இந்திய உயர்மட்ட குழுவினர் தமிழ்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை : இலங்கை வரும் இந்திய பிரதமர்

ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆறுமாத கெடு விதித்துள்ள இந்தியா

கனேடிய பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றிய ராதிகா சிற்சபைஈசன்

பான் கீ மூனின் இரண்டாம் பதவிக்காலத்துக்கு இலங்கை ஆதரவு

மிருசுவில் வீதி விபத்தில் 3 மாதங்களுக்கு முன் திருமணமாகிய குடும்பப் பெண் மரணம்

செய்தி

இந்திய உயர்மட்ட குழுவினர் தமிழ்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை : இலங்கை வரும் இந்திய பிரதமர்

[ சனிக்கிழமை, 11 யூன் 2011, 09:51.43 AM GMT ]

இலங்கை சென்றுள்ள இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தப் பேச்சுவார்த்தை இலங்கை நேரப்படி இன்று சனக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு, தமிழ் மக்களின் மீள்குடியேற்றம்,  இராணுவத்தினரின் அத்துமீறிய குடியேற்றங்கள், விஹாரைகள் அமைத்தல் உட்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளின் மதிப்பீடுகளும் இதன்போது ஆராயப்பட்டன.

இந்திய உயர்மட்டக்குழுவில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அங்கம் பெற்றுள்ளனர்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழு கலந்துரையாடலில் ஈடுபட்டது.

இந்தநிலையில் இந்திய உயர்மட்டக்குழு மூன்றுக்கட்சி தமிழ் கூட்டணியையும் இன்று முற்பகல் சந்தித்தது.

புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்ரீதரன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இதன்போது வடக்கு கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவ கெடுபிடிகள் குறித்து இந்திய குழுவினரின் கவனத்துக்கு கொண்டு வந்தாக சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ஈ.பி.டி.பி என்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியக்குழுவினருடன் தொலைபேசியில் கலந்துரையாடிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியக்குழு நேற்று வெள்ளிக்கிழமை, இலங்கையின் மூவர் அடங்கிய குழுவை சந்தித்தது.

பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் ஆகியோர் இந்தக்குழுவில் அடங்கியிருந்தனர்.

எனினும் ஏற்கனவே இலங்கையின் உயர்மட்டக்குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் சகோதரரும் அமைச்சசருமான பசில் ராஜபக்ச இந்த மூவர் குழுவில் இடம்பெறவில்லை. இதற்கான காரணமும் அறிவிக்கப்படவில்லை.

பசில் ராஜபக்ச கடந்த வாரத்தில் இந்தியாவுக்கு சென்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்பியபோதும் அதற்கான வாய்பபு கிட்டாமல் இலங்கை திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை தவிர இந்திய உயர்மட்டக்குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தக்குழுவினர் இன்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்தனர். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

எனினும் இலங்கை வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டதாக சிவ் சங்கர் மேனன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தெரிவித்ததாக மாத்திரம் இலங்கையின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இந்தியா திரும்பவுள்ள அவர்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமையும் சந்திக்கவுள்ளனர்.

ஏற்கனவே இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் இந்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், ஜெயலலிதாவை சந்தித்தார்.

பின்னர் இலங்கை சென்று வந்ததும் மீண்டும் அவரை சந்திப்பதாக சிவ் சங்கர் மேனன் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.