Sat, 11 June, 2011 14:51:

மஹிந்தருக்கு வாலைக் காட்டிய மேனன்!இந்திய அதிகாரிகளுக்கு விரல்காட்டி அவமதித்த கோட்டாபய!

 


ஜெயலலிதாவுக்கு தலையைக் காட்டி மஹிந்தருக்கு வாலைக் காட்டிய மேனன்!

சனி, 11 ஜூன் 2011 18:46

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளுக்கு விரைவானதொரு தீர்வை எட்ட வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஸ அரசிற்கு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.
தமிழ் மக்களுடன் இலங்கை அரசாங்கம் விரைவாக சிறந்ததொரு அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்மட்டக்குழு இன்று பிற்பகல் அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினூடாக 13 ஆவது அரசியல்யாப்பு சீர்திருத்தத்தை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை முன்னரே வாக்குறுதியளித்திருந்தது.

ஆனால் இலங்கை அதனை செய்யத் தவறிவிட்டது என்று சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டதை இந்திய தூதுக்குழு தெரிவித்தது.
இருதரப்புக்கும் இடையிலான சந்திப்புக்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சினை குறித்து இரு நாடுகளின் மீனவர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடிய தீர்மானங்களை மேற்கொள்வார்கள் எனவும் சிவசங்கர் மேனன் மேலும் தெரிவித்துள்ளார்.
சிவசங்கர் மேனனின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் மேனனை சந்தித்த ஜெயலலிதா,
இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மற்றும் முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பாக குழப்பமான தகவல்கள் வெளியாகின்ற நிலையில்,
இது தொடர்பாக சரியான தகவல்களை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிவசங்கர் மேனனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதுடன் , அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் சரியான விதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அரசியல் ரீதியாக சிங்களவர்களுக்கு இணையான உரிமைகள் தமிழருக்கும் கிடைக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் சிவ்சங்கர் மேனனிடம் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பின்பற்றப்படாது குறித்தும் சிவசங்கர் மேனனிடம் கூறியுள்ளார்.
இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ஸவிடம் எடுத்துரைப்பதாக சிவசங்கர் மேனன் தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்திய அதிகாரிகளுக்கு விரல்காட்டி அவமதித்த கோட்டாபய!

சனி, 11 ஜூன் 2011 01:43

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஸவையும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இன்று நண்பகல் கொழும்பு வந்தடைந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ்,  பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இன்று மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஸவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது மிகவும் அவமரியாதையான முறையில் இரு நாட்டு விதிமுறைகளுக்கும் இராஜதந்திர பண்புகளுக்கு மாறாகவும் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகளை நோக்கி கைவிரல்களை நீட்டி பேசினார்.
இவர்களுடன் சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் ஏழு அதிகாரிகள் இந்தியத் தரப்பில் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் மிகவும் அடக்கமான முறையில் இராஜதந்திர பண்புகளுடன் நடந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்ஸவுடன் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க. புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் பங்குபற்றினர்.
எனினும் கோட்டாபய ராஜபக்ஸவின் கை அசைவுகளை அவதானித்த லலித் வீரதுங்க, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோர் கை கட்டி அமைதியாக அச்சத்துடன் இருந்தமையை அவதானிக்க முடிந்தது.

இது சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கு நெருக்கடி கொடுக்கின்ற அணுகு முறையாகவே கருதப்படுகிறது.
இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 30 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நீடித்துள்ளது.
எனினும் இன்றைய சந்திப்புகளின் போது கலந்துரையாடப்பட்ட முக்கிய விபரங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இந்திய ராஜதந்திர சரித்திரத்தில் இரண்டு நாட்டு உயர் தலைவர்களுடனான கலந்துலையாடலின் போது கோட்டாபய ராஜபக்ஸ மட்டுமே இந்தியாவை மிகவும் அவமரியாதைபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் இதற்கு தனது இந்தியாவிற்கு எதிரான அயல் நாடுகளுடனான உறவே காரணம் என பலராலும் ஊகிக்கப்படுகின்றது.

இதே நேரம் 1971இல் இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்கியதற்காக சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு சென்றுள்ள நிலையிலேயே  பாகிஸ்தான் நன்றி கூறியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா – பாகிஸ்தான் வர்த்தக சபையின் கூட்டத்தில் பேசிய போதே, சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சீமா இலாகி பலோச் இவ்வாறு நன்றி கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் தூதுவர் இலாகி பலோச்,

“ நாங்கள் சிறிலங்காவை நம்புகிறோம். சிறிலங்கா தனது இறைமை விடயத்தில் விட்டுக் கொடுக்காமல் இருப்பதையிட்டு பெருமை கொள்கிறோம்.

எமது பிரதேசத்தில் நிலையான அமைதி ஏற்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்கிறோம்.

காஸ்மீர் விவகாரம் ஐ.நா பிரகடனங்களின் அடிப்படையிலும், அங்குள்ள மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் அமைதியாகத் தீர்க்கப்பட வேண்டும்.

1971இல் இந்தியாவுக்கு எதிரான போரின்போது சிறிலங்கா செய்த உதவிகளை ஒருபோதும் மறக்க முடியாது.

பாகிஸ்தானில் இருந்து எம்மால் விநியோகங்கள் மற்றும் அரசியல் உதவியை வழங்க முடியாத போது- சிறிலங்கா உதவ முன்வந்தது.

தனது எரிபொருள் நிரப்பும் வதிகளை எமக்காகத் திறந்து விட்டது.

சிறிலங்கா மக்களின் அமைதியான வாழ்வுக்கு உதவ பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

1971ம் ஆண்டு போரின் போது பாகிஸ்தானிய போர் விமானங்கள் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்று கிழக்கு பாகிஸ்தானில் (இப்போதைய பங்களாதேஸ்) தாக்கதல்களை மேற்கொண்டன.

இந்தியாவுக்கு மேலாக பாகிஸ்தான் போர் விமானங்கள் பறக்க முடியாததால் தான் சிறிலங்காவை எரிபொருள் நிரப்பும் தளமாக பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்தது.

பாகிஸ்தான் விமானங்கள் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது, ஜேவிபி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து விமான நிலையத்தைப் பாதுகாக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்தியப் படையினரின் சிறிய பிரிவு ஒன்று அங்கே பாதுகாப்பு அளித்து வந்தது.

எரிபொருள் நிரப்ப பாகிஸ்தானுக்கு இடமளித்ததால் இந்திய- சிறிலங்கா உறவுகளில் கசப்பான நிலை ஏற்பட்டிருந்தது.