தனபாலா
அனைவருக்கும் தேர்தல் புகட்டப் போகும் புதிய பாடம்.
யதார்த்த உண்மைகளைக் காண மறுப்பதும், மறைக்க முனைவதும் எரியும் நெருப்பை தலைப்பாகையாலோ அன்றி சேலைத் தலைப்பாலோ மூடிமறைக்க எடுக்கும் முயற்சியாகவே அமையும்.
நெருப்பை நெருப்பாகவும், மலரை மலராகவும், அதனை அதுவாகவும் காணத் தவறுவது என்பது தற்கொலைக்கு ஒப்பான தெரிவுகளாகவே அமைந்துவிடும். நெருப்புச் சுடும் என்று வாயால் சொல்வதனால் நாக்கு அவிந்துவிடப் போவதில்லை.
அதனால் நெருப்பை நெருப்பாகக் கண்டு அதனை அதற்குரிய வகையில் அணுகுவதே வளர்ச்சிக்குத் துணைபுரியும் செயலாகும். அவ்வாறன்றி நெருப்பை மலரெனத் தலையில் அணிந்தால் ஏற்படும் கதியே எமது அரசியல் தலைவிதிக்கும் ஏற்பட்டுவிடும்.
வரலாற்றில் இருந்து படிப்பினைகளை நீரும் நெருப்புமாக, இரத்தமும் தசையுமாக நாம் கற்றறிந்தாக வேண்டும். எங்களுக்காகவும், எங்கள் பிள்ளைகளுக்காகவும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்காகவும் நாம் நெடுந் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அது நெருப்பை நெருப்பாக தரிசிப்பதில் இருந்தே அந்தப் பயணத்தை நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரழிவு, ஜனாதிபதித் தேர்தல் அனுபவங்கள், நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அணுகுமுறைகள் என்பவற்றில் இருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
எங்களிடம் என்ன இருக்கிறது? நாம் எங்கு போகப் போகிறோம்? எமது இலக்குக்கான பாதை எது? இவற்றையெல்லாம் திறந்த மனதுடன் நாம் ஆராயத் தவறுவோமானால் வருங்காலச் சந்ததிக்கு துரோகம் இழைத்தோர் என்ற குற்றத்திற்கு ஆளாக நேரும்.
இலக்கையும், பயணத்தையும், பாதையையும் தீர்மானிப்பதற்கு அதனை அதுவாகப் பார்க்கும் தீட்சண்ணியம் அவசியம்.
நோயாளியின் உண்மையான நோயை அடையாளம் காணமல் நோய்க்கு வைத்தியம் செய்ய முடியாது. புற்றுநோயை புற்றுநோயாக அடையாளம் கண்டால் தான் அதற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். 'நோய் நாடி - நோய் முதல் நாடி' என்று நோய் பற்றிய அதன் மூலக்கூறுகளை கண்டறிவதில் இருந்து நோயைக் குணப்படுத்த வேண்டியது மருத்துவத்திற்கு எவ்வளவு அவசியமோ அரசியல் அணுகுமுறைகளுக்கும் இது அவ்வளவு அவசியமானது.
முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஒரு பாடம். ஜனாதிபதித் தேர்தலில் இன்னொரு பாடம். நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் பிறிதொரு பாடம் என நாம் பாடங்களைக் கற்று புதிய பாதை வகுக்கத் தயாராக வேண்டும். கசப்பான மருந்தில் சிகிச்சை இருப்பது போல கசப்பான படிப்பினைகளில் வளர்ச்சிக்கான வித்துக்கள் உள்ளன. ஆதலால் படிப்பினைகளை கசப்புடனேனும் நாம் ஏற்கத் தயாராக வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் நாம் எவற்றை எல்லாம் இழக்கக் கூடாதோ அவற்றை எல்லாம் இழந்துவிட்டோம். மனிதம் என்பது நீண்ட நாகரிகத்தின் தொடர்ச்சியாகும். காலம் காலமாய்த் தேடிய சொத்துக்களையும், வீடு வாசல்களையும், வாழ்க்கை ஒழுங்கு முறைகளையும், அன்புக்குரிய பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் என அனைத்தையும் எதிரியிடம் இழந்து நிர்வாணமானோம்.
அளவால் சிறிய ஓர் அப்பாவி இனம், ஆனால் பலம் பொருந்திய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் கொண்ட இனம் எதிரிகளால் நிர்வாணமாக்கப்பட்டு துக்கித்த முகத்துடன் அடிமைகளாக்கப்பட்டது.
இந்த வளமான நாகரீகம் மிக்க ஈழத்தமிழருக்கு எதிராக இந்த முழு உலகையும் எதிரி தன் கையில் வளைத்தெடுத்து பேரழிவை அரங்கேற்றினான். ஆனால் இத்தனைக்குப் பின்பும் ஈழத்தமிழர்களிடம் ஐக்கியம் எனும் ஒரு பாத்திரம் கஞ்சி ஏந்தவேனும் கையில் இருந்தது. இப்போது எம்மிடம் எழும் கேள்வி இதுதான். நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு அடியுண்ட பாத்திரமாய் தமிழினம் பானம் பண்ணப் போகின்றதா என்பதே.
'அவனவன் தன்பாத்திரத்தின் அளவே பானம் பண்ணுவானாக' என்ற பைபிள் வாக்கியம் இங்கு மனம் கொள்ளத்தக்கது. நாங்கள் ஓட்டைப் பாத்திரத்தில் பானம் பண்ணப் போகிறோமா என்ற வினாவை இன்றைய தேர்தல் களம் எம்முன் எழுப்பியுள்ளது.
