தமிழர் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிடம் போர்க்குற்றவியலுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்: ஒபாமிற்கான தமிழர் அமைப்பு

அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்காகவரும் தமிழர் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜபக்சா அரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா அரசின் ஆதரவைப் பெறுவதையே முக்கிய விடையமாக கருதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமிற்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளில் தவறில்லை. ஆனால் இந்த வேண்டுகோளில் கையாண்டுள்ள சொல்லாட்சி ஏதோ ததேகூ க்கு இனப்படுகொலை பற்றி அக்கறை இல்லை என்பது போலவும் அவர்கள் அமெரிக்க வருகை இந்த நடவடிக்கைகளுக்கு ஏதுவாக இருக்கவேண்டுமே தவிர குந்தகம் விளைவிக்கக்கூடாது என்றும் பூட்டிய அறைக்குள் நடக்கும் கூட்டங்களில் தமிழர் அபிலாசைகளை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்தக்கூடாது என்றும் அவர்களுக்குக் கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கோட்டை விட்டு விடவேண்டாம் எனவும் பல இலவச ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

மேலும் முள்ளிவாய்கால் அவலத்தின் பின் வென்றெடுத்த முக்கிய ஆதரவுகளை ததேகூ தனது நடவடிக்கை மூலம் பாழடிக்க வேண்டாம் என்றும் இந்த அமைப்பு கேட்டுள்ளது. ஏதோ இந்த அமைப்பு அமெரிக்க அரசியலில் வெட்டிப் புடுங்கி வேரோடு சாய்த்துவிட்டது போலவும் அதனைப் பாழாக்க வேண்டாம் என்றும் இந்த அமைப்புச் சொல்கிறது!

“அமெரிக்கா அதிகாரிகள் பலர் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள். உங்கள் வரவு தமிழ் இனத்தின் நிரந்தர விடுதலைக்கு போடும் ஒரு அத்திவாரக் கல்லாக இருக்கவேண்டுமே தவிர, அடகு வைக்கும் பயணமாக இருக்கக் கூடாது எனவும் ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் வைக்கின்றது” என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஏதோ அமெரிக்காவில் இயங்குகிற இந்த அமைப்புக்கு இருக்கிற அக்கறை, கரிசனை தமிழ்மக்களால் வாக்களித்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட ததேகூ க்கு இல்லை. ததேகூ கையாலாகதவர்கள், குந்தகம் விளைவிப்பவர்கள், தமிழர் வேட்கைகளை பலவீனப்படுத்தக் கூடியவர்கள், பேச்சுவார்த்தை என்ற பெயரில் கோட்டைவிடக் கூடியவர்கள், விடுதலையை அடகு வைக்கப் போகிறவர்கள் என்று இந்த அமைப்பு வசை பாடுகிறது. எதிர்கூறல் செய்கிறது.

தாயக மண்ணில் இருந்து கொண்டு ததேகூ க்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய எமது உறவுகள் கூட இந்தத் தொனியில் அறிக்கை விட்டிருக்க மாட்டார்கள்.

எத்தனையோ நெருக்கடிகள், பயமுறுத்தல்கள், தடைகள், உயிர் ஆபத்துக்கள் மத்தியில் ததேகூ எமது மண்ணில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்டிருப்பினும் ஆளும் கட்சி இவர்களை விடத் தங்களது செல்லப் பிராணிகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறது. அமைச்சர் பதவிகள் கொடுத்து அதிக சிறீலங்கா அரசு அவர்களை கொலு வைத்திருக்கிறது. யாழ்ப்பாணத்தின் இளவரசர் டக்லஸ் தேவானந்தா என்று பசில் இராசபக்சே பகிரங்கமாக தெரிவிக்கிறார்.

ஒபாமிற்கான தமிழர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் சரி, உள்ளாட்சி தேர்தல்களில் சரி தமிழ்மக்கள் ததேகூ க்கு வாக்களிக்குமாறு கேட்டதே இல்லை. அப்படிக் கேட்பது பஞ்சமா பாதகம் என நினைத்து ஒதுங்கிவிட்டது. சரி போகட்டும். தேர்தலின் போது ஒரு வெள்ளிக் காசாவது கொடுத்தார்களா? அதுவும் இல்லை!

இப்போது ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராசாங்க திணைக்களத்தின் அழைப்பில் அமெரிக்கா வருகிறார்கள் என்றவுடன் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்புக்கு சன்னி வந்து சன்னதம் ஆடுகிறது!

ஒபாமிற்கான தமிழர்களது நோக்கம் பேச்சுவார்த்தையின் போது (இப்படியான பேச்சுவார்த்தை இதுதான் முதல்தடவை அல்ல) ததேகூ தமிழர் பக்க நியாயத்தைக் காத்திரமான முறையில் முன்வைக்க வேண்டும் என்றால் அது நியாயமானது. ஆனால் அதனைப் பக்குவமாக மரியாதையோடு சொல்ல அந்த அமைப்பு கற்றுக் கொள்ள வேண்டும்.

நக்கீரன்


Sent: Wednesday, October 12, 2011 4:12 PM

To: athangav@sympatico.ca