"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
இன்றைய சூழலில் என்ன இது “தாய்த் தமிழின் எழுச்சி காண்போம்” என்கிறாரே என்ற ஐயம் ஏற்படுவது இயல்புதானே! வெளிப்பகையால் உட்பகையால் தாய்த் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு அச்சம் கொள்ள வைக்கிறதே! என் செய்வது? இதற்கு விடைதான் தலைப்பு !
தஞ்சை கோ.கண்ணன்
“ பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலி நீர் – கையகலக்
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”
என்ற புறப் பொருள் வெண்பாமாலைச் செய்யுள் கூற்றுக்கிணங்க நம் தமிழ் நாட்டில் பழங் கற்கால அகழ்வுகள், கற்கருவிகள், கற்கோடரிகள் எனப் பழைய வடஆற்காடு மாவட்டத்தில் அடங்கிய சென்னை பல்லவபுரத்தில் (பல்லாவரத்தில்), பூண்டிக்கருகில் அத்திரம்பாக்கத்தில் உள்ள கொற்றலை ஆற்றுப் படுகையில், குடியம் குகைகளில் , கல்லாறு / அடையாறு தோன்றுமிடங்களாகிய பொத்தேரி, வல்லக்கோட்டை மலைகள் போன்ற இடங்களில் காணக் கிடைக்கின்றன !
கண்களை மூடிக்கொள்ளுங்கள்! காலப் பெட்டகத்தில் ஒரு பின்னோக்கிய பயணம் செய்வோம்! ஓராண்டோ இரண்டாண்டுகளோ அல்ல இரண்டு இலக்க ஆண்டுகட்கு ( இருநூறாயிரமாண்டுகட்கு) முன்பே அதாவது பழங் கற்காலத்திலே சென்னை பல்லாவரம் மலைகளுக்கு நடுவில், உலக முதல் மாந்த இனம், வளர்ந்த முதல் படி நிலையில் வாழ்ந்தார்கள் !
பல்லாவர மலையும் அதனுச்சியில் உள்ள மரமும் !
நாற்புறமும் மலைகள் சூழ, விலங்குகள், வெள்ளம் முதலிய இடரின்றி வாழ்ந்தனர். கடலும் மிக அருகே அக்காலத்தே நெருங்கியிருந்தது! இன்றும் கடலிலிருந்து சென்னை நகரை நோக்குங்கால் முதலில் தெரிவது பல்லாவரம் மலைமீதமர்ந்த மரம் ! மெல்ல மெல்ல உயரும் பல்லாவரம் மலைதான் கப்பலில் வரும் கடலோடிகளின் கண்களில் படும் !
“எம்மைப் பார்க்க மாட்டாயா? ஆய்ந்தறிய மாட்டாயா? இவுலகிற்கு எடுத்துச் சொல்ல மாட்டாயா ?” என எம்மைப் பல்லாவரம் மலைகள் பார்த்துக் கேட்டன ! எதற்குச் சொல்கிறோம் ? ஏன் கூறுகிறோம் ? ஆங்கே இன்றும், இனிமேலும் பழங் கற்காலத் தரவுகள் ஆய்ந்தறியக் காத்துக் கொண்டிருக்கின்றன ! தமிழ்நாட்டரசும், தொல்லியல் ஆய்வறிஞர்களும், முதன் முதலில் உலகின் நிலமும் பொழுதும் கண்டறிந்த மாந்த இனத்தின் நிலத்தின் தொன்மை பற்றிய ஆய்வைத் தொடருவார்களா ?
அப்படித்தான் எதிர்பாரா வண்ணம் 148 – ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை பல்லாவரம் இந்தியத் தரைப்படை வளாகத்தின் எல்லைக்குட்பட்ட மலைகள் உள்ள பகுதியில் சர். ராபர்ட் புருசு பூஃட் (Sir Robert Bruce Foote) எனும் ஆங்கில அரசின் இந்தியப் புவியியல் அளவைத் துறையின் நிலவியலாளர் 1863 – ஆண்டு, மே திங்கள் 30 – ஆம் நாள் முதன் முதலில் பழங் கற்கால கற்கோடரியை, பல்லாவர மலைகளில் கண்டெடுத்தார் .
