கடாரம் கொண்டான் !

ஒரு வரலாற்று ஆய்வுப் பயணம் ! "தமிழ் நாட்டு பண்பாட்டின் முழுமை தென்கிழக்காசிய நாட்டு மக்கள் பண்பாட்டினை ஆராயாமல் முழுமை அடையாது என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் அப் பண்பாட்டின் அரைப்பகுதியை மட்டும் அறிந்த செயலாகும்." – சிறப்பு நிலைப் பேராசிரியர் சிங்காரவேலனார் மலேசியப் பல்கலைக் கழகம் கோலாலம்பூர் மலேசியா.


சோழ மாமன்னனின் விண்முட்டும் தஞ்சைப் பெருவுடையார் பெருங் கோயில் !

Friday, August 6, 2010

சோழப் பெருவேந்தன் : கடாரம் கொண்டானா ? நேரில் ஒரு கள ஆய்வு !

`


பழந் தமிழ்க் கடலோடிகளின் கடல் வழி !

கெடா (கடாரம்) மாநிலத்தின் கூலிம் நகரை நாங்கள் அடைந்தோம் !

கோலாலம்பூரிலிருந்து 150 கி.மி தொலைவு கூலிம் நகரம் உள்ளது. . கூலிம் என்பது ஒரு மரத்தின் பெயர்.


5 – மணி நேரப் பயணம். 33.50 மலேய வெள்ளிகள் ஒரு பயணசீட்டு. மாலை 4.30 க்குப் புறப்பட்டு இரவு 9.00 – க்கு கூலிம் போய்ச் சேர்ந்தோம். பினாங்கு வளாகம் , ஆசிரியக் கல்விக் கழகத்தின் விரிவுரையாளர் தமிழ்த் திரு.மு.மணியரசன் எம்.ஏ.,பி. எல். எல்., கூலிம் நகரில் எங்களை வரவேற்று உதவிகள் பல செய்தார் என்பதை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

கூலிம் நகரில்

தமிழ்த் திரு. மு.மணியரசனும் பேராசிரியரும்

கூலிம் விடுதியில் (Koolim Inn) 200 வெள்ளிகள் கொடுத்து 2 நாள் தங்கினோம். கூலிம் நகரத்தில் எங்கள் காலைப் பொழுது புலர்ந்தது. நாங்கள் தங்கிய கூலிம் விடுதி எளிமையான அழகான தோற்றத்துடன் விளங்கியது. தோட்டத்திலே பெரும் பூச்சட்டியில் மரங்களை வளர்த்து வருகிறார்கள்.


மலையக நாட்டில் கெடா (கடாரம்) மாநிலத்தின் கூலிம் நகரிலிருந்து காலை 9-மணிக்கு பூஜாங் பள்ளத்தாக்கு நோக்கிய பயணம் தொடங்கிய . நன்றாகப் பயணம் அமைந்தது. வாடகை 140 வெள்ளிகள். ஓட்டுநர் மகேந்திர ராவ்.தாய் மொழி தெலுங்கு. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளியில் படிக்கிறார்கள்.


கூலிம் விடுதியிலிருந்து புறப்பட்டு முதல் வேலையாக முருகன் கோயிலில் விநாயகரை வழிபட்டு முருகனை வணங்கி எங்கள் நோக்கமான கடாரம் நோக்கிப் புறப்பட்டோம். எல்லா மலாயா ஊர்களிலும் ஊர் நடுவில் நம் கோயில்கள் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. அக்காலத்தே தமிழரின் உயர்ந்த நிலை புரிகிறது.




100 – 150 கி.மி தொலைவு. வழியில் தேசிய வகை "லடாங் துப்பா தமிழ்ப் பள்ளி" என்ற அழகான பெயர்ப்பலகை விளங்கியது. பெயர்ப் பலகையைக் கண்டு எங்களையும் மீறி அது ஈர்த்து வண்டியை நிறுத்தினோம். பள்ளியின் உதவியாளர் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றார் . தண்ணீர் மலை என்ற பெயர் கொண்டவர் தலைமை ஆசிரியர்.


