். மகிந்த இராசபக்சே வட – கிழக்கில் வெற்றி பெற்று வரும் கட்சியோடு பேசப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்தியா உட்பட மேற்குலக நாடுகளும் இயக்கம் இல்லாத நிலையிலும் கூட்டமைப்புப்கு தமிழ்மக்கள் ஆதரவு இருக்கிறதா என்பதை அறிய விரும்புகின்றன. மேலும் என்னைப் பொறுத்த மட்டில் நான் ஆட்களைப் பார்க்கவில்லை. ஆட்டத்தைத்தான் பார்க்கிறேன். சம்பந்தர் இடத்தில் கஜேந்திரகுமார் இருந்திருந்தாலும் எனது நிலைப்பாடு இப்போதுள்ளது போலவே (reverse role) இருந்திருக்கும்.
கேள்வி: தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் கொள்கைகளில் இருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் எந்த வகையில் வேறுபடுகின்றது?
பதில் – இரு கட்சிகளது கொள்கையில் வேறுபாடு இருப்பதாக எனக்குப் படவில்லை. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை இந்த நான்கு அடிப்படைக் கோட்பாடுகளையும் இரு கட்சிகளுமே ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கைத் தீவில் சுதந்திரமும் இறைமையும் உள்ள இரண்டு நாடுகள் வேண்டும் என்று தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கேட்கவில்லை.
“நாங்கள் நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. இரண்டு தனித்தனி அரசுகள் வேண்டும் என்றும் கேட்கவில்லை” என்று செல்வராசா கஜேந்தி;ரன் தமிழ் கனடிய வானொலியில் பேசும் போது திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதனால்தான் சொல்கிறேன் இரண்டுக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இல்லை.
கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் நலன்களை ஆதரித்து செல்ல முற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அச்சமான நிலமை ஏற்பட்டுள்ளதே?
பதில் - இன்றைய யதார்த்த அரசியலை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தெற்காசிய இந்து சமுத்திரப் பிராந்திய வல்லரசு இந்தியாதான். இந்தியாவை மீறி அல்லது இந்தியாவை ஓரங்கட்டிவிட்டு தமிழ்மக்கள் சார்பாக எந்தவொரு நாடும் தலையிடாது.
ஸ்ரீலங்காவிற்கு பன்னாட்டு நிதியம் கடன் கொடுப்பதை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அய்ரோப்பிய ஒன்றியம் எதிர்த்த போது இந்தியா “நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்” என்று சொன்னது.
அதன் பின்னர் இந்த நாடுகள் பின்வாங்கி விட்டன. சென்ற ஆண்டு மேற்குலக நாடுகள் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக ஒரு உள்ளக விசாரணை வேண்டும் என்று அய்யன்னா மனிதவுரிமை அவையில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து நின்று தோற்கடித்தது. தென்னாபிரிக்கா போன்ற நாடு கூட இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பாது தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது.
இவற்றோடு கடந்த ஏப்ரில் மாதத்தில் அமெரிக்காவின் தூர கிழக்குக் கடற்படை நூறு விடுதலைப்புலிகளின் தளபதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களையும் முள்ளிவாய்க்காலில் இருந்து மீட்டெடுக்க முயற்சித்த போது இந்தியா அதைத் தடுத்து விட்டது. எனவே இனச் சிக்கலுக்கான தீர்வு எதுவானாலும் இந்தியாவின் ஆதரவின்றி அது சாத்தியமாகாது.
இந்தியாவை நாம் மண்ணை வாரி அள்ளிக் கொட்டிக் கடுமையான சொற்களில் தூற்றலாம். ஆனால் எமது தீர்வுக்கான திறவு கோல் தில்லியிடமே உள்ளது. தமிழ்நாடும் தீர்வுத் திட்டத்திற்கு தில்லிக்குக் கைகொடுக்க வேண்டும்.
கேள்வி: தனிநாட்டுக் கோரிக்கையை தாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுத்தர திட்டமிட்டுள்ள தீர்வு என்ன?
பதில் - ஆறாவது சட்ட திருத்தத்தின் கீழ் தனிநாட்டுக் கோரிக்கை சாத்தியமில்லை. சம்பந்தன் ஒஸ்லோ பேச்சு வார்த்தையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட உள்ளக தன்னாட்சியின் (Internal self determination) கீழ் வடக்கும் கிழக்கும் ஒன்றிணைந்த தமிழர்களது பூர்வீக நிலத்தில் இணைப்பாட்சி அடிப்படையில் ஆட்சி நிறுவப்பட வேண்டும் என்கிறார்.
இதனைக் கூட்டமைப்பு விடுத்த தேர்தல் அறிக்கை எந்த அய்யப்பாட்டுக்கும் அப்பால் தெளிவுபடுத்தி இருக்கிறது. தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம். அவர்கள் இலங்கைத் தீவில், சிங்கள மக்களுடனும் ஏனையோருடனும் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
தொடர்ச்சியான வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடமாகும். தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். அதிகாரப் பங்கீடானது இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில், சமஷ்டி கட்டமைப்பின் அடிப்படையில் நிறுவப்படவேண்டும்.