பழங் கற்காலத் தொழிற்சாலை
(புகைப்படம்: நன்றி: எசு. தாந்தோணி இந்து நாளிதழ் 13-05-2006)
சர். ராபர்ட் புருசு பூஃட் ( 1834-1912 )
(புகைப்படம்: நன்றி தமிழ் நெட் வலைத்தளம் 08 – 09 – 2009)
இம்மலைகளில் பல கற்கருவிகளும், மலையுச்சியில் முதுமக்கள் தாழிகளும், பானை ஓடுகளும் கிடைத்தன. 30 – ஆண்டுகட்கு மேல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவருக்கு , 28-09-1863 அன்று வில்லியம் கிங் என்ற ஆய்வாளரின் துணையுடன் பூண்டிக்கருகில் அத்திரம்பாக்கம் கொற்றலை ஆற்றுப் படுகைகளிலும் தாழிகள், பானைகள், கற்காலக் கருவிகள் என கிடைத்தன.
அத்திரம்பாக்கம்: : பழங் கற்கால கற்கோடரிகள்
(புகைப்படம் : நன்றி-தொல்லியல்துறை தமிழ்நாடு )
அதே போல கல்லாறு – அடையாறு, பொத்தேரி – வல்லக்கோட்டை மலைகளில் தோன்றி மலையப்பட்டு எனும் சிற்றூரில் இணைந்து ஆறாகப் பரிணமித்து இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த பொத்தேரி, வல்லக்கோட்டை மலைகளிலும் பழங் கற்காலத் தரவுகள் கிடைத்தன.
எனவே சர். ராபர்ட் புருசு பூஃட் அவர்கள் “ மதராசு கற்கோடரித் தொழிற்சாலை” என அக்கால வட ஆற்காடு மாவட்டத்தைப் பெயரிட்டழைத்தார். இந்த அரிய கண்டு பிடிப்புதான் அவருக்கு இந்திய பழங்கற்கால ஆய்வின் தந்தை ( Father of Pre-historic India ) என்ற பெயரினை ஈட்டித் தந்தது. இவைதான் தெற்காசியாவின் பழங் கற்காலக் கண்டுபிடிப்பின் முதல் பணியாகவும் பாராட்டப்படுகிறது. பழங் கற்கால ஆய்வின் வித்தாகவும், திருப்பு முனையாகவும் இந்தக் கண்டுபிடிப்பு அமைந்தது மேலும் சிறப்பினைக் கூட்டுகிறது.
இப்படிப்பட்ட தமிழ் நிலத்தின் தொன்மை சார் கற்கால முதல் அகழாய்வு நடந்த பல்லாவர மலைப் பகுதிக்குச் சென்ற வியாழக் கிழமை (22-02-2011) திருவள்ளுவராண்டு ௨௦௩௨, கும்பத் திங்கள் ௰- ஆம் நாள், மாகடல் உள்ளிட்ட தமிழ் நிலத் தொன்மை பண்பாட்டு ஆய்வர் அறிஞர் ஒரிசா சிவ. பாலசுப்ரமணியன் ஓ+ அவர்களின் அழைப்பின் பேரில், நானும், தென்மொழி இதழ் ஆசிரியர் பூங்குன்றன் அவர்களும் சென்றோம் . தெற்காசியாவின் முதல் பழங் கற்கால அகழ்வாதாரங்கள், கற்கருவிகள், கற்கோடரிகள் கண்டுபிடிக்கப்பட்ட பல்லாவரம் மலைகளைக் காணச் சென்றோம். கண்டோம் ! கண்டறியாதன பல கண்டோம் !
கடல் உள்ளிட்ட தமிழ் நிலத் தொன்மை பண்பாட்டு ஆய்வர், அறிஞர் ஒரிசா சிவ. பாலசுப்ரமணியன் ஓ+ : பல்லாவர மலையில் ஓர் ஆய்வு !
நாங்கள் சென்ற நோக்கமே வரவிருக்கும் மே திங்கள் 30 – ஆம் நாள் சர். ராபர்ட் புருசு பூஃட் அவர்களின் கற்கால அகழ்வாய்வின் நினைவு நாளாகக் கொண்டாட, தெற்காசியாவின் முதல் பழங் கற்காலக் கருவிகள் கிடைத்த இடத்தில் நினைவுச்சின்னம் எழுப்ப வேண்டும் என்பதுதான்.
பல்லாவரம் திரிசூலத்தில் பல ஆண்டுகளாக வாழும் முதியவர் ஆறுமுகம் என்பவரை அந்தக் காட்டிலே சந்தித்தோம். பல்லாவர மலை பற்றி அவர் அறிந்தவைக்ளைக் கூறினார். மலையுச்சியில் தாழிகள் கிடைத்தன என்றும் இன்னும் உடைந்த பானையின் சில்லுகள் இன்றும் கிடைக்கின்றன எனவும் கூறினார். பேசிக்கொண்டே பழங்கற்காலப் பானையின் சில்லு ஒன்றை கண்டெடுத்தும் கொடுத்தார்.