தமிழ் இங்கு வாழ்கிறது என்று பெருமையுடன் கூறினார். இவரது பெயர் பினாங்கிலுள்ள தண்ணீர்மலை என்ற மலையிலுள்ள முருகப் பெருமானின் பெயரைக் குறிப்பிடுவதாகும்.


ஆங்கிலேயர்களால் 1947 இல் கட்டப்பட்டத் தமிழ்ப் பள்ளி. தோட்டத் தொழிலாளர்க்கு என தொடங்கப்பட்டது. இரண்டு தோட்டத்துக்கு ஒரு பள்ளி . மலாய் , சீனம், தமிழ் இம்மூன்றும் வழக்கில் உள்ளன . மலாய் மட்டுமே தேசிய மொழி.


ஆனால் சிங்கப்பூரிலோ ஆங்கிலம், சீனம் . மலாய் , தமிழ் ஆகிய நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக விளங்குகின்றன.


கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்ட சோழப் பெருவேந்தன் இராஜ இராஜன் ஆட்சிக் காலத்தே அவன் மகன் இராஜேந்திர சோழன் தாய்லாந்து, கம்போடியா (காம்போஜம்), வியத்நாம், கடாரம், (கெடா, மலேசியா) சாவகம், (ஜாவா, இந்தோனேசியா) போன்ற நாடுகளுக்குச் சென்று, வென்று கோயில்களை அமைத்தான் ! என்ற வரலாறு நம் பள்ளிக் கூட நாட்களில் நமக்குச் சொல்லப்பட்டது !


ஆனால் ஒரு புதிய வரலாற்று உண்மை எங்களுக்கு மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை சிறப்பு நிலைப் பேராசிரியர் முனைவர் ச.சிங்காரவேலனார் அவர்களால் எங்களுக்குப் புலப்பட்டது.


இந்த இடத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருந்து கொண்டே எங்கள் வரலாற்று ஆய்வுப் பயணத்தில் ஈடுபாடு கொண்டு ஒவ்வொரு நிலையிலும் உதவிக்கரம் நீட்டிய தமிழ் உலகம் வலைத்தள நிறுவனர் அய்யா ஆல்பர்ட் அவர்கட்கு எங்கள் மனமார்ந்த நன்றி பாராட்டுதல்களை காணிக்கையாக்குகிறோம்.


ஏனெனில் ஆல்பர்ட அவர்களின் வேண்டுகோளை ஏற்று மலையக நாட்டின் அய்யா இளந்தமிழ் அவர்கள் எங்களை மின்னலென செயல்பட்டு மலேசியப் பல்கலைக் கழகப் பேரசிரியர் சிங்கரவேலனாரிடம் அழைத்துச் சென்றார் . கூலிம் நகரிலும் பேராசிரியர் மணியரசன் அவர்களின் உதவிக்கும் ஏற்பாடு செய்தார் .

கோலாலம்பூரில்
நானும் தமிழ்த் திரு. இளந் தமிழ் அய்யா அவர்களும்

தமிழ் நாட்டு பண்பாட்டின் முழுமை தென்கிழக்காசிய நாட்டு மக்கள் பண்பாட்டினை ஆராயாமல் முழுமை அடையாது என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் அப் பண்பாட்டின் அரைப்பகுதியை மட்டும் அறிந்த செயலாகும் என சிறப்பு நிலைப் பேராசிரியர் சிங்கரவேலனார் ஆதரங்களுடன் விளக்கினார்.


தமிழ்க் கடலோடிகள் புதிய கற்காலந்தொட்டே அடிக்கடி வந்து போன இடங்களே தென் கிழக்காசிய நாடுகள் என அகழ்வதாரங்கள், தொல்லியல் ஆய்வுசான்றுகள் கூறுவதாக அடித்துச் சொல்கிறார்.


எங்கள் புதிய வெளியீடான வரலாற்றாய்வு நூலில் அதனை விளக்கிச் சொல்வோம்.


