Published On: Mon, Oct 24th, 2011

| By eelamaran

கனேடிய சமாதானப் பேரவை தமிழ் மக்கள் தொடர்பில் இணக்கமான போக்கு.

சுமார் ஒரு மில்லியனுக்கும் மேலான கனேடிய மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கனடாவின் முக்கியமான 180 அமைப்புகளைத் தன்னுள் கொண்டிருக்கும் கனேடிய சமாதானப் பேரவை தமிழ் மக்கள் தொடர்பில் இணக்கமான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது. தங்களது சுயநிர்ணய உரிமை மற்றும் விடுதலையை வலியுறுத்தி உலகளாவிய ரீதியில் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக கடந்த வாரம் கனேடிய சமாதானப்பேரவை அறிவித்துள்ளது. அத்துடன் தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், தமிழ் மக்களுக்கெதிரான இனப்படுகொலையும் நிறுத்தப்பட வேண்டும். மேலும் தமிழர் தாயகப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் இராணுவம் மற்றும் ஒட்டுக் குழுக்களின் பிரசன்னம் அப்பகுதியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதே போன்று எதிர்வரும் அக்டோபர் 29ந் திகதி சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி நடைபெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்வையும், அதனூடாக வலியுறுத்தப்படும் போர்க்குற்றங்களுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கும்; கனேடிய சமாதானப் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது என்பது ஒரு பாரிய விடையமாக நோக்கப்படுகிறது. இதற்கிடையே கனடாவின் மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பான கனேடிய தபால்துறை ஊழியர்களின் சங்கம் ‘ தமிழர் தாயகப் பிரதேசத்தில் இருந்து ஸ்ரீ லங்காவின் சிங்கள இராணுவத்தினர் உடனடியாக வாபஸ்பெறப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது. அதனையொத்ததாக ஒன்டாரியோவிலுள்ள கனேடிய மாணவர் பேரமைப்பு, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் தாக்கப்பட்டமை குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கனேடிய சமாதானப் பேரவை மற்றும் கனேடிய தபால்துறை ஊழியர்கள் சங்கம் என்பவற்றின் இவ்வாறான நகர்வுகள் உலகப் பந்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பிரதிபலிப்பதுடன், ஸ்ரீலங்காவில் இனப்படுகொலையை எதிர்கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் தேவைப்பாட்டை உறுதிப்பாட்டுடன் வலியுறுத்துவனவாக நோக்கப்படுவதாக கனேடிய தமிழர் பேரவையின் பேச்சாளர் கிருஷ்ணா சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

இரண்டாண்டுகளின் பின் அக்டோபர் 14 – 16 வரையான திகதிகளில் டொரண்டோவின் ரியர்சன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கனேடிய சமாதானப் பேரவையின் சம்மேளனத்தில் பூகோள மற்றும் பிராந்திய விடயங்களான ஆப்கானிஸ்தான், லிபியா, பலஸ்தீன், காஷ்மீர், ஹைட்டி மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தொடர்பான விடயங்கள் மற்றும் பல்கலைக்கழக விவகார்ஙகள் மூலமாக சமாதானத்துக்கு ஊறு ஏற்படுத்தும் நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அதன்போது ஸ்ரீ லங்கா தொடர்பான விவகாரம் விசேட அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. சம்மேளன அமர்வின்போது தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் கனேடியத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பயிலமர்வொன்றையடுத்து சனல்4 தொலைக்காட்சியின் ‘இலங்கையின் கொலைக்களம்’ காணொளியும் திரையிடப்பட்டது. பயிலமர்வுக்கு கனேடியத் தமிழர் பேரவையைச்சேர்ந்த சிவா விமல்சந்திரன் மற்றும் அசோக் நித்தியநாதன் ஆகியோர் தலைமை வகித்திருந்தனர்.

கனேடிய சமாதானப் பேரவையின் சம்மேளன அமர்வின் நிறைவின்போது அதன் உறுப்புரிமை சங்கங்கள் அனைத்தும் ஏகோபித்த குரலில் கீழ்வரும் விடயத்தை வலியுறுத்தியிருந்தன.