இது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் உட்பட சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் உள்ளக சுயாட்சியின் அடிப்படையிலான தீர்வை ஸ்ரீலங்கா அரசு மறுக்குமேயானால் வெளியக சுயாட்சியை (external self determation) கேட்போம் எனச் சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
கேள்வி: இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்கமுடியும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தாயகத்து அரசியல் பயணம் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிதன் அவசியம் தொடர்பில் உங்களின் கருத்துக்கள் என்ன?
பதில் - நான் அதனை ஏற்றுக் கொள்கிறேன். அதாவது நிலத்தில் உள்ள தமிழர்களும் புலத்தில் உள்ள தமிழர்களும் சமாந்தரமான பாதையில் பயணிக்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்த உரிமையுடையவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் கருத்துக்களை நிலத்தில் உள்ளவர்கள் மீது திணிக்க முடியாது. வற்புறுத்தவும் முடியாது.
அங்குள்ள அரசியல் களம் வேறு இங்குள்ள அரசியல் களம் வேறு. இந்த உண்மையை நாங்கள் மறந்துவிடக் கூடாது.
கேள்வி: தமிழ்த் தேசியம் என்ற கோட்பாடுகளில் இருந்து கனடா வாழ் தமிழ் மக்கள் விலகிச் செல்வதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள்வாக்குப்பதிவின் போது கூட, பிரித்தானியாவில் வாக்களித்த தமிழ் மக்களைவிட குறைந்தளவு மக்களே கனடாவில் வாக்களித்திருந்தனர் அதற்கான காரணம் என்ன?
பதில் - காரணம் வேறொன்றும் இல்லை. இங்குள்ள தமிழ்மக்கள் தொகை கூட்டிச் சொல்லப்படுகிறது. உண்மை அதுவல்ல. மேலும் இங்கு தேர்தல் பரப்புரைக்கு எடுத்துக் கொண்ட காலம் போதாது. சிலருக்குத் தேர்தல் நடந்ததே தெரிந்திருக்கவில்லை. டிசெம்பர் 19 க்குப் பதில் தேர்தல் சனவரி முதல் வாரத்தில் ஒரு நாளுக்குப் பதில் இரண்டு நாள்கள் நடத்தியிருந்தால் இன்னும் பல ஆயிரம் மக்கள் வாக்களித்திருப்பார்கள்.
எனவே அந்த வாக்கெடுப்பின் முடிவை வைத்து “தமிழ்த் தேசியம் என்ற கோட்பாடுகளில் இருந்து கனடா வாழ் தமிழ் மக்கள் விலகிச் செல்வதாக குற்ற்சாட்டுக்கள் எழுந்துள்ளன” என்பது தவறானது. ஆனால் ஏனைய நாடுகள் போலவே கனடாவில் 99.82 விழுக்காடு மக்கள் “ஆம்” என வாக்களித்தார்கள்.
கேள்வி: யாழ் மாவட்டத்தில் தற்போது ஏறத்தாள 324 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடக் காரணம் என்ன?
பதில் - மகிந்த இராசபக்சேயும் அவரது உடன்பிறப்பு பசில் இராசபக்சேயும்தான் காரணம். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல திருகோணமலை, அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களிலும் இதே கதைதான். அவர் தமிழ்மக்களது வாக்குகளைச் சிதறடிப்பதற்காக பல சுயேட்சைக் குழுக்களை இவர்கள் களம் இறக்கியுள்ளார்கள்.
ஒவ்வொரு சுயேட்சைக் குழுவுக்கும் ரூபா 30 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சுயேட்;சைக் குழுக்களின் சுவரொட்டிகளில் மகிந்த இராசபக்சேயின் படமும் போடப்பட்டுள்ளதாம். இப்படிப் பணம் பெற்ற சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் “பணம் கிடைத்துவிட்டது இனி நாம் காலை ஆட்டிக்கொண்டு நிம்மதியாக இருக்கலாம்” என்று சொல்வதாகக் கேள்வி!
கேள்வி: யாழில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் முன்னர் அரசுடனும், குறிப்பிட்ட ஒரு துணைஇராணுவக் குழுவினருடம் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில் - நான் அப்படிக் கேள்விப்படவில்லை. என்னைப் பொறுத்தளவில் கூட்டமைப்பின் முடிவு எதிலும் நான் தலையிடுவதில்லை. Remote control அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. தேர்தல் அறிக்கையை மட்டும் அது வெளிவரும் முன்னர் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.
கேள்வி: தமிழீழ விடுதலைப்புலிகளினால் கட்டி உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏன் உடைவைச் சந்தித்துள்ளது? தேசியத்தின் மீது மிகுந்த பற்றை கொண்டுள்ள திருமதி பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை இணைத்து செயற்பட ஏன் கூட்டமைப்பு விரும்பவில்லை?
