அனலை நிதிஸ் ச. குமாரன்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற சொற்பதத்தை தமிழர்கள் கடந்த ஜூன் மாதத்திற்கு முன்னர் நிச்சயம் அறிந்திருக்கமாட்டார்கள். நாடு கடந்த அரசாங்கம் என்பது ஒன்றும் புதிதல்ல. பல விடுதலைப் போராட்ட அமைப்பினர் இதனை அமுல்படுத்தி பின்னர் தனி நாடுகளாக பிரிந்து வெற்றிகண்டும் உள்ளார்கள். ஏன் திபெத் போன்ற தேசம் இன்னும் விடுதலை அடையாமல் சீனாவின் இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் இன்னும் உள்ளது. ஆனால் புத்த துறவியான தலாய் லாமா இன்னும் திபெத் நாடு கடந்த அரசாங்கத்தை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக இந்திய மண்ணில் தர்மசாலா என்னும் இடத்தில் தனி இராச்சியத்தையே நடாத்திக்கொண்டிருக்கின்றார். ஏன் இவரின் நாடு கடந்த அரசாங்கத்தின் பின்னால் பல மேற்கத்தைய மற்றும் உலகின் பல நாடுகள் உதவிக்கரமாக இருக்கின்றார்கள். இருந்தும் என்ன பலன்? காரணம் இவரால் தனது தேசத்திற்கு விடுதலை பெற்றோ தனது மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தரமுடியாமல் நிர்க்கதியாக நிற்கின்றார்கள்.
இது தான் தமிழர் தரப்பிலும் எழுப்பும் கேள்வி. அதாவது நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் எவரும் இதுவரையேனும் தங்களது நிலைப்பாட்டை திடமாகத் தெரிவிக்க தவறிவிட்டார்கள். அமெரிக்காவை குடியுரிமையாக கொண்ட குடியுரிமை சட்டவியலாரான விசுவநாதன் உருத்திரகுமாரன் விடுதலைப் புலிகளின் தலைவரினால் கடந்த வருடம் புலிகளின் வெளியுலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட கே. பி. பத்மநாதன் என்பவரினால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழு இணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் பல கசப்பான சம்பவங்களின் பின்னர் அதாவது பத்மநாதன் இலங்கையில் நாடு கடத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டிருக்கும் வேளையில் உருத்ரகுமாரன் கடந்த வருட இறுதியில் பல உறுப்பினர்களை புலம்பெயர் தமிழர் வதியும் நாடுகளில் நிறுவி பின்னர் இந்த வருட ஆரம்பத்தில் அவர் அறிவித்தார். இன்னும் சில மாதங்களில் தேர்தல் வைத்து நிரந்திர உறுப்பினர்களை தெரிவுசெய்வதாக. அதுமட்டுமல்லாமல் அவர்கள் பல நாடுகளில் அதாவது 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மீண்டும் அந்த கோரிக்கை மீது வாக்கு நடாத்தி ஆதரிப்பதென்று நடவடிக்கைகளிலும் இறங்கினார்கள். இருந்தும் தமிழீழ தேசமே தமிழரின் தாகம் என்று ஏங்கித்தவிக்கும் பலர் இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது கோபமடைந்து உள்ளார்கள் போலும், காரணம் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் முன்னுக்குப் பின்னான கருத்துகளை முன்வைக்கிறார்கள். மற்றும் இந்த உறுப்பினர்களின் உண்மையான வரலாற்றை அறியத்துடிக்கின்றார்கள். சில உறுப்பினர்கள் முன்னர் தமிழர்களுக்கு தமிழீழ தாயகம் என்பது ஒரு கனவு என்றவர்கள் இப்போது இந்த அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த அமைப்பின் அறிக்கைகளும் முன்னுக்குபின்னாக இருக்கின்றது. தமிழர் நிச்சயம் இந்த அரசிற்கு ஆதரவளிப்பார்கள். இவர்கள் ஒரு திடமான கொள்கையை மக்களுக்கு கொண்டு செல்வார்களாயின்.
தமிழர்கள் பட்ட இன்னல்கள் சொல்லில் அடங்காதவை. அவர்களின் விடுதலையை நாடு கடந்த அரசாங்கமோ மற்றும் வேறு எந்தவொரு அமைப்போ தடையாக இருக்கக்கூடதென்பது தான் தமிழர்களின் அவா. நாடு கடந்த தமிழீழ அரசு இன்னுமொரு திபெத் ஆக இருப்பதற்கு தமிழர் நிச்சயம் அதரவளிக்கமாட்டர்கள் என்பது தான் உண்மை.