இதில் வியக்கத்தக்க ஒற்றுமை யாதெனின் யவனர்கள், கிரேக்கர்கள், அராபியர்கள், மேலும் சீன வணிகர்களே அயல் நாட்டு வரலாற்று மூலகங்களாக தமிழ் நாட்டின் வரலாற்றை ,மக்களை , பண்பாட்டை பதிவு செய்துள்ளார் கள். தமிழ் நாட்டின் அகச் சான்றுகள் நீங்கலாக அயல் நாட்டு வரலாறு மூலகங்கள் நம் தமிழ் நாட்டு வரலாற்றினை உலகுக்குப் பறைசாற்றும்.


திருவிஜயப் பேரரசு கி.பி. 6 – ஆம் நூற்றாண்டு :

கி.பி.ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழ்க் கடலோடிகள் தென் கிழக்காசிய பேரரசான திருவிஜயப் பேரரசைப் பொருளாதார வலிவுடை நாடாக்கியதில் பெரும்பங்காற்றி மேலும் வளர்வதற்கு உதவி, மிக்க செல்வாக்குடனும், புகழுடனும் தமிழ் வணிகர்கள் இருந்தார்கள். மன்னர்களும் தமிழ்க் கடலோடிகள் தொடர்பை விரும்பி ஏற்றார்கள்.


அப்படி வாழ்ந்த அக்காலகட்டங்களில் நம் தமிழ்ப் பண்பாட்டினையும் மொழியையும் இந்த கடலோடிகளே தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அடிக்கோள் இட்டார்கள். அந்நாட்டு மன்னர்களும் தமிழ் நாட்டு மன்னர்களுடன் தொடர்பும் கொண்டனர். உதவிகளும் நம்மிடம் கேட்டுப் பெற்றனர் .


ஆயினும் ஒரு சிறு உறுத்தல் நம் தமிழ்க் கடலோடிகளிடம் !


சீன நாட்டுடன் நேரிடை வாணிகஞ் செய்ய விரும்பினார்கள். திரு விஜய மன்னனோ சீன நாட்டு வாணிகம் தன் மூலம்தான் நடக்கவேண்டும் என வணிகக் கோட்பாடுகள், கட்டுப்பாடுகள் விதித்தான் ! அனுமதி மறுத்தான் !


நம் தமிழ்க் கடலோடிகளோ சோழப் பெருவேந்தன் இராஜ ராஜனிடம் சென்று முறையிட்டார்கள். சோழநாட்டு ஒற்றர்களோ திரு விஜய நாட்டுக்குள் வணிக வேடம் பூண்டு நுழைந்து, ஒற்றறிந்து சோழநாட்டு கடற்படை இராஜேந்திர சோழன் தலைமையில் ஒரே நாளில் தாக்கி திரு விஜய மன்னனைத் தோற்கடித்து நாட்டை வெற்றி கொண்டார்கள்.


பின்னர் நட்பு பாராட்டி மீண்டும் திருவிஜய மன்னனிடமே ஆட்சியை ஒப்படைத்தர்கள்.


நம் வணிகரும் விரும்பியவாறு சீனருடன் நேரடி வாணிகஞ் செய்தனர். பின்னர் ஒருசமயம் அரசியல் சூழல் கருதி திரு விஜய மன்னன் சோழர் உதவி நாடி ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டனர் என்பது வரலாறு.


தமிழ்க் கடலோடிகள்:
பின்னர் கோயில்களைக் கட்டியது யார் ? தமிழர் பண்பாட்டை பரப்பியது யார் எனில் புதிய கற்காலம் தொட்டே வாணிகம் செய்து வந்துள்ள தமிழ்க் கடலோடிகளே ! அவர்கள் தங்களுடன், கோயில்கட்டும் பெருந்தச்சர்கள், சிற்பிகள் என மரக்கலங்களில் அழைத்துச் சென்று தமிழ்ப் பண்பாட்டை பரப்பினார்கள் என்று பேராசிரியர் முனைவர் ச.சிங்காரவேலர் கருதுகிறார்.