பதில் - மேலே சொன்ன பதிலைத்தான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். நான் ஆட்டத்தைத்தான் பார்க்கிறேன். ஆட்களை அல்ல. கஜேந்திரகுமாரைப் போட்டியிட வைப்பதில் 77 அகவை சம்பந்தர், 63 அகவை மாவை சேனாதிராசா, 52 அகவை சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை. கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்ற முடிவு புலத்தில்தான் எடுக்கப்பட்டது.
அவர்கள்தான் கஜேந்திரகுமாருக்குத் தலைப்பா கட்டி களத்தில் இறக்கியுள்ளார்கள். உண்மையில் அவருக்கு மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. தான் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று இரண்டு மாதங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டார்.
அதற்கான வலுவான சான்று என்னிடம் இருக்கிறது. இப்போது மனதை மாற்றிக் கொண்டு தேர்தலில் நிற்கிறார். மெத்த நல்லது. அவர் போன்ற இளைஞாகள் தான் நாளைய தலைவர்கள் ஆக வரவேண்டும் என்பதே எனது விருப்பம். கூட்டணியின் விருப்பமும் அதுவாகவே இருந்ததை நான் அறிவேன்.
கனடிய தமிழ் வானொலிக்கு நேர்காணல் கொடுத்த பத்மினி சிதம்பரநாதன் கூட “நான், கஜேந்திரகுமார், கஜேந்திரன் மூவரும் தேர்தலில் நிற்பதா வேண்டாமா என்பதையிட்டு மூன்று நாள்;கள் பல மணித்தியாலங்கள் தொடர்ந்து பேசினோம்.
முடிவில் தேர்தலில் நிற்பதில்லை என்று முடிவு செய்தோம். ஆனால் புலம்பெயர் தமிழ்மக்களின் வற்புறுத்தல் காரணமாகவே எமது முடிவை மாற்றிக் கொண்டோம்” என ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதே நேரம் மட்டக்களப்பில் அரியேந்திரனுக்கு நியமனம் கொடுக்கப்பட்டுள்ளது. வன்னியில் மருத்துவர் ஜெயகுலராசாவுக்கு நியமனம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே தளபதி தீபன் அவர்களது உடன்பிறப்பின் கணவருக்கு நியமனம் கொடுக்கப்பட்டுள்ளது. பத்மினி சிதம்பரநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் நீண்ட நாள்கள் வெளியில் சுற்றித் திரிந்தார்கள்;. நியமனம் மறுக்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நாடு திரும்பி கையோடு பத்மினி அலரிமாளிகையில் மகிந்த இராசபக்சேயோடு அருகிருந்து விருந்துண்டு மகிழ்ந்தார்.
செய்தித்தாள்களில் படங்கள் வெளியாகியன. அதுவும் காரணமாக இருந்திருக்கலாம். மேலும் திருகோணமலையில் துரைரத்தினசிங்கம், யாழ்ப்பாணத்தில் சிறில் மற்றும் இமாம் ஆகியோருக்கும் நியமனம் கொடுக்கப்படவில்லை.
கேள்வி: சிறீலங்கா அரசு மீது ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்காது அரசியல் தீர்வுக்கான நகர்வுகளை மேற்கொள்ள முடியாது என்ற கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்த வகையான அழுத்தங்களை, எந்த நாடுகளின் மூலம் மேற்கொள்ளும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில் - இந்தக் கேள்விக்கு சம்பந்தன் சொன்னதையே பதிலாகத் தர விரும்புகிறேன். “அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்கவில்லை என்பதை தமிழ் பேசும் மக்கள் கடந்த அதிபர் தேர்தலில் ஒன்றாக வாக்களித்து இந்தியா உள்பட சர்வதேச நாடுகளுக்கு நிரூபித்துள்ளனர். நிரந்தர தீர்வுக்கு நாம் வலியுறுத்த வேண்டுமானால் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ் பேசும் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளிக்க வேண்டும்.
இதன் மூலம் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் எமது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்து நிரந்தர தீர்வுக்கு வலியுறுத்த முடியும். இந்தியாவுடன் யுத்தச் சூழலிலும் அதற்குப் பின்னரும் நாம் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றோம். எமது மக்களின் கோரிக்கைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாது நாம் யாருக்கும் அடிபணியப் போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நிரந்தரமான தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா எமக்கு வாக்குறுதி அளித்துள்ளது.
எனவே எமது மக்கள் வரும் தேர்தலில் 90 விழுக்காடு வாக்களித்து தமது நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்த வேண்டும். தமிழர்கள் நிலைப்பாட்டை சிங்கள மக்கள் உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள்” எனச் சம்பந்தன் பேசியிருக்கிறார். எதைச் சொன்னாலும் “.இந்தியாவோடு பேசுங்கள்” என்று சொல்லும் மேற்குலக நாடுகளும் இந்தியாவின் முயற்சிக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த இடத்தில் மகிந்த இராசபக்சே வட – கிழக்கு இணைப்பில்லை, இணைப்பாட்சி கெட்ட வார்த்தை, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் சட்டம் ஒழுங்கு அதிகாரம் கொடுக்கப்பட மாட்டாது என சொல்லியுள்ளது மனம் கொள்ளத்தக்கது.