சில தமிழர் முன்னுள்ள கேள்விகள்
இழந்துபோன தமிழீழ தேசத்தின் நிலங்களையும், இறையாண்மையையும் இராசதந்திர வழிகளில் வென்றெடுத்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என்று நாடு கடந்த அரசாங்க அமைப்பினர் கடந்த வருடம் சபதமெடுத்த பொழுது தமிழர் புளகாங்கிதமடைந்தார்கள். முள்ளிவாய்க்கால் அவலத்தால் வெதும்பிப்போயிருந்த மக்களுக்கு இது ஒரு ஆறுதலான செய்தி என்பது உண்மை தான். ஆனால் இன்று நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு பல்தேசிய வணிக நிறுவனம் போன்று இயங்கும் என்கின்ற மாதிரி நடவடிக்கைகள் இருக்கின்றது. மேலும் தேசம் கடந்து இயங்கும் அரசுசாரா அமைப்புப் போன்று அது செயற்படும் என்பதும். அதைவிட ஒருபடிமேல் சென்று CNN, Microsoft போன்ற முதலாளித்துவ நிறுவனங்களையும் துணைக்கு அழைப்பதாக அறிக்கைகள். இவைகள் நிச்சயமாக தமிழீழ அரசை நிறுவ உதவிக்கரமாக இருக்குமா என்பது தான் பலர் முன் உள்ள கேள்வி!
உருவாகப் போகும் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு அஞ்ஞாதவாச அரசு அல்ல என்று அறிக்கை வாயிலாக வெளிக்கொண்டுவருவதன் மூலம் நிச்சயம் மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிவரும் என்பது மட்டும் உண்மை. அதைவிட அங்கீகரிக்கப்பட்ட சிறீ லங்கா அரசுக்கு விரோதமாக இயங்கும் ஒரு அஞ்ஞாதவாச அரசுடன் உலகம் தொடர்புகளைப் பேணவிரும்பவில்லை என்றும் தெரிவித்து இருப்பதும். சிறீ லங்கா அரசுடன் முரண்பட விருப்பமில்லை என்றால் நாடுகடந்த சிறீலங்கா அரசு என்று பெயர்சூட்டிக் கொள்ளலாமே? பிறகெதற்கு தமிழீழம்? இவைகள் சில தமிழர் தரப்பில் இருந்து வரும் கேள்விக்கணைகள்.
மேலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக உலக நாடுகளுடன் பேசுவதாக இந்த அமைப்பின் இணைப்பாளர் அறிவித்தார். மேலும் இந்த முயற்சியை உலக இராசதந்திரிகள் வரவேற்பதாகவும் பிரகடனம் செய்த பொழுது பல தமிழரின் மயிர்க்காம்பெல்லாம் புல்லரித்துப் போனது. ஆனால் ஆறு மாதங்களுக்குள் அந்தர்பல்டி அடித்து இப்பொழுது புதுக்கதை வெளிக்கொண்டுவருவதென்பது நிச்சயம் பல தமிழர் மீது சந்தேகத்தை உருவாக்கும் என்பது மட்டும் நிச்சயம். மேலும் வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுடனும், கொள்கை வகுப்பாளர்களுடனும், புத்திஜீவிகளுடனும் மட்டும் பேசிக்கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டார்கள். மேலும் அரசியல் - இராசதந்திர வழிகளில் பரப்புரை செய்து தமிழீழ அரசை பெறுவதாக அறிக்கை வெளியிட்டார்கள். மேலும் ஒவ்வொரு நாடுகளின் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு இயங்கப் போவதாக அறிவிப்பானது நிச்சயம் தமிழர் மனங்களில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை.
மேலும் சில தமிழர் தரப்பு கேள்வி எழுப்புகின்றது எதற்காக ஆறு மாதங்களாக வெளிநாட்டு அதிகாரிகளுடனும், கொள்கை வகுப்பாளர்களுடனும், புத்திஜீவிகளுடனும் பேசிக்கொண்டிருக்கும் இந்த அமைப்பு எதற்காக வெளிநாட்டு அரசியல் தலைவர்களை இன்னும் அணுகவில்லை? மேலும் அவர்களின் கூற்றுப்படி இராசதந்திரம் என்பது பலத்தில் தங்கியிருப்பது. பரப்புரை என்பது இராசதந்திரத்திற்கு உறுதுணை நிற்பதே தவிர அதுவே இராசதந்திரமாகிவிடாது. யதார்த்தம் அடிப்படியிருக்கும் பொழுது அகிம்சை வழியில் என்னதான் இராசதந்திரம் செய்யப் போகின்றார்கள் இந்த நாடு கடந்த தமிழீழ அரச அமைப்பினர்?
