"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
Published On: Wed, Oct 5th, 2011
இலங்கையில் நான் இருந்தபோது போலீஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. காரணம், அங்கே அந்தக் கட்டமைப்புகள் அரிது. ஆனால் ராஜீவ் வழக்கில் சிக்கி,
அனுதினமும் போலீஸின் கையில் நான் அனுபவித்த சித்ரவதைகளும், ஏறி இறங்கிய நீதிமன்ற அவஸ்தைகளும் கொஞ்ச நஞ்சம் அல்ல. ‘குற்றம் சாட்டுபவர்கள் அதற்குரிய தகுந்த, நம்பகமான உண்மைகளை சாட்சியச் சான்றுகளை முன்வைத்து நிரூபணம் செய்ய வேண்டும்!’ என்பதுதான் உலகம் முழுக்கப் பின்பற்றப்படும் குற்ற நடைமுறைச் சட்டங்களின் அடிப்படைக்கூறு! ஆனால், எமது விடயத்தில் இந்த அதிமுக்கியமான மனித சமூக விழுமியத்தினைப் பாதுகாக்கும் இந்த சட்டக் கோட்பாடு, கருணை இன்றி தவறாகக் கையாளப்பட்டது.
சட்டக் கோட்பாடு மீறப்பட்டதற்கும், அதன் குரூர நாக்குகள் எங்களைக் கொத்தியதற்கும் காரணம், எம்மையோ அல்லது வேறு யாரையோ தண்டித்துவிட வேண்டும் என்ற அதிகாரப் பேராசைதான்! ஒரு மனிதன் தான் செய்யாத தவறுக்கு அநேகமான சூழ்நிலைகளில் சாட்சிய சான்றுகள் காட்ட முடியாது என்பது இயற்கையின் நியதி மட்டும் அல்ல; அறிவியல், தர்க்கவியல் உண்மையும்கூட!
குறிப்பிட்ட குற்றம் நடந்த இடத்தில் நான் இல்லை என்றும், அந்த நேரத்தில் நான் என் வீட்டில்தான் இருந்தேன் என்றும் நிரூபணம் செய்ய என் வீட்டார்தான் சாட்சியம் சொல்ல வேண்டும். ஆனால், என் வீட்டாரையே குற்றவாளிப் பட்டியலிலும் அரசுத் தரப்பு சாட்சிப் பட்டியலிலும் சேர்த்துவிட்டு, ‘உன்னை நிரபராதி என நிரூபி’ என்றது சட்டம். யாரைப் பிடித்து நான் நிரூபிக்க முடியும்? நடந்தது சாதாரண சம்பவம் அல்ல. நாட்டையே குலுங்கவைத்த கொலை. தமிழகத்தின் சட்ட நிலைமைகள், நீதிமன்ற விவகாரங்கள், போலீஸ் நடவடிக்கைகள் எல்லாம் எப்படி இருக்கும் என்றுகூட எனக்குத் தெரியாது. சிக்கிச் சின்னாபின்னமாகி, மரணத்தின் வாசலை அனுதினமும் தொட்டுத் திரும்பிய வேளையில்தான், போலீஸ் நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பது புரியத் தொடங்கியது.
அதில், அதிகாரிகளின் குரூரச் சித்ரவதை ஒன்றை உங்களிடம் அவசியம் சொல்ல வேண்டும். ஒப்புதல் வாக்குமூலத்தில் என்னிடம் வற்புறுத்திக் கையெழுத்து வாங்குவதற்காக அதிகாரிகள் இந்தச் சித்ரவதையை என் மீது பாய்ச்சினார்கள். அதாவது, ஒரு மேஜை மீது என்னைக் குப்புறத் தள்ளி, இரு பாதங்களும் வெளியே தொங்கும்படி படுக்கவைத்து, இரு கால்களையும் கட்டுவார்கள். பின்னர் என் மீது நாலைந்து பேர் ஏறி அமர்ந்துகொள்ள, குதியில் (பாதத்தில்) கட்டையால் தொடர்ச்சியாகப் பலமாக அடிப்பார்கள். உச்சி மண்டையே உடைந்து சிதறும் அளவுக்கு வலி பெருக்கெடுக்கும். இன்னும் ஓர் அடி அடித்தால் உயிர் நின்றுவிடும்போல் தோன்றும். இந்தச் சித்ரவதையின் விளைவு என்ன என்றால், குறைந்தது மூன்று நாட்களுக்கு எழுந்து நிற்கவே முடியாது. காலைத் தரையில் வைத்தால் உயிரே போய்விடும். அது மட்டும் அல்ல… இந்த சித்ரவதைக்கு அடிக்கடி ஆளாகுபவர்களால் ஜென்மத்துக்கும் ஓடவோ, வேகமாக நடக்கவோ முடியாது. பாத நரம்புகள் முழுமையாக செயல் இழந்துவிடும்.
