(லங்கா அரசின்மீது அனைத்துலக சமூகம் கவனம் கொள்ளாமைக்கு காரணம் என்ன?)

Posted: 02 Oct 2011 08:27 PM PDT

சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் அண்மையில் வெளியிடப்பட்ட, படுகொலைகள், வன்புணர்விற்குட்படுத்தப்பட்ட பெண்களின் உடலங்கள், குண்டுத் தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அகழிகளுக்குள் பதுங்கியிருந்த பொதுமக்கள் போன்ற காட்சிகள் கம்போடியா மற்றும் யூகோசிலோவியாவில் இடம்பெற்ற கொலைக்களக் காட்சிகளை மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.

இவ்வாறு நொற்றிங்காம் பல்கலைகழக மாணவர் அமைப்பின் ‘Impact’* என்னும் அதிகாரபூர்வ இதழில் Dineke Pardijs எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அண்மையில் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்ட மேற்படி காட்சிகள் இரு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவில் இடம்பெற்ற குருதி தோய்ந்த இறுதிக் கட்ட உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக் காட்சிகளாகும்.

ஐ.நா, செஞ்சிலுவைச் சங்கம், அனைத்துலக மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்கள் சிறிலங்காவில் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என ஆதாரப்படுத்தி கருத்துக்களை வெளியிட்ட போதிலும், இது தொடர்பான அனைத்துலக விசாரணை ஒன்று இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அனைத்துலக நாடுகளின் கவனம் போதியளவில் குவியாமைக்கான காரணம் என்ன?

சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைக் குழுக்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட தமிழர்கள் தமக்கான சுதந்திரமான நாடொன்றை உருவாக்க முயன்றதன் விளைவாகவே அங்கே உள்நாட்டுப் போர் ஒன்று ஆரம்பித்தது.

தமிழ்ப் புலிகள் என அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இரத்தம் தோய்ந்த உள்நாட்டுப் போர் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் சிறிலங்காத் தீவின் சில பகுதிகளை பல ஆண்டுகளாகத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.

2008ல் சிறிலங்கா அரசாங்கமானது தமிழர் பகுதிகள் மீது பெருமெடுப்பிலான தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கியது.

பொதுமக்களை ‘போரற்ற வலயத்திற்குள்’ செல்லுமாறு தூண்டிய சிறிலங்கா அரசாங்கமானது அந்த வலயங்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதுடன், யுத்தத்திற்குள் அகப்பட்டுக் கொண்ட 330,000 வரையிலான மக்களுக்கு சென்றடையவேண்டிய எந்தவொரு மனிதாபிமான உதவிகளையும் வழங்க மறுத்தது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிற்குளிருந்த பொதுமக்களை வேறு பிரதேசங்களுக்குச் செல்வதற்குத் தடைவிதித்தனர். இதனால் 40,000 தொடக்கம் 75,000 வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆபிரிக்க நாடுகளில் இடம்பெறும் படுகொலைகள் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றானது விசாரணைகளை மேற்கொள்கின்ற போதிலும், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதில் சில அந்நியத்தன்மை காணப்படுகின்றது.

எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவானது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் உறுப்பு நாடாக இல்லாததால், ஐ.நா, பாதுகாப்புச் சபையானது இத்தீவில் நிலவும் பிரச்சினை தொடர்பாக வழக்கறிஞர்களிடம் குறிப்பிடும் பட்சத்திலேயே நீதிமன்றம் இது விடயத்தில் தனது தீர்வை வழங்க முடியும்.

ஐ.நா, பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள், சிறிலங்கா விவகாரம் தொடர்பாக போதியளவு கரிசனை காட்டாததால் இது தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் தீர்மானம் எடுக்க இயலாது.

அத்துடன் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏனைய உலக நாடுகள் போதியளவு தகவல்களை அறியாதிருக்கலாம்.

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் ‘அவர்களது சொந்தப் பாதுகாப்புக்’ கருதி சிறிலங்காவின் யுத்த வலயத்திலிருந்து அகற்றப்பட்டமை, பத்திரிகையாளர்களின் பிரசன்னம் இல்லாதிருந்தமை, சிறிலங்கா இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முரண்பாடான தகவல்கள் போன்றவற்றால் உண்மையில் இங்கு என்ன நடந்ததென்பதை தெளிவாக அறிக்கையிடுவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை.