பல்லாவர மலைக்கருகில் வாழும் ஆறுமுகம்
ஆசிரியர் பூங்குன்றன் பழங் கற்கால பானை சில்லுடன்
அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் அதன் காலம் கணிக்க என ஒரிசா சிவ. பாலசுப்பிரமணியன் அதனைப் பெற்றுக் கொண்டார். மேலும் அவர் கூறியதாவது ஆய்வு செய்யச் செல்லுங்கால் உள்ளூர் மக்கள், பழங்குடி மக்கள் என அவர்களையும் கேட்டறிதல் நல்ல பயன் விளைவிக்கும். இன்றும் பல்லாவர மலைகளில் அகழ்வாராய்ச்சி செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறினார்.
படத்தில் காணும் காவல் பணியாளர் நந்தகோபால் அவர்களும் 40 – ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்வதாகவும் , இம்மலைகளைப்பற்றிய தரவுகளைக் கூறி இன்னும் ஏராளமாக பழங் கற்கால கருவிகளும், மலையுச்சியில் தாழிகளும் கிடைக்கும் எனவும் கூறினார். ஏனெனில் பூண்டிக்கருகில் குடியம் குகைகளில் அகழ்வாய்வுகளில் பழங் கற்காலக் கருவிகளின் காலம் ஐந்திலக்க ஆண்டுகள் ( ஐநூறாயிரம் ஆண்டுகள் ) என தொல்லியல் காப்பாளர் டி. துளசிராமன் அவர்களால் கண்டறியப் பட்டு ள்ளது.
இன்றும் மேல்நாட்டிலிருந்தும் தொல்லியல் ஆய்வறிஞர்கள் சென்னையி லிருந்தும் பூண்டி வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலை மாற பரபரப்பு நிரைந்த சுற்றுச் சூழல் மாசடைந்த சென்னைப் பெருநகர் மையத்தில், அமைதியான தூய்மையான வளிநிறை மலைகள் சூழ காடுகளும், ஓநாய், நரி போன்ற வனவிலங்குகளும், பாம்புகளும் நிறைந்த பகுதியில் மீண்டும் பழங் கற்கால அகழாய்வினைத் தொடங்கிட வேண்டும். தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட இடமாகவும் அறிவிக்க வேண்டும். பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கெதிரே அமைந்திட்ட காரணியால் அனைத்துலக மக்களும் இந்த இடத்திற்கு வருவார்கள். சுற்றுலாத்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டிய இடமுமாகும்.
நம் இனத்தைப் பற்றிய புரிதல் முதலில் நமக்கு வேண்டுவது. நம்மிடையே உலாவும் தமிழினத்தை திட்டமிட்டு இகழ்வாரைப் கெடுமதியினர் எனப் புறந்தள்ளி நம் நிலத் தொன்மை, மொழித் தொன்மை பற்றி நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு, அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வதும், செல்வதும் நம் தமிழ்க் கடமையன்றோ ! ஆங்கிலமும், கிரந்தமும், வடமொழிக் கலப்பும் நம் மொழி அழிக்க காத்துக்கிடக்கும் இவ்வேளையில், நம்மிடை உள்ள இன எதிரிகளையும் இனங்கண்டு எச்சரிக்கையுடன் நம் தமிழியக்கத்தை முன்னெடுப்போம் !
Posted by தஞ்சை கோ. கண்ணன் at 3:43 PM 2 comments
Links to this post
Labels: Pre-historic Tamil Nadu
தென்மொழி தி.பி.௨௦௪௨ (ஏப்பிரல் 2011) இதழில் கட்டுரையாக வெளிவந்தது……….
தஞ்சை கோ.கண்ணன்
“தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் – பழங்கற்கால கற்கோடரிகள் 15,00,000 – (1.51 மில்லியன்) ஆண்டுகள் பழமையானவை ! “
– முனைவர் சாந்தி பப்பு ஆய்வறிக்கை வெளியீடு :
நாள் : 25-03-2011 – இதழ் : Science Journal USA
சர் ராபர்ட் புருசு பூஃட் (Father of Indian Pre-history)
2,00,000 – ஆண்டுகள் !