இந்தச் சித்ரவதையின் இன்னொரு பகுதியாகத் தலைகீழாக அந்தரத்தில் கட்டித் தொங்கவிட்டு அடிப்பார்கள். பின்பக்கம் பழுத்து வீங்கிவிடும். அன்றாடக் கடன்களைக் கழிக்கக்கூட திண்டாடித் தவிக்க வேண்டிய நிலையாகிவிடும். ஒருவரை அடிக்கும்போது, மற்ற ஓர் எதிரியை அழைத்துவந்து காட்டுவார்கள். அப்போது ஏற்படும் பீதி, அடி வாங்குவதைவிடக் கொடுமையானது. என்னைத் தலைகீழாகக் கட்டும்போது மரண ஓலமிடத் தோன்றும். ஆனாலும், பல்லைக் கடித்தபடி அடக்கிக்கொள்வேன். காரணம், என் அலறல் என் கர்ப்பிணி மனைவிக்குக் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக. ஆனால், நகக் கணுவின் இடுக்கைக்கூட ஆராய்ந்து கண்டுபிடித்துவிடும் அதிகாரிகளுக்கு நான் அலறாமல் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாது. தலைகீழாகத் தொங்கவிட்டு, அடி, உதைகளை அரங்கேற்றியபடியே, ‘உன் எதிரே யார் நிக்கிறதுன்னு பார்’ என்றார்கள். அடி, உதையின் மயக்கமும், தலைகீழாகத் தொங்கும் அவஸ்தையும் கண்களைக் கிறுகிறுக்க வைத்திருக்க, எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. விம்மி வெடிக்கும் அழுகுரல் கேட்டு, கண்களைத் திறந்தால் எதிரே என் கர்ப்பிணி மனைவி நளினி.
‘என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடியுங்கள்… கொல்லுங்கள். ஆனா, அவளை அனுப்பிடுங்க சார்… அவளால தாங்க முடியாது!’ எனக் கதறினேன். அந்தக் கதறல் அதிகாரிகளுக்குப் பிடித்திருந்தது. நளினியை பார்க்கவைத்தபடியே தொடர்ந்து என்னை அடித்தார்கள். கதறக் கதற எனது விரல்களைப் பின்னோக்கி வளைத்தார்கள். இதேபோல் எந்தப் பக்கம் எல்லாம் வளைக்க முடியாதோ, விரிக்க முடியாதோ… அந்தப் பக்கம் எல்லாம் உறுப்புகளை வளைத்து அலற வைத்தார்கள்.
என் விரல் இடுக்குகளில் குச்சிகள், பென்சில்கள், பேனாக்களைவைத்து புண்ணாகும் வரை நெரித்தார்கள். இந்தச் சித்ரவதைகளை நளினிக்கும் செய்தார்கள். சிமென்ட் தரையில் சிறு கற்களைத் தூவி அதன் மீது முட்டிபோட்டு, மணிக்கணக்கில் கைகளை முன்பே நீட்டியபடி நிற்க வைப்பார்கள். கற்கள் முழங்கால்களை ரத்தமாக்க, கைகள் ஒடிந்துவிடுவதுபோல் வலிக்கும். முழங்காலை ஒரு பாகை கோணத்தில் மடித்து கைகளை முன்பே நீட்டிய வண்ணம் (நாற்காலி வடிவில்) மணிக்கணக்கில் நிற்க வைப்பார்கள். ஆரம்பத்தில் ஏதோ உடற்பயிற்சி போலத்தான் இருக்கும். ஆனால், நேரம் ஆக ஆக நரம்புகளே அறுந்துபோகிற அளவுக்கு வலி எடுக்கும். சிறிது நேரத்திலேயே நிற்க முடியாமல் கீழே விழுந்துவிடுவேன். அதற்காகவே காத்திருந்தவர்களைப்போல் சரமாரியாகத் தாக்குவார்கள்.