பூஜாங் பள்ளத்தாக்கு : கெடா மாநிலம்

இன்று பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் பல்லவர் கால , சோழர் கால கட்டடடக் கலைச் சிறப்பை விளக்கி அகழ்வாதாரங்களையும், மேலும் பல புகைப்படங்களையும் காட்சிக்கு வைத்திருந்த மலையக அரசின் தொல்லியல் துறைக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள், நன்றிகள்.


மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தாழிகளும், மணிகளும் பல்லவர் மற்றும் சோழர் கால சிவன் , திருமால், நான்முகன் (பிரமன் ), சக்தி, பிள்ளையார் முதலிய கடவுளர் சிலைகளும், கல்வெட்டுக்களும் கட்டடச் சிதைவுகளும் அருங்காட்சியகத்தில் உள்ளன. அருங்காட்சியகத்தை அகழ்வுகளுக்கு அருகிலேயே வைத்துள்ளனர். எனவே சுற்றிலும் அகழப்பெற்றுள்ள கட்டட அடித்தளங்கள் உள்ளன.


புஜாங் அருங்காட்சியகத்தில் பிள்ளையார் :


மலையக அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த புதையல்களான கோயில்களை ஒப்பிட்டுத் தமிழ்நாட்டின் கோயிலையும், தாய்லாந்து கோயிலையும், கம்போடிய அங்கோர்வாட் கோயிலையும், வியத்நாம் நாட்டுக் கோயிலையும், இந்தோனேசிய நாட்டின் ஜாவாவில் உள்ள கோயிலையும் படங்கள் எடுத்து அந்த அருங்காட்சியகத்தே வைத்துள்ளார்கள்.

ஜாவாவில் நம் கோயில்







கடாரம் , ஜாவா, சுமத்ரா, கம்போடியா , வியத்னாம் . தாய்லாந்து ஆகிய இடங்களில் நம் கட்டடக்கலை, பண்பாடு, தமிழ் மொழி , ஊர்களுக்குத் தமிழ்ப் பெயர்கள், பொன் என்று ஒரு மங்கையின் பெயர், சக்தி போன்ற பெயர்கள் கம்போடியாவில் !

நம் பண்பாடு விளங்கும் இடங்களில் நம் தமிழ் பண்பாட்டுப் பாலம் அமைப்போம்.


பூஜாங் அருங்காட்சியகம்: நம்ம ஊர் கோயில் அமைப்பு :


வெள்ளத்தால் அழியாது, வெந்தணலில் வேகாது, கள்ளத்தால் போகாது இந்தத் தமிழரின் கோயில் கட்டடக் கலை! கோபுர அமைப்பு! இன்றும் நம் தமிழர் மட்டும் அறிந்த ஒன்றே இக் கட்டடக் கலை !

உறுதியுடன் சொல்வேன் ! அறுதியிட்டு சொல்வேன் ! சவால் விட்டும் சொல்வேன் !

தமிழ்நாட்டுக் கட்டடக்கலையின் தனித்துவம் வாய்ந்த தன்மையை வரலாற்று ஆய்வாளர்களும், ஏன் இன்றும் கூட நம்மில் பலரும் அறிந்து வைத்துள்ள செய்தியே ஆகும்.

தெற்கே கன்னியாகுமரி தொடங்கி வடவேங்கடம்வரை உள்ள கோயில் கோபுர அமைப்பும், கட்டட அமைப்பும் அதற்கு வடக்கே உள்ள கோபுர அமைப்பும் தெளிவாக வேறுபடும் நம் தமிழரின் கைவண்ணமும் இவ்வுலகம் அறிந்த ஒன்றே!

நிழற்படங்களைக் , காணொளி (வீடியோ ) காட்சிகளை எடுத்துத் தள்ளினோம் ! கடாரம் அருங்காட்சியகம் மற்றும், தமிழர் கோயில் கட்டிய இடங்கட்கும் சென்று எடுத்த படங்களே இவை !