சென்னை பல்லாபுரத்திலும் (பல்லாவரம்) பூண்டிக்கருகில் அத்திரம் பாக்கம் குடத்தலை (கொற்றலை/கொசத்தலை) ஆற்றுப் படுகை களிலும், குடியம் மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்காலக் கற்கோடரிகள், 2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என (1893-1912 கி.பி.) சர் ராபர்ட் புருசு பூஃட் (Father of Indian Pre-history) அறிவித்தார்.
5,00௦௦,000 – ஆண்டுகள் !
அத்திரம்பாக்கம் கற்கருவிகள் தொல்லியல் துறை காப்பாளர், ஆய்வர் டி .துளசிராமன் அவர்களால் 5,00,000 – ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என ஆய்ந்தறிந்த முடிவை சென்ற திங்கள் இதழில் குறிப்பிட்டிருந்தேன்.
இந்தியாவில் முதல் மாந்த குடியேற்றம் : 70000 – 50000 ஆண்டுகள் !
இந்த நிலையில் மைக்கேல் வுட் என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேய நாட்டின் வரலாற்றாய்வர் தனது “இந்தியாவின் கதை” (“The Story Of India”) (http://www.pbs.org/thestoryofindia) எனும் வலைத்தளத்தில் 70,000 – 50,000 ஆண்டுகட்கு முன்னர் இந்தியாவில் முதல் மனிதன் குடியேறினான் என்று பதிவு செய்தார் ! பிற வரலாற்றாசிரியர்களும் அவ்வாறே குறிக்கின் றனர்.
மைக்கேல் வுட்டுக்கு வேண்டுகோள் !
அவ்வாறெனில் தமிழ்நாட்டில், சென்னைக்கருகே சர் இராபர்ட் புருசு பூஃட் அவர்களின் (1863 – 1912) ஆய்வு முடிவான 200,000 – ஆண்டுகள் பழமையான கற் கருவிகளின் கால அளவை கணக்கில் கொள்ளாமல் விடப்பட்டதை சுட்டி, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள மின்னஞ்சல் வழியே வேண்டுகோள் விடுத்துள்ளேன் . மேலும் அதே கற்கருவிகள் காலம் 5,00,000 ஆண்டுகள் என்று தொல்லியல் காப்பாளர் டி .துளசிராமன் கணக்கிட்டதையும், இல்லை! இல்லை! 15,00,000 ஆண்டுகள் தொன்மையானவை அவை என முனைவர் சாந்தி பப்பு கூறுவதையும் எடுத்துக்காட்டியும் அவருக்கு எழுதியுள்ளேன்.
தென்னிந்திய மரபு வழி மரபணு :
எனவே ஆப்பிரிக்க பெருநிலப் பரப்பிலிருந்து மாந்த இனம் குடிபெயர்வதற்கு முன்னரே தமிழ் நாட்டில் மாந்த இனம் தொடர்ந்து இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற முடிவிற்கு வரலாற்றாய்வர்கள் வருவர் என்பது உறுதி ! அதற்கேற்றார்போல இந்தியாவில் இன்றுவாழும் மக்களில், இரு பிரிவுகளாக பிரிந்து, தென்னிந்திய மரபு வழி மரபணு (Genetic) கொண்ட இனம் , வட இந்திய மரபு வழி மரபணுகொண்ட இனத்திலிருந்து மாறுபட்டு , கிழக்காசிய மரபணுவிலிருந்தும் வேறுபட்டு தனித்துவம் கொண்டதாக விளங்குவதாக இன்னுமோர் அறிவியல் ஆய்வு முடிவு கூறுகிறது !
15,00,000 – ஆண்டுகள் பழமை : சாந்திபப்பு ஆய்வு !
சென்னை மயிலையில் அமைந்துள்ள மரபுசார் கல்விக்கான சர்மா மையத்தின் நிறுவுநர்/செயலர் முனைவர் சாந்தி பப்பு அவர்கள் சென்னையிலிருந்து 60 கி.மி. தொலைவிலுள்ள அத்திரம்பாக்கம் குடத்தலை (கொற்றலை/கொசத்தலை ) ஆற்றுப் படுகைகளில் கிடைத்த பழங் கற்கால கற்கருவிகளின் காலத்தை உறுதி செய்திட 1999 – ஆம் ஆண்டிலிருந்து கடந்த 12 – ஆண்டுக ளாக ஆய்வு செய்து வருகிறார்.
அறிவியல் இதழில் ஆய்வறிக்கை !