இன்னொரு விசாரணை அதிகாரிக்கு சினிமாக்களில் வரும் சண்டைக் காட்சிகளைப்போல் செய்து காட்ட ஆசை. அதற்காக என்னை நிலத்தில் அமரவைத்து, அவர் ஒரு சுழல் நாற்காலியில் அமர்ந்துகொள்வார். அவர் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போதே, ‘எங்கிட்டேயே பொய் சொல்றியா நாயே…’ என்றபடியே நாற்காலியைச் சுழற்றிச் சுழற்றி காலால் உதைப்பார். முடிவில், பெரிதாக எதையோ சாதித்துக் கிழித்துவிட்டவரைப்போல், ‘எப்படி நம்ம அடி?’ என என்னிடமே கருத்துக் கேட்பார்.
விசாரணை அலுவலகத்தில் வெறும் ஆறு அடி நிலப்பரப்பில்தான் என் வாழ்க்கை. புரண்டு படுக்கக்கூட இடம் இருக்காது. போய்ச் சேரும் காலத்தில்தான் ஆறு அடி நிலம் தேவை என்பார்கள். வாழும் காலத்திலேயே அந்த அவஸ்தையை அனுபவித்தவன் நான். மூன்று பக்கம் இரும்பு அலமாரியின் கதவுகளும், ஒரு பக்கம் நாற்காலியும் போடப்பட்டு இருந்தன. தொடர்ந்து 60 நாட்களாக அதே குறுகிய இடம்தான்… அதே அவல வாழ்க்கைதான்!
கையில் விலங்கு மாட்டி, அதற்கு ஒரு தொடர்பு சங்கிலி போட்டு அருகில் உள்ள நாற்காலியின் காலில் கட்டி வைத்திருந்தனர். சாப்பிடும் போதுகூட என் இரு கைகளிலும் அந்த விலங்கு அப்படியே இருக்கும். 15 நாட்கள் வரை என்னைக் குளிக்கக்கூட அனுமதிக்கவில்லை.
எங்களுக்கான சித்ரவதைகள் எப்படிப்பட்டவை என்பதைச் சொல்ல ஒரே ஆதாரம் கோடியக்கரை சண்முகம். ராஜீவ் கொலை வழக்கில் தானாக முன்வந்து சரண் அடைந்த தொழில் அதிபர் அவர். 14.6.91 அன்று முதல் நாங்கள் அவருடன் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருந்தோம். சண்முகம் மிகுந்த பணக்காரர். அரசியல்வாதிகள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கு உண்டு. அவர் மர்மமான முறையில் 19.7.91 அன்று இறந்துபோனார். அவர் இறந்த பின்னணி குறித்து அப்போதே மீடியாக்கள் பல விதமான சந்தேகங்களையும் பட்டியல் இட்டன.
சண்முகம் மரணத்துக்குப் பின்னர் அவர் குடும்பத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வீரசேகரன் அவர்கள் மீது தடா வழக்கின் கீழ் பொய் வழக்குப்போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். மிகவும் பண வசதியும், செல்வாக்கும்கொண்ட சண்முகத்துக்கும், அவருக்காக ஆஜரான ஒரு வழக்கறிஞருக்குமே இப்படியான கதி என்றால், என்னைப்போன்ற வெகு சாதாரண ஜீவன்களை எல்லாம் ஒரு புழுவுக்கு நிகராகத்தானே அதிகாரிகள் பார்த்திருப்பார்கள்?!
60 நாள் போலீஸ் காவல் முடிவதற்கு முதல் நாள் ஒப்புதல் வாக்குமூலம் எனப்படும் தாள்களில் என்னிடம் கையெழுத்து வாங்க வந்தார்கள். அதாவது, அடிக்க வேண்டிய அத்தனைவிதமான அடிகளையும் அடித்து, உடலின் அத்தனை பாகங்களையும் சொரணை இழக்கவைத்து, ‘உயிர் மட்டுமே மிச்சம்’ என்கிற நிலையில் 8.8.91 அன்று மாலை 6.30 மணி அளவில் ஓர் அதிகாரி முன்னிலையில் என்னைக் கொண்டுபோய்விட்டனர். என்னை எதிரே நிற்க வைத்துவிட்டு, அவர் வெள்ளை பேப்பரில் அவர் மனதுக்குத் தோன்றிய கற்பனைகளை எல்லாம் எழுதினார். எழுதிய பகுதிகளை என்னிடம் காட்டாமல் மறைத்தபடி என்னிடம் கையெழுத்து கேட்டார். அவர் எழுதியதை என்னிடம் காட்டாவிட்டாலும், என்னை வசமாகச் சிக்கவைக்கும் விதமாகவே அது எழுதப்பட்டது என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அதனால், கையெழுத்துப்போட மறுத்துக் கதறினேன்.