‘ஆப்கானிஸ்தான் தொடக்கம் பலஸ்தீன், தமிழ் ஈழம் வரை இராணுவ நடவடிக்கைகள் குற்றங்களாகவே கருதப்பட வேண்டியுள்ளன’ என்று கனேடிய சமாதானப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சிட் லாகோம்ப் தெரிவிக்கின்றார். மேலும் ‘ தமிழர் தாயகப் பிரதேசங்களில் இருந்து ஸ்ரீ லங்கா இராணுவம் மற்றும் அதன் துணை அமைப்புகளான ஒட்டுக்குழுக்களின் நடவடிக்கைகள் முடிவுக்குக்கொண்டு வரப்பட வேண்டும’ என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்நிகழ்வின் போது கருத்து வெளியிட்ட யுத்தத்துக்கு எதிரான கனேடிய கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஜேம்ஸ் கிளார்க், ‘கனேடியர்கள் என்ற வகையில் நாங்கள் ஒருமித்து வலியுறுத்திக் கொள்ள விரும்பும் விடயம் யாதெனில், அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழ் மக்களின் தெரிவான தனித் தமிழ் நாடு அமைக்கப்படுவதற்கான அரசியல் தீர்வு நடைமுறைப்படுத்தப்பட உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இவற்றுக்குச் சமாந்திரமாக கனேடிய தபால்துறை ஊழியர்கள் சங்கம், தமிழ் மக்கள் மற்றும் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் கொடூர போக்குகளுக்கு எதிராக உரிமைகளுக்கான போராட்டங்களை மேற்கொண்டுவரும் அமைப்புகளுடன் இணக்கப்பாட்டுடன் நடந்து கொள்ள கடந்த ஞாயிறன்று தீர்மானித்துள்ளது. மேலும் இலங்கை தொடர்பில் அவதானிப்புப் போக்கை மேற்கொண்டு வரும் கனேடிய அரசாங்கத்தின் தீர்மானத்தை மீளாய்வு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் கனேடியத் தபால்துறை ஊழியர்களின் சங்கமானது, தமிழ் ஈழம் என்பது தமிழர்களின் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டு;ள்ளதுடன் அதற்கான வரலாற்று இருப்புகளும் காணப்படுவதை ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கு மாற்றீடாக ஒரு தீக்வை முன்வைப்பதில் ஸ்ரீ லங்கா அரசாங்கம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

இனப்படுகொலை நாடான ஸ்ரீலங்காவில் கனேடிய மற்றும் ஏனைய நாட்டு நிறுவனங்கள் மேற்கொண்டு;ள்ள முதலீடுகள் குறித்த விபரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதற்காக கனேடிய தமிழ் மாணவர் பேரவை, கனேடியத் தபால்துறை ஊழியர்களின் சங்கத்துடன் இணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. இவற்றுக்குச் சமாந்திரமாக ஒன்டாரியோவில் இயங்கும் கனேடிய மாணவர் பேரவையானது, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் மீதான கொடூரத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. ‘ வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மாணவர்கள் ஒன்றுகூடி செயற்படுவதற்கான உரிமையை ஸ்ரீ லங்கா அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்’ என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ் தரப்பினரின் போராட்டத்துக்கு ஆதரவாக கூட்டணியாக செயற்படும் இணக்கப்பாட்டை மேற்கொண்டுள்ளமை குறித்து கனேடிய சமாதானப் பேரவைக்கு தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் நாடு தழுவிய ரீதியிலான தமிழ் மாணவர் அமைப்புகளும் நன்றி தெரிவித்துள்ளன.

தமிழ் இளையோர் அமைப்பின் பேச்சாளர் பிரியந்த் தெரிவிக்கையில், நாங்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பிற்கு எங்கள் ஆதரவையும், இணக்கப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம். நாங்கள் அவர்களின் அடிப்படை உரிமையான கல்வி மற்றும் சுய நிர்ணயம் குறித்த விடயங்களுக்கும் ஆதரவளிக்கின்றோம். ஸ்ரீ லங்காவின் போர்க்கால சூழல, இராணுவப் பிரசன்னம் மற்றும் இனப்படுகொலை பின்னணியில் அவை இரண்டும் மறுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். அத்துடன் கனடாவின் பிரதான அரசியல் கட்சிகள் மூன்று மற்றும் கனடாவின் பெரும்பான்மையான சிவில் சமூக அமைப்புகள் ஸ்ரீ லங்காவுக்கெதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றின் அவசியம் குறித்து தற்போது வலுவான ஆதரவைத் தெரிவித்துள்ளன.

ஆனாலும் உலக நகர்வுகள் இன்னும் மந்தமான கதியிலேயே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ லங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கான சந்தர்ப்பம் ஒன்று தவிர்க்க முடியாத கட்டத்தை விரைவில் எட்டும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்திய போக்குகளுக்கு எதிராக ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் நாம் சாமர்த்தியமாக நடந்துகொண்டு நமது உரிமை தொடர்பில் வலியுறுத்த வேண்டும் என்றும அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு எதிராக நீதி கிடைக்கும் வரையும், மற்றும் தமிழ் மக்களுக்கான விடுதலை கிடைக்கும் வரையும் தமிழ் மக்கள் ஒருபோதும் ஓயமாட்டார்கள் என்பதை சர்வதேச போக்குகளுடன் இணைந்த நடவடிக்கைகள் மூலமாக நாம் வெளிப்படுத்த வேண்டியுள்ளது என்றும் சரவணமுத்து தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.