அவரது ஆய்வின் பயனாக பழங் கற்கால கற்கருவிகளின் காலம் 1.51 மில்லியன் (15,10,000) ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என கண்டுபிடிக்கப்பட்டு அவரின் ஆய்வறிக்கை , அமெரிக்க நாட்டின் அறிவியல் (Science) இதழில் (25 March 2011: Vol. 331 no. 6024 pp. 1532-1533 DOI: 10.1126/science.1203806 ) ஏற்கப்பட்டு வெளிவந்துள்ளது.
இக்கற்கருவிகளின் காலத்தை ஆய்ந்து முடிவு செய்ய பிரான்சு நாட்டு பல்கலைக் கழகம் அவருக்கு துணைபுரிந்தது.
ராபின் டென்னெல்:
இங்கிலாந்து நாட்டின் செப்ஃபீல்டு பல்கலைக் கழகத் தொல்லியல் துறை சார் ராபின் டென்னெல் என்பார், “அண்மைக் காலங்களில் தெற்காசிய நாடுகளில் பழங்கற்கால மானுடவியல் ஆய்வுபற்றிய எந்த ஒரு செயல்பாடுகளே இல்லாத குறையினை போக்கு மாற்போலே சாந்தி பாப்பு அம்மையார் அவர்கள் 1 மில்லியன் ஆண்டுகள் முதல் 1.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான கற்கருவிகளின் ஆய்வு முடிவை Science – இதழில் 1596 – ஆம் பக்கத்தில் வெளியிட்டது இந்தத் துறையில் சிறந்த குறிப்பிடத்தக்க ஐயத்திற்கு இடமில்லாத பணியாகும்” எனக் குறிப்பிடுகிறார்.
தொடர் ஆய்வு : (1999 – 2011)
முனைவர் சாந்தி பப்பு அவர்கள் முன்னரே குறிப்பிட்டதைப் போல அவரது பத்தாண்டுகட்கு மேலான பணி (1999 – 2011) அத்திரம்பாக் கத்தில் நடைபெற்றது. அதாவது சர். ராபர்ட் புருசு பூஃட் பெயர் சூட்டிய “மதராசு கற்கோடரி தொழிற்சாலை” பகுதியாகிய அத்திரம் பாக்கம் குடத்தலை ஆற்றுப் படுகைகளில்தான் சாந்தி பப்பு அவர்கள் ஆய்வைத் தொடர்ந்தார்.
மூன்று வகைக கற்கருவிகள் :
அத்திரம்பாக்கம் பகுதியில் மூன்று வகையான கற்கருவிகள் கிடைத்தன . கிழங்கு களைக் கல்லுதல், விலங்குகளை வேட்டை யாடுதல், எலும்புகளின் உள்ளீடை எடுப்பதற்கு என வகைப்படுத்தப் பட்டன.
தொல்பழங்காலம் : கற்கருவிகள் !
இதில் இன்னுமொரு சிறப்பு யாதெனின் பழங்கற்காலத்துக்கு முற்பட்ட தொல்பழங்காலம் தொடர்புடைய கற்கருவிகளின் காலம் என்று இன்று கணிக்கப் பட்டுள்ளது .
169 – இடங்களில் கற்கருவிகள் :
ஆய்வுக்குழுவினரால் , முனைவர் சாந்தி பாப்பு தலைமையின் கீழ் 50,000 ச.மீ பரப்பளவில் இவ்வகழ்வாய்வு அத்திரம்பாக்கத்தில் நடைபெற்றது. இவர்களால் சுமார் 169 இடங்களில் இதே போல் மக்கள், அடர்த்தியாக தொல்பழங்காலத்திலிருந்து தொடர்ந்து இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பது ஆவணபட்டு வருகிறது .
முனைவர் சாந்தி பப்புவிற்கு பாராட்டுகள் :
ராபர்ட் புருசு பூஃ ட் அவர்களின் (1863-1912) ஆய்வுக்குப் பின்னர் முனைவர் சாந்தி பப்பு அவர்கள்தான் முழுமையான ஆய்வுமுடிவை இன்று (2011) உலகிற்கு வெளிப்படுத்தினார். உலகமுழுவதும் இந்த ஆய்வு முடிவு பெரியதொரு தாக்கத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. முனைவர் சாந்தி பப்பு அவர்கள் நமது பாராட்டுக்கு உரியவர்.