கேட்கக் கூசும் ஆபாச வார்த்தைகளால் என் மனைவியையும், தாயாரையும் கேவலப்படுத்திப் பேசினார்கள்.
‘இத்தனை நாள் அடி வாங்கியும் நீ திருந்தலையா… உன்கிட்ட எப்படிக் கையெழுத்து வாங்குகிறேன் பார்!’ என்றபடி என்னைத் தனி அறைக்கு அனுப்பிவைத்தார். மீண்டும் இரவு 8 மணிக்கு என்னை அழைத்தார். அந்த அறையில் அவரது கையின் அருகில் ஏற்கெனவே என்னை அடித்து சிதைந்துபோன ஒரு தடியும், ஒரு புதிய தடியும் வைக்கப்பட்டு இருந்தன. அவருடன் என்னை மிகக்கொடுமையாக அடித்த இன்னொரு அதிகாரியும் உடன் இருந்தார். அவர்களின் விஷமத்தனமான பார்வையே அவர்கள் நிகழ்த்தப்போகும் பேராபத்தை எனக்குப் புரியவைத்தது. கையெழுத்துப் போடாவிட்டால், அந்த இடத்திலேயே என்னைக் கொலை செய்ய முடிவு எடுத்துவிட்டார்கள்.
‘கையெழுத்துப் போடுறியா… இல்லை, உயிரை விடுறியா?’ என உக்கிர வெறியோடு கேட்டார்கள். உயிரை விடுவதற்கா இத்தனை நாட்கள் இவர்களிடம் உதை வாங்கிக்கிடந்தேன்? சிறு குழந்தையாக நளினியின் வயிற்றில் வளரும் என் தளிரின் முகத்தை எப்போது பார்ப்பேன்… சிறைக் கொட்டடியில் இருந்து என் தளிரை வெளியே அனுப்பிவைக்கும் வரை எப்படி என் உயிரை இழப்பேன்? என் குழந்தையின் முகத்தைக் காணும் வரை என்னைக் கொன்றுவிடாதீர்கள் என்று அவர்களிடம் எப்படிச் சொல்வேன்? இனியும் தயங்கினால், கோடியக்கரை சண்முகத்துக்கு ஏற்பட்ட சாவே எனக்கும் ஏற்படும் என்பது உறுதியானது.
என் வாரிசின் முகம் பார்க்காமல் உயிரைவிட எனக்கு விருப்பம் இல்லை. அதேநேரம், அவர்கள் அடித்தே கொன்றுவிடுவார்களே என்கிற பயத்துக்கும் பதில் இல்லை. என்னைக் காத்துக்கொள்ள அப்போது எனக்கு இருந்த ஒரே வழி… அவர்கள் சித்திரித்திருந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடுவதுதான். ‘ஏதோவொரு ஆபத்து என்னைச் சூழ்கிறது’ என்கிற நடுக்கத்துடனேயே கைகள் துடிக்கக் கையெழுத்துப் போட்டேன். எட்டு வருடங்களுக்கு முன்னால் என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நான் போட்ட கையெழுத்தே, என் உயிரைக் காவு வாங்கும் சாட்சியாக மாறிப்போனதுதான் என் ஜென்மத் துயரம்!
காயங்கள் ஆறாது…
ஜூனியர் விகடன்
Global Peace Support Group UK Ltd is a registered organisation based in London. The organisation dedicated to be involved in humanitarian and other related issues. We also work along with other similar organisations to promote peace and harmony among various societies..
GLOBAL PEACE SUPPORT GROUP - UK - TIRELESSLY WORK ON THE CONCEPT OF:
"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
MOURNS ON THE CONTINUED TRAGEDY OF THE PEOPLE OF North & East of Tamil EELAM WITH THE HOPE OF ALL OF OUR ENDEAVOURS WOULD BRING AN END TO THOSE SUFFERING DURING THE YEAR AHEAD.
The International community has a duty towards the long suffering Sri Lankan Tamil population to restore their rights of SELF DETERMINATION.
Global Peace Support Group - believes that this is the ONLY way for a permanent PEACE in Sri Lanka.