மேலும் உலக அங்கீகாரத்தை நாடுகடந்த தமிழீழ அரசு பெறுவது சாத்தியமில்லை என்றால் எதற்காக நாடு கடந்த அரசு அமைக்க வேண்டும்? தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் அரசியல் தீர்வைப் பெறுவதற்காக நாடுகடந்த தமிழீழ அரசு உழைக்கும் என்றும் கூறும் இந்த அமைப்பு அதை எப்படி பெறுவதை என்பதை தமிழர் முன் வைக்காமல் உள்ளது நிச்சயம் தமிழர் தரப்பினரை கோபத்தை உருவாக்கும் என்பது மட்டும் உண்மை.
மேலும் இஸ்லாமியத் தமிழர்களை தேசிய இனம் என்று அறிக்கை தரும் இந்த அமைப்பு தமிழீழத்தில் முஸ்லிம்களுக்கான பிராந்தியங்கள் இருப்பதாகக் கூறும் இந்த அமைப்பினர் தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையுடையவர்கள் மற்றும் தமிழீழம் அமைந்தால் அவர்கள் விரும்பினால் தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று தனியரசு அமைக்கலாம் என்றும் ஒரு வாதத்தை முன்வைப்பதானது ஒரு மிகப்பெரிய தவறாகத தான் பார்க்கவேண்டும். மேலும் தமிழீழத்தில் இருந்து பிரிந்துசென்று தனியரசு அமைக்கப் போவதாக எப்பொழுது இஸ்லாமிய தமிழ் பேசும் மக்கள் அறிவித்தார்கள்?
இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என்று மூன்று மதங்களைச் சேர்ந்த தமிழர்களைக் கொண்ட தேசம் தமிழீழ தேசம். அதை இருகூறாக்கி இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஒருதேசம், முஸ்லிம்களுக்கு ஒரு தேசம் என்று துண்டாடும் வாதம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாதவை.
இந்த கேள்விகளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் தனது அறிக்கைவாயிலாக தமிழ் மக்களை சில புல்லிருவைகளின் பேச்சைக் கேட்டு ஏமாறவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்.
பிரசவத்திற்கு முன்னரே தாயின் கருவறையில் அழிக்கும் நடவடிக்கை
தனதறிக்கையில் உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளதாவது: "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனும் குழந்தை கருத்தரித்துள்ளதே தவிர இன்னும் அதன் பிரசவம் நடைபெறவில்லை. இதனைக் கருவிலேயே கருக்கி விடும் முயற்சியில் ஈடுபட வேண்டாமென அபாண்டமான அவதூறு பரப்ப முனைவோரிடம் நாம் வேண்டிக் கொள்கிறோம். இக் குழந்தையைத் தாய்மை உணர்வுடன் அணுகி வளர்த்தெடுக்க முன்வருமாறும் இவர்களை நாம் கோருகிறோம். தொடர்ந்தும் இத்தயை அவதூறுகளைப் பரப்புவதும் விசமத்தனங் கொண்ட சந்தேக விதைகளைத் தூவூவதும் இம்முயற்சிக்கு இடையூறு விளைவிக்க முனைவதும் தொடருமாயின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் உருவாகும் இக் குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தமிழ் பேசும் மக்களதும் பொறுப்புணர்வுள்ள ஊடகங்களினதும் கையில் தான் வந்துசேரும்."
இருதரப்பினரின் வாதங்களை வைத்து பார்க்கும் பொழுது நிச்சயம் தமிழர்கள் எப்போ தான் ஒன்றிணைவார்கள் என்ற ஆதங்கத்தை வெளிக்கொண்டுவருகின்றது. எது எப்படியாயினும் தமிழர் வாழ்வில் ஒரு விடிவு பிறந்தால் சந்தோசம் தான். மேலும் சில தமிழர்களினால் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் புறம் தள்ள முடியாதவைகளாகவே உள்ளது. திபெத் போன்றதொரு நிகழ்வு ஈழத்தமிழர் மீதும் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் இந்தக் கேள்விகளுக்கு நாம் விடை காண எத்தனிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