தமிழ் இனமும் நிலமும் பழமைக்கும் பழமையானது:
அதனைப் (தொல்-பழங்கால கற்கருவிகள்) பயன்படுத்திய மாந்த இனம், அதற்கு முந்தய காலத்தே அதாவது 1.51 மில்லியன் ஆண்டுகட்கு முன்னரே தமிழ் நாட்டில் அத்திரம்பாக்கத்தில் வாழ்ந்து இருக்க வேண்டும் எனில் தமிழ் நிலமும் இன்னமும் எவ்வளவு பழைமையானது என்ற முடிவுக்கே வரவேண்டும்.
தென்னிந்திய மரபுவழி மரபணுவும் தமிழினத் தொன்மையும் :
இந்திய நாட்டின் CCMB Hyderabad நிறுவன அறிவியலார் முனைவர் தங்கராசு குமாரசாமி தலைமையில் மூன்று ஆய்வறிஞர்களும், இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தின் மூன்று ஆய்வறிஞர்களும் இணைந்து வெளியிட்ட இந்தியாவின் மரபு வழி மரபணு பற்றிய கூட்டு ஆய்வு முடிவுகள் (Centre for Cellular and Molecular Biology, Hyderabad 500 007 India) “nature” – International Weekly Journal of Science, எனும் அறிவியல் இதழில் 24 – 09 – 2009 அன்று வெளியிடப்பட்டது!
இருபிரிவு மரபு அணுக்கள் :
இந்திய நாட்டின் 25 – வேறுபட்ட குழுக்களினிடையே நிகழ்த்தப் பட்ட மரபணு ஆய்வின் முடிவில் வடஇந்திய மரபு வழி, தென் னிந்திய மரபு வழி என இரண்டு மரபணு பிரிவுகளாகப் பிரிந்து காணப்பட்டது கண்டறியப்பட்டது .
வடஇந்திய மரபு வழி மரபணு :
வடஇந்திய மரபு வழி ஐரோப்பிய பெருநிலப்பகுதி , ஆசிய பெரு நிலத்தின் நடுப்பகுதி, நடு – கிழக்குப் பகுதி , ஆகிய இடங்களில் வாழும் மக்களின் மரபணுவை ஒட்டி இருக்கிறது !
தமிழ் நிலத்தின் தொன்மையும் தொல்குடியும் !
தொடர்ந்து கடற்கோளால் மூழ்கிய குமரிக்கண்டத்தில் (லெமூரியா) தோன்றிய மாந்த இனம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பரவிற்றா ? அல்லது ஆப்பிரிக்காவிலிருந்து இங்கு வந்ததா ?
இந்த வினாக்களுக்கு விடையாக 15,10,000 ஆண்டுகட்கு முந்தய பழமையான கற்கருவிகள் தமிழ்நாட்டில் அத்திரம்பாக்கம் குடத்தலை ஆற்றுப் படுகைகளில் கிடைத்தன !
ஆதலின் அதனைப் பயன்படுத்திய மாந்த இனம் 15,௦௦,௦௦௦ ஆண்டுகட்கு முன்னரே தமிழ்நிலத்தில் தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும் ! இன்றும் இங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறது !
இங்கு வாழும் மாந்த இனமும் இவ்வுலகின் தொல்குடிதான் என்ற அறிவியல் ஆய்வு சார்ந்த முடிவே என்பது, இன்றும் தென்னிந்திய மரபுவழி மரபணு தனித்துவத்துடன் விளங்குகிறது என்பதனை ஐதிரபாத் அறிவியல் கழகமும், கேம்பிரிட்சு பல்கலைக் கழகமும் இணைந்த ஆய்வறிக்கை அறுதியிட்டு உறுதியாகச் சொல்வதன் மூலம் இவ்வுலகிற்கு தெள்ளிதின் விளங்குகிறது !
Posted by தஞ்சை கோ. கண்ணன் at 1:34 PM 0 comments
Links to this post
Labels: Pre-historic Tamil Nadu- 15 lacs years ago – Human origin in South Asia
வரலாற்று – சம கால ஒப்பாய்வில் தாய்த்தமிழின் நிலை:
I .அ. காலம் காலமாய் வாழும் தமிழ்:
"தமிழினி மெல்லச்சாகும் என்றவன் பேதை !" என்றானே மீசைக் கவி ? அவன் கூறி 80 – ஆண்டுகள் சென்றும் பாரதி சொன்னது உண்மைதானே ! இன்னும் தமிழ் சாகவில்லையே ! ஏன் ? எப்படித் தமிழ் தொடர்ந்த தாக்குதல்களைத் தாக்குப் பிடித்தது ? ஒரு வரலாற்றுப் பயணம் மேற்கொண்டால் விளங்குமே !