தற்போது வெளிவந்துள்ள சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் காட்சிகள் மிகவும் சிறிய ஒளிப்படக் கருவிகளிலும், செல்லிடத் தொலைபேசிகளிலும் எடுக்கப்பட்டவையாகும்.

பல ஆண்டுகளாக ‘தமிழ்’ என்ற சொல்லானது பயங்கரவாதத்துடன் இணைத்தே அடையாளப்படுத்தப்பட்டமை பிறிதொரு விடயமாக உள்ளது. அரசியல்வாதிகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் பெண் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொள்கின்ற போர் உத்தியை முதலில் புலிகள் உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தனர்.

போதியளவு சாட்சியங்கள் இல்லாது இவ்வாறான பதிவுகளை மாற்றுவதுடன், தமிழ்ப் பொதுமக்களே அரசாங்கத்தின் பிரதான விரோதிகளாக உள்ளனர் என்பதை நிரூபிப்பது மிகவும் கடினமான பணியாகும்.

1948ல் சிறிலங்காவானது சுதந்திரமடைந்ததிலிருந்து ஐக்கிய இராச்சியமானது இதன் விடயத்தில் அரிதாகவே ஈடுபட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் உப ஆபிரிக்கா கண்டத்திலும் இடம்பெறும் மோதல்கள் தொடர்பாக தீர்வை எட்டுவதற்கான சந்தர்ப்பங்கள் சிறிதளவாவது உள்ளது. இச்சூழ்நிலையானது உள்ளக ரீதியான பிரச்சினையாக உள்ளது.

பயங்கரவாதம் மீதான தாக்குதல் இடம்பெற்ற சிறிலங்காவானது தற்போது உலகில் எஞ்சியுள்ள சில பௌத்த நாடுகளில் ஒன்றாகும். இதற்கப்பால் புலிகளின் இந்தத் தந்திரோபாயமானது அல்குவைதாவால் பின்பற்றப்பட்டுள்ளது. இக்குழுக்கள் தொடர்புபட்டுள்ள என்பதற்கு சிறிதளவு ஆதாரங்களே உள்ளன.

சுருக்கமாகக் கூறின் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் ஈடுபடுவதன் மூலம் மேற்குலக நாடுகள் எந்தவொரு நலனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

சிறிலங்காவில் உள்ள கடற்கரைகள் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன. அத்துடன் உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிக்கான ஒரு பகுதிப் போட்டிகள் சிறிலங்காவில் இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது இடங்களுக்குத் திரும்பிவந்துகொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டில், 200,000 இற்கும் மேற்பட்ட உள்ளக இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடிந்துள்ளது.

இதே போக்கு இவ்வாண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதுஎவ்வாறிருப்பினும், பெரும்பாலான சிறிலங்கர்கள் தற்போதும் இடம்பெயர்ந்தே வாழ்கின்றனர். அதாவது நாட்டின் உள்ளேயும் வெளியேயும் இடம்பெயர்ந்துள்ளனர்.

பெருந்தொகையில் வெளிநாட்டு உதவிகள் சிறிலங்காவிற்கு வந்தடைகின்றன. ஆனால் போரால் சிதைவுற்றிருந்த பொருளாதாரம் மீளவும் முன்னேறத் தொடங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசாங்கம் தோற்கடித்ததானது இந்நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டுவந்தது போல் தெரிகிறது. எவ்வாறிருப்பினும், பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இதற்காக பெருந் தொகையைச் செலுத்த வேண்டியிருந்தது.

இவ்வாறான சம்பவங்கள் பெரியளவில் வெளிக்காட்டப்படாத போதிலும்கூட வல்லரசு நாடுகள் இதனை மறக்கடிக்காமல் சிறிலங்கா விவகாரத்தில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

நித்தியபாரதி

Dineke Pardijs

*Impact is The University of Nottingham‘s official student magazine.