தொடர்பு வலைத்தள முகவரி இங்கே காண்க:

http://picasaweb.google.com/108634393860469829875

இன்னும் ஒரு புதிய செய்தி பூஜாங் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி வரும் வழியில் சுங்கை பட்டானி என்னுமிடத்தில் ஆற்றங்கரையில் ஓர் அற்புதப் புதையல் கிடைத்து அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்ந்துவருகிறார்கள் .சுங்கை பட்டானி ; சுங்கை= ஆறு பட்டானி = உழவர் . நிலத்துள் புதையுண்ட கோயிலின் மேற்புற தோற்றம் வெளி வந்துள்ளது, சுவர்களின் பகுதிகளும் , செங்கற் குவியலும், கிடக்கின்றன .

பாருங்கள் ! தமிழர்களே ! உலகத்தோரே ! வரலாற்றாய் வாளர்களே ! கூறுங்கள் உலகிற்கு ! இக்கட்டடக் கலைக்குச் சொந்தக்காரன் தமிழனே என்று ! உரக்க உரைப்போம் ! மலேசிய நாட்டின், கெடா மாநிலத்தில் உள்ள புஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகம் சொல்லும் செய்தியும் இதுவே ஆகும் !

நானும் தமிழ்த் திரு. உமாசங்கர் அவர்களும்

தலை நிமிர்ந்து சொல்லுங்கள் தமிழர்களே ! உலகிற்கு இவ்வுலகிற்கு ! கடாரப் பயணத்தை முடித்து கோலாலம்பூர் அதிகாலை வந்தோம். உமாசங்கர் என்ற நண்பர் எங்களை அன்புடன் வரவேற்றுத் தங்க ஏற்பாடு செய்தார்.

Posted by தஞ்சை கோ. கண்ணன் at 11:46 PM 1 comments

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook

Links to this post

Labels: tamil-travel-history

Home

Subscribe to: Posts (Atom)

Total Pageviews

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

Awesome Inc. template. Template images by Zemdega. Powered by Blogger.

About Me

தஞ்சை கோ. கண்ணன்
எமக்குத் தொழில் படித்துக் கொண்டே இருப்பது ! எந்தையார் ஆங்கில மொழியின் ஆளுமையை, கவியாக்கம் செய்யுமளவிற்கு என் இள வயது முதல் என் தந்தை மறைந்த நாள் (7-09-1972) வரை என்னை செதுக்கி வந்தார்கள். தமிழிலும் என் தந்தையார் தேனினும் இனிய திருவாசகம் முதலாய பக்திப் பனுவல் களைப் படித்து மனனம் செய்வித்தார்கள்.வீட்டிலேயே ஆங்கிலத்தையும், தமிழையும் தந்தையார் அறிமுகப்படுத்தி னார்கள்! தமிழார்வத்தை ஊட்டி வளர்த்தனர் என் தமிழா சிரியர்கள். பள்ளிகளிலும், ஏன் கல்லூரி அளவிலும், வரலாற்று பட்ட மேற்படிப்பி லும் கூட தமிழ் நாட்டு வரலாறு மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உள்ள இழி நிலை இன்றளவும் நீடிக்கும் போக்கு மாறாமல் உள்ளது.நம் குழந்தைகளுக்கு தமிழ் அறிவு ஆங்கில வழி கல்வியினால் மழுங்கடிக்கப் பட்ட இன்றைய கால கட்டத்தில், அடுத்த தலைமுறையினரிடம் நம் தொல்குடி வரலாற்றுச் சிறப்புக்களை நம் பிள்ளைகளுக்கு, பெயரன், பெயர்த்திகளுக்கு சுவை கூடிய கதை சொல்வது போல் ஆங்கில மொழியில் சொல்லி நம் இனம், மொழி, பண்பாடு ஆகியன அவர்களைப் பரவலாகச் சென்றடையச் செய்தல் நோக்கம். இப்பணியில் முனைவர். பா.இறையரசனார் தலைமையில், வழி காட்டலில் பல மூல நூல்களை ஆய்ந்து, தமிழுணர்வுமிக்க அயல் நாட்டு அறிஞர்கள் உள்ளிட்ட பலரிடம் கலந்தாய்வு செய்து இந்தப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

View my complete profile