·
i ). செம்மொழிச் செம்மல்கள்:
· இப்படித் தொடர் தாக்குதலுக்கு உள்ளான மொழி, செம்மொழிச் செம்மல்களான மறை மலை அடிகள் உள்ளிட்ட நம் வாழ் நாளில் கண்ட பெருந்தமிழ் அறிஞர்களால் முன்னெடுக்கப்பட்டது என்பதையும், வடமொழிக் கலப்பைத் தடுப்பதில் போராளிகளாகவும் ஆனார்கள் என்பதை நாம் அறியக் கடப்பாடு உடையோர்.
· ii ). தமிழ் நாட்டு வரலாறு மறைக்கப்படும் அவலம் :
· தமிழ் நாட்டுவரலாறு, நம் தமிழர் உலகின் தொல்குடியாய் இருந்தும் நம் பள்ளிகளிலும், ஏன் கல்லூரிகளின் வராலற்றுப் பட்டப் படிப்பிலும் கூட (சில பல்கலைக் கழங்கள் தவிர) நமக்கு மறுக்கப் பட்டும், மறைக்கப்பட்டும் அவலநிலை இன்றும் நீடிக்கிறது.
·
iii ). தன் வரலாறு அறியா இனம் அழிவது உறுதி !
ஏனெனில் எந்த ஒரு இனம் தன் வரலாறு அறியாமல் இருக்கிறதோ அந்த இனமும் நாடும் முழு அழிவை அடைவது உறுதி என்று உலக வரலாறு தெரிந்த அறிஞர் பலரும் கூறியுள்ளார்கள். "அரசியல் அறிவியல் " கல்வியிலும் மேலைநாட்டு மக்களும் தன் நாட்டு வரலாற்றைப் படித்து அறிந்து கொள்வதை பெருமையாகவும், வரலாற்று சின்னங்களை, நிகழ்வுகளை நன்றியுடன் நினைப்பதைத் தன் நாட்டுக்கு செய்யும் கடமையாகக் கருதுகிறார்கள்.
·
iv ) . தன்நாட்டு வரலாற்றின் அடிப்படையிலே அரசியல் :
சில நூற்றண்டு வரலாறே கொண்ட ஐக்கிய அமெரிக்க நாட்டில் கூட வரலாற்றறிவு பெரும் பேராகக் கருதும் போக்கு இன்றளவும் உள்ளது. இங்கு எப்படி கணினி, மருத்துவம், பொறியியல், மற்றும் ஆழ்ந்த ஆங்கிலப் புலமை போல தன்னாட்டு வரலாறும் அவர்கள் நாட்டில் மதிக்கப்படுகிறது! அரசியல் வாதிகள் அங்கே வரலாற்றுப் பார்வையுடன் பெருமையுடன் நாட்டை நல்வழிப் படுத்தி முன்னேறிக் கொண்டே போகிறார்கள் ! நமது நாட்டிலே மேனாள் இந்தியத் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாய் தமிழ் ஈழப் பிரச்சினையிலே, இந்தியாவிலிருந்து இலங்கை சென்ற தமிழர்கள் என வரலாறு அறியாது பிதற்றினார். உலகும் கைகொட்டி சிரித்தது!
v). ஆங்கில மொழியைக் கேவலப் படுத்தும் தமிழர்:
· ஆனால் நாமோ ? சினிமாக்களிலும், தொலைக்காட்சிகளிலும், மதுக் கடைகளிலும் நம்மைத் தொலைத்துக் கொண்டுள்ளோம். அழகு, பழகு தமிழை ஆங்கிலத்துடன் கலந்து சிறிதே தமிழ் பேசும் அவலத்தைக் கண்டு பிறர் நம்மைக் கைகொட்டி சிரிக்கும் இழி நிலை மாற்றுவோம்! மலையாளிகளும், கன்னடியரும், தெலுங்கரும் செய்யக் கூசும் இழி செயலே இது .
·
vi ). அழியும் மொழிகள் :
· தன் இன வரலாற்றை அறிந்த எந்த ஓர் இனமும் தன் மொழி , என அடையாளங்களை இழப்பதே இல்லை . ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ ) எச்சரிக்கையோ தாய்மொழிப் பற்றில்லாமையால், பல மொழிகள் அழிந்துள்ளதைப் பட்டியல் போடுகிறது ! அப்படி அழியப் போகும் மொழிகளுள் தமிழும் ஒன்று எனவும் கூறுகிறது !
