எமது தேசத்தை கட்டி எழுப்புவதில் ஒன்றிணைந்து செயற்படுவோம் – கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் பிரித்தானிய கிளை

    [ வெள்ளிக்கிழமை, 14 ஒக்ரோபர் 2011, 08:31.31 AM GMT ]

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்- பிரித்தானிய கிளை ஏற்பாடுசெய்த கலந்துரையாடல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திருவாளர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

    மேலும் கடந்த 2009ம் ஆண்டு வரையான யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களை மீளவும் கட்டி எழுப்புவதுடன் கடந்த காலங்களில் செழுமையுடன் வாழ்ந்த எமது மண்ணில் அகதி வாழ்க்கையின் அவலங்களை சுமந்து வாழும் நிலையை மாற்றி அமைப்பதற்கு புலம்பெயர் சமுகம் காத்திரமான பங்களிப்பினை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    மேற்படி நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி இரட்ணம் சதானந்தன் தலைமையில் நடைபெற்றதுடன் எதிர்வரும் கார்த்திகை மாதம் 5ம் நாள் (5th November 2011) லண்டன் ஹரோ பகுதியில்( Zoroastrian Hall ,440Alexandra Avenue, Harrow, HA2 9TL.) நடைபெறவுள்ள மாபெரும் இசை நிகழ்வான தென்னங்கீற்று-2011 பற்றிய சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வாகவும் ஒழுங்கமைக்கப்படிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    கிளிநொச்சி மாவட்ட மக்களின் கல்வி, சுகாதாரம், போரினால் குடும்பத்தலைவர்களை இழந்தவர்களின் வாழ்வாதார மேம்பாடு, போரினால் அவயவங்களை இழந்த மாற்று வலுவுள்ளவர்களின் மேம்பாடு, முதியோர்களைப் பராமரித்தல், தடுப்பில் உள்ளவர்களின் விடுதலை மற்றும் அவர்களின் குடும்பங்களின் மேம்பாடு ஆகியவற்றை இலக்காக கொண்டு இவ்வமைப்பு செயற்ப்பட உள்ளது.

    இந்த நிகழ்வின் பொழுது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர் திருவாளர் வேல் வேலுப்பிள்ளை அவர்களும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் சர்வதேச ஒருங்கிணப்பாளர் வைத்திய கலாநிதி பரமலிங்கம் மதியழகன் மற்றும் அமைப்பின் செயலாளர் திருவாளர் சு.சுரேஷ்குமார் ஆகியோரின் கருத்துரைகளும் இடம்பெற்றன.

    நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் இதயச்சந்திரன் மற்றும் ஒரு பேப்பர் பொறுப்பாசிரியர் கோபி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து எமது புலம்பெயர் உறவுகளின் சில கலைநிகழ்வுகளும் இடம் பெற்றன.

    கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு-UK (www.kilipeople.org)

    “உண்ணுமுன் ஒருகணம் உன் உறவை நினை”