(செய்தி ஆய்வு)
நேற்று சனிக்கிழமையும் (12), இன்று ஞாயிற்றுக்கிழமையும் (13) வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பிரான்ஸ் இல் நடைபெற்று வருகின்றது. இறைமையுள்ள சுதந்திரமான தனித்தமிழீழத்திற்கான அங்கீகாரம் கோரி இந்த வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.
சிறீலங்காவில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளினாலும் 1976 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் அதற்கான ஆணையை வழங்கியிருந்தனர். தமிழ் மக்களால் ஆணை வழங்கப்பட்ட இந்த அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக கடந்த 33 வருடங்களான தமிழ் மக்கள் பல வழிகளில் போராடி வந்துள்ளனர்.
அரசியல் போராட்டத்துடன், ஆயுதப்போராட்டங்களும் சமநேரத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. உலக வல்லரசுகளினதும், பிராந்திய வல்லரசுகளினதும் துணையுடன் சிறீலங்கா அரசு பெரும் படை கொண்டு தமிழ் மக்களின் போரிடும் வலுக்கொண்ட மரபுவழி படையணியின் போரிடும் வலுவை கடந்த மூன்று வருடகால போரில் சிதைத்துள்ளது.
ஆனால் அவர்களால் ஈழத்தமிழ் மக்களின் எழுச்சிகளையும், விடுதலை வேட்கையையும் அடக்கிவிட முடியவில்லை. அனைத்துலகத்தின் தத்துவங்களுக்கு ஏற்ப தமிழ் மக்கள் தமது விடுதலை போரை அரசியல் வழிகளின் ஊடாக நகர்த்தி வருகின்றனர். இந்த பாதைக்கு வலுச்சேர்க்கும் பாரிய கடமை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் தோள்களில் வீழ்ந்துள்ளது. தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அவர்கள் மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றி வருகின்றனர்.
கடந்த மே மாதம் நோர்வேயில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஏறத்தாள 99 விகித வாக்குகளை வழங்கி வட்டுக்கோட்டை தீர்மானம் தான் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான ஒரே தீர்வு என்பதை நிரூபித்திருந்தனர். தற்போது அதற்கான ஆதரவினை பிரான்ஸ் இல் வாழும் ஈழத்தமிழ் மக்கள் வழங்கி வருகின்றனர்.
நேற்று சனிக்கிழமை (12) பிரான்ஸ் இல் அமைக்கப்பட்டிருந்த 30 வாக்குச்சாவடிகளிலும் மக்கள் வெள்ளம் அலைபுரண்டதாக பிரான்ஸ் இல் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் குளிரின் மத்தியிலும், இருளையும் பொருட்படுத்தாது மக்கள் நீண்ட வரிசையில் நின்றதை கண்டு பிரான்ஸ் நாட்டு மக்கள் ஆச்சரியத்துடன் பார்ததாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
முள்ளிவாய்காலில் எமது தேசத்தின் போரிடும் வலு முறியடிகப்பட்டுள்ளது என்ற இறுமாப்பில் மிதந்த சிங்கள தேசத்திற்கும் அதற்கு உறுதுணை வழங்கிய இந்தியா என்ற பிராந்திய வல்லரசிற்கும் இது பேரிடியாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் கண்காணிப்புக்களுடன் நடைபெறும் இந்த தேர்தல் இழந்த எமது உரிமைகளை மீறப்பெறுவதற்கான அங்கீகாரம்.
நாம் இதனை தவறவிட்டால் வரலாறு எம்மை மன்னிக்காது. மென்ரோ நீக்குரோ என்ற சின்னம் சிறிய தேசம் தனது தனிநாட்டு கோரிக்கைக்காக வாக்கெடுப்பை நடத்திய போது அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த அல்பேனிய மக்களும் சிறப்பு விமானத்தில் சென்று வாக்களித்து தமது நாட்டை தனிநாடாக அங்கீகரித்த வரலாறு சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததை நாம் மறந்துவிடலாகாது.
எனவே பிரான்ஸ் இல் நடைபெறும் வாக்கெடுப்பை முற்று முழுதாக வெற்றிபெற செய்வதுடன், எதிர்வரும் வாரம் டிசம்பர் 19 ஆம் நாள் சனிக்கிழமை கனடாவில் நடைபெறும் வாக்கெடுப்பையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.