·
ஆ . தமிழின் தொன்மை :
· நமது மேனாள் தமிழக ஆளுனர் பி.சி.அலெக்சாண்டர் 1987-இல் ஆளுநர் ஆட்சியின் போது காரைக்குடியில் கம்பனடிப் பொடி சா.கணேசன் நடத்திய கம்பன் விழாவில் தன் விழாவில் தலைமை உரையில் (சென்னைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சி) கூறியதாவது, "உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை வாழும் மொழிகள் நான்கு ! அதில் நமது தாய்த் தமிழும் ஒன்று !” என உலக மொழியியல் வல்லுனர்களின் ஆராய்ச்சியின் முடிவு . "லண்டனில் மேனாள் இந்திய தூதர் என்ற முறையில் , இலண்டனில் அனைத்துலக மொழியியல் (இந்தியர்களே இல்லா) வல்லுனர்களின் ஆராய்ச்சி மாநாட்டில் நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஒரே இந்தியன் என்ற முறையில் நம் தாய்த் தமிழின் தொன்மைகேட்டு பெருமிதம் அடைந்தேன்" என்றும் கூறினார்.
II.தாய்த் தமிழின், தமிழினத்தின் வீழ்ச்சியின் துவக்கம் :
௧ . 3 -ஆம் நூற்றாண்டின் தமிழ் முற்றழிப்புத் தோல்வி :
தமிழ் நாட்டின் இருண்ட காலமான களப்பிரர் ஆட்சியில் ( கி.பி. 200 – ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 575 -ஆம் ஆண்டு வரை ) முன்னூறு ஆண்டுகள் நம் தமிழர் அரசியலமைப்பு,பண்பாடு , இலக்கியம், மொழி, பிற வரலாற்று நிகழ்வுகள் முதலியன முற்றிலுமாக கொடும் வன்முறை ஆட்சியால் அழிக்கப்பட்டன. தமிழ், தமிழர், அவர்தம் வரலாறு அங்க அடையாளம் தெரியாமல் பூண்டோடு அழித்து ஒழிக்க திட்டமிட்டு அக்காலத்தே யார் ஆண்டார்கள் என்ற செய்தி கூட மறைக்கப்பட்டது. தமிழுக்கு பதிலாக பிராகிருதம் , பாலி மொழிகள் திணிக்கப்பட்டன. சமண இலக்கியங்களில் ஆங்காங்கே குறிப்புக்கள் உள்ளதைத் தவிர தன்னைப்பற்றியும் அந்த தமிழ் எதிரிகள் (களப்பிரர்) வெளியிடவில்லை .
(பக்.161 – தமிழ் நாட்டு வரலாறு , முனைவர் பா.இறைஅரசன் )
௨ . பின் எவ்வாறு தமிழ் இன்றளவும் வாழ்கிறது ?
·
தாய்த் தமிழின் வலிமையையும், சிவ வழிபாடும், ஊழ்வினை மேல் நம்பிக்கையும் களப்பிரர் பால் தமிழருக்கு தீராப்பகை ஏற்ப்படுத்தியது. களப்பிரர்கள், காஞ்சியிலிருந்து 6 -7 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல்லவன் சிம்ம விஷ்ணு முதல், நரசிம்மவர்மன் வரையும், 7 – 8 – ஆம் நூற்றாண்டுகளின் மேலசாளுக்கியன் முதலாம் விக்ரமாதித்யன் முதலியோரும் , தெற்கிலிருந்து பாண்டியன் கடுங்கோன் ஆகியவர்களாலும் அழிக்கப்பட்டார்கள்.
Posted by தஞ்சை கோ. கண்ணன் at 5:12 PM 0 comments
Links to this post
Subscribe to: Posts (Atom)
Awesome Inc. template. Template images by enot-poloskun. Powered by Blogger.
1006
Global Peace Support Group UK Ltd is a registered organisation based in London. The organisation dedicated to be involved in humanitarian and other related issues. We also work along with other similar organisations to promote peace and harmony among various societies..
GLOBAL PEACE SUPPORT GROUP - UK - TIRELESSLY WORK ON THE CONCEPT OF:
"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
MOURNS ON THE CONTINUED TRAGEDY OF THE PEOPLE OF North & East of Tamil EELAM WITH THE HOPE OF ALL OF OUR ENDEAVOURS WOULD BRING AN END TO THOSE SUFFERING DURING THE YEAR AHEAD.
The International community has a duty towards the long suffering Sri Lankan Tamil population to restore their rights of SELF DETERMINATION.
Global Peace Support Group - believes that this is the ONLY way for a permanent PEACE in Sri Lanka.