புத்திஜீவிகளின் “மென் பிரச்சாரம்” ஊடாக கனடிய அரசுடனான உறவைப் பலப்படுத்துகிறது சிங்களச் சமூகம்

[ திங்கட்கிழமை, 17 ஒக்ரோபர் 2011, 03:51.02 AM GMT ]

தற்போது கனடாவில் சிறீலங்கா மனிதவுரிமைகளில் முன்னேற்றம் காண வேண்டும் என எழுப்பப்படும் கோசங்களையும் அதற்காக விதிக்கப்படும் காலக்கெடுவையும் இல்லாமற் செய்ய சிங்களம் புதியதொரு வழிமுறையைக் கையாள்வதாகத் தெரியவருகிறது.

இனங்களிடையே ஒற்றுமையை மீளக் கட்டியெழுப்புதல் என்ற பணியே சிறீலங்காவை ஒரே நாடாகப் பேண உதவும் என்பதை மேற்குலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அதே துருப்புச் சீட்டை மேற்குலகிற்கெதிராகப் பயன்படுத்தும் சிங்களம் தங்களுடைய புத்திஜீவிகளை இந்த விவகாரத்தில் கனடாவில் முனைப்புடன் பயன்படுத்துகிறது.

கனடியப் பிரஜாவுரிமை பெற்ற சில சிங்கள இனத்தவர்கள் கனடிய அரசிற்கு ஆலோசனை வழங்கும் வகையிலான உயர்ந்த பதவிகளை வகிப்பதுடன், கனடியக் கட்டமைப்பின் முக்கியமான உயர் உறுப்பினரின் குடும்ப வைத்தியராக பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர் இருப்பதையும் சாதகமாகக் கொண்டே இம் மென்பிரச்சார நடவடிக்கைகளிற்கான எத்தனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கனடாவின் புகழ்பூத்த அல்பேட்டா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவுள்ள டாக்டர் இந்திரா சமரசேகரா பொதுமக்கள் பாதுகாப்பிற்கான கனடிய அரசிற்கான ஆலோசகராவுள்ளார். அதே போன்று கன்சவேட்டிக் கட்சியிலும் அல்பேட்டா மாகாணம் சார்ந்த பெரிய பொறுப்புக்களில் இவர் இருந்தார் என்று கூறப்படுகிறது.

இதேபோலக் கனடாவின் கட்டமைப்பில் காத்திரமான பங்கை வகிக்கின்ற அளவு பெரிய புத்திஜீவிகளாகவுள்ள வேறு பல சிங்கள இனத்தினரும் உள்ளனர்.

மனிதவுரிமை மற்றும் யுத்தக் குற்றவிவகாரங்களைப் பெரிதுபடுத்தினால் அது இலங்கையில் இனங்களிற்கிடையே ஒற்றுமையைக் கொண்டு வரும் முயற்சியில் பெரிய பாதிப்பைக் கொண்டு வரும் என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு பெறுவதைத் தாமதப்படுத்தும் என்பதையுமே ஆயுதமாகக் கொண்டு இப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பிரச்சாரத்தையே மேற்கொள்ளுமாறு கொழும்புப் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் சிறீலங்கா ஜனாதிபதியால் பணிக்கப்பட்டு அவரும் கனடா, அமெரிக்கத் தூதுவர்களை சந்திந்துள்ளதாக நம்பகரமாகச் தெரியவருகிறது.

இவர்கள் மூலமாக முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிக்கு ஆதரவான காரணமாக அண்மையில் கனடாப் பாராளுமன்றில் இடம்பெற்ற சனல்-4 காணொளி நிகழ்வை ஆளும் கன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரே முன்னிற்று நடத்திய போதும் ஆளும் கட்சியைச் சார்ந்த வெறும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டதையும்,

எந்த அமைச்சரோ, துணை அமைச்சரோ கலந்து கொள்ளாததையும், 308 பாராளுமன்ற உறுப்பினர்களில் மொத்தமாக 15 பேரே அந்த நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் இது 5 விழுக்காட்டிற்கும் குறைவான தொகையென்றும் சுட்டிக் காட்டும் சிங்கள இனத்தைச் சார்ந்த ஆங்கில ஊடகப் பத்தியாளர் இது பெரியதொரு மாற்றம் எனக் கொள்ளத் தேவையில்லையென்பதை அண்மையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

சுமார் ஐந்து விழுக்காடு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட தமிழர்களால் பெறமுடியாததாக சித்திரிக்கப்பட்ட சனல்-4 காணொளி நிகழ்வை காரணங்காட்டி தங்களால் கனடிய அரசியலில் இன்னமும் தாக்கம் நிகழ்த்த முடியும் என்றே பெரும்பாண்மை இனத்தவர்கள் இப் பிரச்சாரங்களில் இறங்கியுள்ளனர். இந்தப் பிரச்சாரங்களில் மாற்றுச்சிந்தையுள்ள தமிழர்களையும் இணைத்தே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இனங்களிற்கிடையேயான ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல் வேறு, யுத்தக் குற்றவிசாரணை, மனிதவுரிமை மீறல்கள் என்பவற்றைக் கண்டித்து நடந்தவைக்கு தண்டனை கொடுத்தல் வேறு என்பதை விளக்கிச் செயற்பட தேசியத்தை ஆதரிக்கும் தமிழர்கள் தங்களின் புத்திஜீவிகளை முன்னிறுத்தி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய தருணம் தற்போது கனடாவில் ஏற்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக கனடாவிலுள்ள பேராசிரியர்கள் கலாநிதி.யோசப் சந்திரகாந்தன், சேரன் உருத்திரமூர்த்தி, கனகநாயகம் செல்வநாயகம், ரஞ்சன் சிறீரஞ்சன், அமர்நாத் அமரசிங்கம் போன்றோரின் தலைமையிலான ஒரு குழுவை தமிழர்கள் சார்பான புத்திஜீவிகளாக நிலைநிறுத்த கனடியத் தமிழர் சமூகம் முழு முயற்சிகளை முன்னெடுத்து அதில் வெற்றிபெறும் நிலையிலுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.