அதாவது இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் அமைப்பினர் சும்மா பேச்சளவில் இருக்காமல் செய்கைவழி நடவடிக்கையில் இறங்க வேண்டும் அதிலும் முக்கியமானதொன்று என்னவென்றால் நாம் உலக இராசதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் மிகவும் பின்னடைவான உறவையே வைத்துள்ளோம். நாம் எந்த அளவுக்கு பத்திரிக்கை துறையின் ஆதரவை எதிர்பார்க்கின்றோமோ அதை விட மேலான உறவை இராசதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த அமைப்பினர் ஆகக்குறைந்தது ஒரு ஐந்து நாடுகளின் ஆதரவை பெற்றா இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கினார்கள் என்பதும் தெரியாது. மற்றும் இந்த அமைப்பினர் இந்த வருட பொங்கல் தினத்திலிருந்து உத்தியோகபூர்வமான இணையத்தளத்தையும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். வாசகர்கள் இந்த அமைப்பைப்பற்றி அறியவேண்டும் என்றால் http://www.govtamileelam.org என்ற இணையத்தளம் சென்று பார்க்கலாம். மேலும் இவ் இணையத்தளம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணையத்தளமாக தற்போது இயங்கும். மதியுரைக்குழுவின் அறிக்கையினையும் இவ் இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த அமைப்பில் அங்கத்தவராக இருப்பவர்களின் அரசியல் மற்றும் சட்ட துறைகளில் எந்தளவு பாண்டித்தியம் பெற்றுள்ளார்கள் என்றால் ஒரு சிலரை தவிர பலருக்கு எதுவுமே கிடையாது. பலதரப்பினரை உள்வாங்கித்தான் நிச்சயம் வெற்றிகொள்ளமுடியும் என்பது அசைக்க முடியாது என்பது உண்மை இருப்பினும் சிலர் அப்படியிருக்கலாம் ஆனால் நிச்சயம் பலர் அரசியல் மற்றும் சட்ட துறைகளில் பாண்டித்துவம் பெற்றவர்களேயானால் நிச்சயம் இந்த அமைப்பினரின் நடவடிக்கைள் மற்றும் பேச்சுக்கள் மற்ற சமூகத்தினராலும் மற்றும் அரசியல், இராசதந்திரிகளினாலும் செவிசாய்க்கப்பட்டு தமிழரின் உண்மையான கோரிக்கையினை நிவர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும்.
நாடு கடந்த தமிழீழ அரசின் நடவடிக்கைகளை நிச்சயம் நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு எமது மக்களின் உரிமைப்போராட்டத்தை உலகமயப்படுத்தவேண்டும். எமது போராட்டம் நிச்சயமாக கொழுந்து விட்டு எரியும் தீப்பிழம்பாக எரிந்து கொண்டே இருக்கவேண்டும். ஆக இந்த அமைப்பின் நடவடிக்கைகள் எமது விடுதலையை வென்றெடுக்கும். ஆயுதப்போரட்டத்தின் மூலமாக மட்டும் எமது விடுதலையை வெல்லமுடியாது அதனுடன் சேர்ந்;து அரசியல் மற்றும் இராசதந்திர நடவடிக்கைள் மற்றும் பொருளாதார முன்னெடுப்புக்கள் மூலமும் எம்மை நாம் தக்கவைத்துக்கொள்ளமுடியும்.
நாடு கடந்த தமிழீழ அரச அமைப்பினர் நிச்சயம் மக்கள் முன் எழுந்துள்ள கேள்விக்கு திடமான பதிலை தந்து அவர்களின் எதிர்கால நடவடிக்கை எவ்வாறு தமிழீழ தனியரசை பெற்று தரும் என்பதையும் அறியத்தரவேண்டுமேன்பது தான் அனைவரினதும் பேரவா. அத்துடன் மக்கள் எண்ணிக்கையில் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி மட்டும் தங்கியிருப்பதல்ல, மாறாக எத்தனை பேர் அந்த சமுகத்தில் திறமையாளர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தான் அந்த சமுக வளர்ச்சி தங்கியிருப்பதை போன்று இந்த அமைப்பில் எத்தனை உறுப்பினார்கள் இருக்கிறார்களா என்பதல்ல முக்கியம் எத்தனை திறமைசாலிகளை இந்த அமைப்பு தன்னகத்தைக் கொண்டு இருக்கிறதென்பது தான் முக்கியம்.
ஆக நாம் அனைவரும் தாயின் கருவறையில் உருப்பெற்றுருக்கும் உயிர் அணுவை பத்திரமாக பாதுகாப்பாக வைத்து அதனை எந்தவித இடையூறுமின்றி பிரசவிப்பத்தின் மூலம் நிச்சயம் ஒரு உன்னதமான குழந்தையை இந்த உலகத்துக்கு கொடுக்க்கலாம் என்பதற்கிணங்க நாமும் இந்த நாடு கடந்த அரசை வெற்றிகரமாக உருவாக்கி எமது தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தணியாத தாகத்தை நிச்சயம் உலக நாடுகளின் ஆசீர்வாதத்தோடு பெற்று தமிழ் ஈழ தனியரசை பல முனைகளின் மூலமான போராட்டங்கள் மூலம் நிச்சயம் உருவாக்கலாம் என்பதை தாரக மந்திரமாக ஏற்று புலத்தில் இருக்கும் தமிழர் களத்தில் இருக்கும் ஈழ மக்களுக்கு அவர்தம் விடுதலையை விரைந்து பெற்றிட உறுதுணையாயிருப்போமாக.
[இக்கட்டுரையில் குறை நிறை இருந்தால் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்:
nithiskumaaran@yahoo.com or nithis.s.kumaaran@gmail.com]