போரின் இறுதி நாட்களில் சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை உடனடியாக சுட்டுக்கொல்லுமாறு கோத்தபயாவே இராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்தார் என முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து வெளிவரும் த சன்டே லீடர் வாரஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:
சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை உடனடியாகவே படுகொலை செய்யுமாறு வடபகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முக்கிய இராணுவ கட்டளை அதிகாரிக்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா உத்தரவுகளை வழங்கியிருந்தார்.
இறுதிக்கட்ட சமரில் எனக்கு அதிக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. போர் நிறைவடையும் சமயத்;தில் விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்கள் சரணடைய முயன்றிருந்தனர்.
அது தொடர்பான தகவல்கள் நோர்வே, வேறு வெளிநாட்டு அமைப்புக்கள், பசில் ராஜபக்சா ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான் போரை வழிநடத்திய போதும் அது தொடர்பான தகவல்கள் எனக்கு தெரிவிக்கப்படவில்லை.
பின்னர் பசில் இது குறித்து கோத்தபாயாவுக்கு தெரிவித்திருந்தார். ஆனால் அவர் 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவேந்திர சில்வாவை தொடர்பு கொண்டு சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை உடனடியாக கொல்லுமாறு கட்டளையிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து மே 18 ஆம் நாள் அதிகாலை சரணடைய முயன்ற விடுதலைப்புலிகளின் தலைவர்களான அரசியல்துறை பொறுப்பளர் பா. நடேசன், சமாதான செயலக பணிப்பாளர் சீ. புலித்தேவன், கட்டளை தளபதி கேணல் ரமேஷ் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆனால் அவர்களின் சடலங்களை 18 ஆம் நாள் காலை தாம் கண்டெடுத்ததாக அரசு தெரிவித்திருந்தது. வெள்ளைமுள்ளவாய்க்கால் பகுதிக்கு வடக்காக விடுதலைப்புலிகளின் அணிகளை படையினர் 100 மீற்றர் பரப்பளவினுள் சுற்றிவளைத்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சரணடைவதற்கு முன்னர் இரு அரசியல் தலைவர்களும் பல ஈ-மெயில்கள், செல்லிட தொலைபேசி தகவல்கள், தொலைபேசி அழைப்புக்களை வெளிநாட்டு அரசுகளிற்கும், அரச சார்பற்ற நிறுவனங்களிற்கும், கொழும்பில் உள்ள அதிகாரிகளிற்கும் மேற்கொண்டிருந்தனர்.
வெள்ளைகொடிகளை பிடித்தவாறு, கைகளை உயர்த்திக் கொண்டு நடந்து செல்லுமாறு அவர்களிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அவ்வாறு சென்ற போதும் அவர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
ஆனால் அவர்களை வெள்ளைகொடிகளை ஏந்தியவாறு வருமாறு பசில் ராஜபக்சாவும், கோத்தாவுமே தெரிவித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈழம்-e-செய்திகள்