பல்வேறு சக்திகளையும் அரவணைத்து ஐக்கியப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாய் எம்மை அழைத்துச் செல்லவல்ல தலைவர்கள் எம்மிடம் இல்லையா என்ற வேதனை எழுகிறது. மோதல் அரசியலையே தலைமைத்துவமாக்கப் போகிறோமா அல்லது முரண்பாட்டின் மத்தியிலும் உடன்பாட்டைக் காணவல்ல ஓர் அரவணைப்பு அரசியலை தலைமைப் பண்பாக்கப் போகிறோமா என்ற கேள்விக்கு இப்போது நாம் பதிலளிக்க வேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பக்க அரசியல் முடிவு பின்வரும் விடயங்களை உணர்த்துகின்றது.
1. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் 30 வீதமே வாக்களித்தனர். மிகுதி 70 வீதமானோர் ஒதுங்கியிருந்தனர் அல்லது புறக்கணித்தனர்.
2. வாக்களித்தோரில் பெரும்பான்மையானோர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்தனர். இதன் அர்த்தம் அவர்கள் சரத் பொன்சேகாவை ஆதரித்தார்கள் என்பது அல்ல. மாறாக மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான ஆணையை இவ்வாறு வெளிப்படுத்தினர்.
3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புற நீங்கலான போதிலும், எஞ்சியுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐக்கியத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு சாதகமாக அளித்த வாக்குகளைப் பார்க்க வேண்டும்.
4. அதேவேளை, வாக்களிக்காத 70 வீதமான மக்களின் விருப்பம் வேறு எதுவாகவோ இருந்திருக்கின்றது. அதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம்.
அ) ஒரு தமிழ் வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தி தமிழரின் ஐக்கியத்தை உலகிற்கு பறைசாற்ற வேண்டும் என்பது.
ஆ) தேர்தலை புறக்கணித்திருக்கலாம்.
இ) அரசியலில் விரக்தியடைந்திருக்கலாம்.
இந்த மூன்றில் எது முதன்மை பெற்றதாக இருந்தது என்பதை மதிப்பீடு செய்ய வேண்டியது ஜனநாயகத்திற்கான ஒரு முக்கிய பணியாகும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மேற்படி படிப்பினைகளில் இருந்து நாம் பாடங்களை பெற்றுக் கொண்டது போல் இன்றைய தேர்தல் யதார்த்தம் காணப்படவில்லை. தற்போது தமிழ் தலைமைகள் பல கூறுகளாக பிளவுபட்டிருக்கும் சூழலில் ஒரு பிரகாசமான அரசியற் சூழல் தேர்தலின் பின் தோன்றும் போல் தெரியவில்லை.
அளவால் சிறிய இனம் ஐக்கியம் இன்றி பலதுண்டுளாய் பிளபுபட்டிருப்பது எதிரிக்கு மேலதிக வெற்றிகளை தேடிக்கொடுக்கும் செயலாகவே உள்ளது. இத்தனை கொடிய அனுபவத்தின் பின்பும் ஐக்கியத்தைக் கட்டி வளர்க்க எம்மை நாமே திருத்திக் கொள்ள ஏன் எம்மால் முடியவில்லை.
1972ஆம் ஆண்டு தமிழ் விரோத அரசியலமைப்பை எதிர்த்து தமிழர் ஐக்கிய கூட்டணி 1974ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பின்பு அது 1976ஆம் ஆண்டு இது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக மேலும் ஒரு பரிமாண வளர்ச்சியடைந்தது. ஆனால் இன்றைய பாரிய இக்கட்டான சூழலில் மேலும் ஐக்கியத்தைப் பலப்படுத்துவதற்கு பதிலாக 1970ஆம் ஆண்டுக்கு முன்னிருந்த சிதறல் நிலைக்கு திரும்பி, இப்பொழுது மீண்டும் துண்டு துண்டாய்ப் பிளவுபட்டுவிட்டோம்.
ஏன் எமக்கு இந்த பிளவு ஏற்பட்டது? இதற்கு யார் பொறுப்பு? என்பவற்றைச் சரிவரக் கண்டு எம் மத்தியில் ஐக்கியத்தை பலப்படுத்தத் தவறினால் வரலாறு எம்மைத் தண்டிக்கும். நாம் எமது பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் துரோகம் செய்தவர்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாவோம். ஐக்கியப்பட்ட தலைமையை உருவாக்க முடியாத ஒரு கையாலாகாத சமூகம் என்ற பழிச்சொல்லுக்கு எமது சமுகம் ஆளாக நேரும்.
சரியான சர்வதேச அரசியல் விளக்கத்துடன் எம்மக்களை நாம் ஒன்றுபடுத்தத் தயாராக வேண்டும். இப்பிராந்தியத்தின் அமைதியும், தமிழீழ மக்களின் எதிர்காலமும் ஒரு நாணயத்;தின் இருபக்கம் போன்றவை.
ஆதலால் கடந்த கால அனுபவங்களையும், இன்றைய காலகட்ட யதார்த்தத்தையும் கணக்கில் எடுத்து எதிர்காலத்தை வடிவமைக்க நாம் தவறக்கூடாது. தேர்தலின் பின்பு வரலாறு மீண்டும் ஒரு கசப்பான பாடத்தை எமக்கு போதிக்க இருக்கின்றது. நாம் அப்பாடத்தை படிக்கத் தயாராக வேண்டும்.
Pongu Thamizh - பார்வை - ஈழத்தமிழர் ஐக்கியத்திற்கு என்ன நடந்தது?